இந்திய - பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும் இது தொடர்பாக 2003ம் ஆண்டு கையெழுத்தான உடன்பாட்டுக்கு புத்துயிர் அளிக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின், ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்களுக்கு இடையிலான சந்திப்பு 14 ஆண்டுகளுக்குப் பிறகு, வாகா எல்லையில் நேற்று நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இம்முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியத் தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் வினோத்பாட்டியாவும், பாகிஸ்தான் தரப்பில் மேஜர் ஜெனரல் ஆமீர்ரியாஸும் இதில் பங்கேற்றனர். இவர்கள் தவிர இரு தரப்பிலும் தலா ஒரு பிரிகேடியர், 3 லெப்டினன்ட்கர்னல்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். வாகா அட்டாரி எல்லையில் மக்கள் வசிக்காத இடத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
வாகா எல்லையில் இந்திய லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியாவை, பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆமீர்ரியாஸ் வரவேற்பது மற்றும் அவர்கள் சந்தித்து பேசுவது குறித்த புகைப்படங்களை பாகிஸ் தான் ராணுவம் வெளியிட்டது. பின்னர் இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் இரு நாடுகளிடையே ஏற்கெனவே கையெழுத்தான எல்லையில் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு புத்துயிரூட்ட இரு நாடுகளின் ராணுவ தலைமை இயக்குநர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் சந்திப்பு சுமுகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளவும், இது தொடர்பாக ஏற்கெனவே கையெழுத்தான போர் நிறுத்த உடன்பாட்டை கடைப்பிடிப்பது குறித்தும் விவாதித்தோம். இதில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளவும் முந்தையை ஏற்பாட்டை வலுப்படுத்தவும் முடிவு செய்தோம்.
எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் உறுதி செய்யும் வகையில், இரு நாடுகளின் பிரிகேடு கமாண்டர்கள் இடையிலான கூட்டங்கள் வரும் காலத்தில் தொடர்ந்து நடைபெறும். இரு நாடுகளின் ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்கள் இடையே ஹைட்லைன் வசதியை ஏற்படுத்தவும் முடிவு செய்தோம்.
எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பொதுமக்கள் தற்செயலாக நுழைய நேர்ந்தால், அதுகுறித்த தகவலை இரு தரப்பும் பரிமாறிக்கொள்ளவும் முடிவு செய்தோம்” என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த சந்திப்பு குறித்த முடிவு அரசியல் ரீதியில் எடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு…
1999ம் ஆண்டு கார்கில் போர் முடிவுக்கு வந்த பிறகு, இரு நாடுகளின் ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்கள் சந்தித்துப் பேசினர். அதன் பிறகு 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையி லான எல்லை கட்டுப்பாடு கோடு நெடுகிலும் போர் நிறுத்தத்தை கண்காணிக்க, 1949ல் ஐ.நா. பாது காப்பு சபை தீர்மானம் மூலம், ராணுவ செயல்பாடுகளுக்கான ஐ.நா. பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டனர். தற்போது இவர்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து, இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் வலியுறுத்தும் என்று அந்நாட்டு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய வீரர்கள் 5 பேர், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்டனர். இதையடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது. போர் நிறுத்த உடன்பாட்டை மீறி தாக்குதல் நடத்துவதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டின.
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் நிகழ்ச்சிகளுக்கு இடையில் சந்தித்துப் பேசினர். அப்போது இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளின் ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்கள் சந்தித்துப் பேசுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பில் வெளியுறவுத் துறை அதிகாரிகளையும் பங்கேற்கச் செய்யலாம் என பாகிஸ்தான் பரிந்துரை செய்தது. ஆனால் இந்தியா இதை நிராகரித்து விட்டது. என்றாலும் தற்சமயம் ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் இக்கூட்டம் நடைபெற்றாலும், எங்கள் பரிந்துரையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை கடந்த வாரம் அறிவித்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago