2017-க்குள் ஒரு லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி

12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டம், லாரா கிராமத்தில் 4,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் பேசியதாவது:

விவசாயம், சேவைத்துறை எதுவாக இருந்தாலும் மின்சாரம் இன்றி ஓர் அணுவும் அசையாது. இதை கருத்தில்கொண்டு நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுத்துறை நிறுவனங்களில் மின் உற்பத்திச் செலவைக் குறைக்க இப்போது புதிய தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாட்டின் மின் உற்பத்தித் திறன் 55 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது. வரும் 2017-ம் ஆண்டில் 12-வது ஐந்தாண்டுத் திட்டம் நிறைவடையும்போது ஒரு லட்சத்து 18 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் 13-வது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, "சூப்பர் கிரிட்டிக்கல்" தொழில்நுட்பம் அடிப்படையிலான மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE