சுப்ரதா ராய் ஜாமீனுக்காக ரூ.10,000 கோடி செலுத்த இயலாது: சஹாரா குழுமம்

சுப்ரதா ராயை ஜாமீனில் விடுவிப்பதற்கான ரூ.10,000 கோடியை செலுத்த இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் சஹாரா குழுமம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் மற்றும் அதன் 2 இயக்குநர்களை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க ஒப்புக் கொண்ட உச்ச நீதிமன்றம், ரூ.5 ஆயிரம் கோடியை நீதிமன்றத்தில் செலுத்துவதுடன், மேலும் ரூ.5 ஆயிரம் கோடியை பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜே.எஸ்.கெஹர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சஹாரா குழுமம் சார்பில், சுப்ரதா ராயின் வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், 'சுப்ரதா ராயை விடுவிப்பதற்கான ரூ.10,000 கோடியை உடனே செலுத்த இயலாது. எங்களால் ரூ.2,500 கோடியை மட்டுமே அடுத்த 72 மணி நேரத்தில் செலுத்த முடியும். முதலீட்டாளர்களின் மொத்த தொகையான ரூ.18,000 கோடியை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் வங்கியில் தவணை முறையில் செலுத்திவிடுவோம்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக, முதலீட்டாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக நிதி திரட்டியது தொடர்பான புகாரில், ரூ.20 ஆயிரம் கோடியை செபியிடம் வழங்குமாறு சஹாரா குழுமத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை செயல்படுத்தாததால் அந்தக் குழுமம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்து வந்ததால் சுப்ரதா ராயை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சுப்ரதா ராய் மற்றும் இயக்குநர்கள் உட்பட 3 பேர் கடந்த மாதம் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE