கொங்கன் பகுதி வளர்ச்சி புறக்கணிப்பு: காங்கிரஸ் கூட்டணி அரசு மீது மோடி குற்றச்சாட்டு

வளர்ச்சியின் நுழைவாயிலான கொங்கன் பகுதியை காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு புறக்கணித்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் வரும் புதன்கிழமை நடை பெறுகிறது. பிரச்சார இறுதி நாளான நேற்று இம்மாநிலத்தின் ரத்தினகிரி மாவட்டத்தில் பேசும் போது, “கொங்கன் பகுதி இயற்கை வளங்கள் நிறைந்தது. இங்குள்ள கடல், மகாராஷ்டிரம் மட்டுமின்றி நாட்டுக்கே வளர்ச்சிக்கான நுழைவாயில்.

இப்பகுதி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை பெருமளவில் கொண்டுள்ளது. ஆனால் இப்பகுதியை காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக புறக்கணித்து விட்டது. வரும் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்குமானால் மகாராஷ்டிர மக்களின் எதிர்பார்ப்புகள் நிறை வேற்றப்படும். எங்கள் அரசு சிறந்த நிர்வாகத்தை அளிக்கும்.

கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் அரசு கஜானாவை மட்டும் காலி செய்யவில்லை. இரண்டு தலைமுறைகளை சீரழித்துள்ளனர்” என்றார்.

முன்னதாக பல்கார் மாவட்டத் தில் மோடி பேசும்போது, “பல்கார் மாவட்ட மீனவர்களுக்கும் குஜராத்துக்கும் நல்ல உறவு உள்ளது. நமது மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நான் பிரதமர் ஆனவுடன் முதல் நடவடிக்கையாக இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமருடன் பேசினேன். இதையடுத்து 10 ஆண்டுகளில் முதல் முறையாக 50 படகுகளையும் 200 மீனவர் களையும் பாகிஸ்தான் அரசு விடுவித்தது.

இதேபோல் இராக் உள்நாட்டு பிரச்சினையில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட கேரள செலிவியர்கள் நமது தளராத முயற்சியால் கண்ணியத்துடன் விடுவிக்கப்பட்டனர்.

எனது 60 நாள் ஆட்சியை பற்றி கேள்வி எழுப்புவோர், வெளி நாட்டுச் சிறைகளில் வாடும், நமது ஏழைக் குடும்பத்து பெண்கள், இளைஞர்கள் மற்றும் மீனவர்கள் பற்றி சிந்தித்ததில்லை.

2022-ல் இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அப்போது நாட்டில் சொந்த வீடு இல்லாத குடும்பம் ஒன்றுகூட இருக்கக் கூடாது. இதுவே எனது கனவு” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE