ஒடிசா படகு விபத்து: 24 பேர் பலி; காணாமல் போன 7 பேரை தேடும் பணி தீவிரம்- ராகுல் காந்தி ஆறுதல்

By செய்திப்பிரிவு

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஹிராகுட் அணையில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 7 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து மாநில சிறப்பு துயர் தணிப்புப் பணிகள் ஆணையர் பி.கே. மொஹபத்ரா கூறுகையில், "சம்பல்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த படகு விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி திங்கள்கிழமையும் தொடர்ந்து நடந்தது. இதில் 13 பேரின் சடலம் மீட்கப்பட்டது. இதன்மூலம் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. நீரில் மூழ்கிய படகின் இருப்பிடத்தையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்" என்றார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1.5 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. சம்பல்பூர் வருவாய் மண்டல ஆணையர் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து ஒடிசா சட்டசபையில் அமைச்சர் கல்பதரு தாஸ் கூறியதாவது:

லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்த 114 பேர் ஹிராகுட் அணைக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் படகில் தில்லா மலைப் பகுதிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 பேரையும் படகில் ஏற்றியுள்ளனர்.

இவ்வளவு பேர் பயணம் செய்ய முடியாது என படகு ஓட்டுநர் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. பாதி தூரம் வந்ததும் படகு திடீரென நின்றுவிட்டது. இதனால் படகு கவிழப் போகிறது என பீதியடைந்தனர். இதையடுத்து, அவர்களை மீட்பதற்காக மற்றொரு படகு அங்கு விரைந்தது. அதற்குள் பெரும்பாலானவர்கள் தண்ணீரில் குதித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மீட்புக் குழுவினர், சிலரை காப்பாற்றி கரை சேர்த்தனர். 11 பேரை பிணமாக மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திங்கள்கிழமையும் மீட்புப் பணி தொடர்கிறது என்றார்.

முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவின் பேரில், வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை அமைச்சர் எஸ்.என். பட்ரோ மற்றும் நிதியமைச்சர் பிரசன்ன ஆச்சார்யா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை கவனித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE