படேலை வகுப்புவாதி என்றார் நேரு: அத்வானி தகவல்
அந்த நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தொடர்பாக தனது வலைப்பூவில் அத்வானி கூறியுள்ளதாவது: "நாடு சுதந்திரமடைந்தபோது ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆட்சி செய்த நிஜாம், இந்தியாவுடன் இணைய மறுத்து வந்தார். அப்போது, அவரது ஆதரவாக செயல்பட்ட தீவிரவாதப் படையினரான ரஸாகர்கள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், அங்கு ராணுவத்தை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படேல் வலியுறுத்தினார். இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நேருவுக்கும் படேலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்த நேரு, படலை வகுப்புவாதம் செய்பவர் என விமர்சித்தார். அதோடு, படேலின் யோசனையை ஏற்றுக் கொள்ள நேரு மறுத்துவிட்டார். ஹைதராபாத் மாகாணத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நேரு முயன்றார். ஆனால், அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி, ஹைதராபாத்துக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற படேலின் கருத்தை ஆமோதித்தார். இது தொடர்பாக பேச நேருவையும் படேலையும் தனது மாளிகைக்கு அழைத்தார்.
அப்போது நிஜாமின் ஆதரவுப் படையினர் மேற்கொள்ளும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்து பிரிட்டிஷ் ஹை கமிஷனர் எழுதிய கடிதத்தை நேருவிடம் ராஜாஜி அளித்தார். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, அந்தக் கடிதத்தை ராஜாஜியிடம் அளித்தது, படேலுக்கு நெருக்கமான அதிகாரி வி.பி.மேனன்.
அந்த கடிதத்தில், 70 வயது கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பல பெண்களை ரஸாகர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது பலரை படுகொலை செய்தது குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, ஹைதராபாத்துக்கு ராணுவத்தை அனுப்ப நேரு ஒப்புக் கொண்டார். அதன் பின், ராணுவம் சென்று ஹைதராபாத்தை மீட்டது. பின்னர், முறைப்படி இந்திய யூனியனில் ஹைதராபாத் இணைந்தது" என்று அத்வானி தெரிவித்துள்ளார்.
படேலை இந்துத்துவா கொள்கை யில் உடன்பாடு உள்ளவர் என்ற தோற்றத்தை பாஜக ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே, குஜராத்தில் படேலுக்கு உலகிலேயே உயரமான இரும்புச் சிலை அமைக்க முதல்வர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்துள்ளார். தொடர்ந்து படேலை பாராட்டி அவர் பேசி வருகிறார். இப்போது அத்வானியும், அதே போன்ற கருத்தை வெளியிடத் தொடங்கியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.