முடிவுக்கு வந்தது முடக்கம்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நிறைவு

By பாரதி ஆனந்த்

கடந்த ஜூலை 21-ல் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முக்கிய அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடங்கியது. இரு அவைகளும் இன்று (வியாழக்கிழமை) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றதால், அவை முடக்கங்களும் தானாக முடிவுக்கு வந்தன.

ஜூலை 21 முதல் இன்று வரை:

முதல் நாள் தொடங்கி இன்று (வியாழக்கிழமை) வரை, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரும், வியாபம் ஊழல் விவகாரத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் முக்கிய அலுவல் எதுவும் நடைபெறவில்லை.

காங்கிரஸ் அமளிக்கு இடையிடையே தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி உள்ளிட்ட கட்சியினரும் மாநிலப் பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டன.

ராகுல் நிபந்தனை:

இதற்கு முந்தைய கூட்டத்தொடர்களில் காட்டாத ஆவேசத்தை எல்லாம் காட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அரசியல் விமர்சகர்களின் மைய ஈர்ப்பாக இருந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

மக்களவையில் பேசிய ராகுல் காந்தி| படம்: பிடிஐ

ஓவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்குகின்றனர், நாட்டின் வளர்ச்சியை தடுக்கின்றனர் என்றெல்லாம் விமரசனங்கள் எழுந்த போதெல்லாம், "லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் ஊழல் முறைகேட்டில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். ராஜினாமா இல்லை என்றால் விவாதம் இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் எங்களை சமாதானப்படுத்தப் பார்க்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தை நடத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது" என ராகுல் காந்தி அரசுக்கு நிபந்தனையை முன்வைத்தார்.

எடுபடாத சுஷ்மா விளக்கம்:

இதற்கிடையில் "போர்ச்சுக்கல் செல்வதற்கான பயண ஆவணங்களை வழங்கும்படி நான் பிரிட்டன் அரசுக்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. பரிந்துரையும் செய்யவில்லை. அந்த நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதனால் இந்திய - பிரிட்டன் உறவு பாதிக்காது என்றுதான் நான் கூறினேன். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு இந்தியப் பெண்ணுக்கு உதவினேன். அது மனிதாபிமான அடிப்படையிலான உதவியே. அந்த மனிதாபிமானம் தவறென்றால் என் குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். என் இடத்தில் சோனியா காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்" என மாநிலங்களவையிலும், மக்களவையில் மிக உருக்கமாக பேசினார் சுஷ்மா ஸ்வராஜ்.

மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ்| படம்: பிடிஐ

ஆனால், சுஷ்மாவின் விளக்கம் எடுபடவில்லை. "மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவியை ஏன் சுஷ்மா ரகசியமாக செய்தார்" எனக் கேள்வி எழுப்பினார் ராகுல். மேலும், சுஷ்மாவின் விளக்கம் அர்த்தமற்றது என்றும் விமர்சித்தார்.

பாஜக பிடிவாதம்:

எத்தனை அமளி எழுந்தாலும், பாஜக தனது நிலையில் இருந்து சற்றும் விலகவில்லை. அனைத்து பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருக்கிறோம், ஆனால் எங்கள் அமைச்சர்கள் குற்றமற்றவர்கள் அவர்கள் ராஜினாமா செய்வது என்பதற்கே இடமில்லை என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பல்வேறு தருணங்களில் உறுதிபடுத்தினார்.

இடைநீக்கம்:

மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்திய தாகக் கூறி, மொத்தம் உள்ள 44 காங்கிரஸ் எம்பிக்களில் 25 பேரை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

இடைநீக்கத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் | படம்: வி.சுதர்சன்.

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப் பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி எம்பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.

காரசார விவாதம்:

ஐந்து நாள் இடைநீக்கத்துக்குப் பிறகு அவையில் காங்கிரஸ் அமைதி காக்கவில்லை. லலித் மோடி விவகாரத்தில் மக்களவையில் நேற்று (புதன் கிழமை) பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

கருப்புப் பண விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பி. ஒருவர் தன் மீது குற்றச்சாட்டை வைத்ததால் ஆவேச மடைந்த சோனியா, வழக்கத்துக்கு மாறாக அவைக்கு நடுவே வந்து அமளியில் ஈடுபட்டார்.

அவையின் மையப் பகுதிக்கு வந்த சோனியா காந்தி| படம்: பிடிஐ

லலித் மோடி விவகாரத்தில் தன்மீது குற்றம்சாட்டிய ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், குவாட் ரோச்சி, ஆண்டர்சன் விவகாரங் களை முன்வைத்து சுஷ்மா ஸ்வராஜ் ஆக்ரோஷமாக பேசினார். இதனால், மக்களவையில் நேற்று சூடுபறந்தது.

லலித் மோடி விவகாரத்தில், ராஜினாமா செய்ய வலியுறுத்தும் காங்கிரஸை நேற்று (புதன் கிழமை) மக்களவையில் கேள்விகளால் துளைத்தெடுத்தார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

குவாட்ரோச்சியை தப்பவிடுவதற்கு எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்றும், போபால் விஷவாயுக் கசிவு குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை உங்கள் தந்தை ஏன் தப்ப விட்டார் என்பதையும் உங்கள் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என ராகுல் காந்தியை நோக்கி ஆவேசமாக கேட்டார் அவர்.

வெளிநடப்பு:

இந்நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உறுப்பினர்களை அமைத்திப் படுத்த முயன்றார். மாநிலப் பிரச்சினைகளை இங்கு எழுப்புவது சரியாகாது என்றார். இருப்பினும் உறுப்பினர்கள் அமைதி காக்கவில்லை. அவையில் இருந்து காங்கிராஸ் உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு:

பின்னர் பேசிய சபாநாயகர், மக்களவையை சுமுகமாக நடத்தும் கடைசி முயற்சியும் பலனளிக்காததால் வேறு வழியின்றி மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைக்கிறேன் என்றார். இதேபோல் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜிஎஸ்டி மசோதா நிறைவேறவில்லை:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி மசோதா) நிறைவேற்றப்படவில்லை. முன்னதாக, ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்காகவே நாடாளுமன்ற அலுவல்களுக்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போடுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

அருண் ஜேட்லி| படம்: பிடிஐ

மொத்தத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அளவுக்கு அதிகமான அமளி, அவை நடுவே கூச்சல், பதாகைகளுடன் கோஷம், அவை புறக்கணிப்பு, ஒத்திவைப்பு, வெளிநடப்பு, உறுப்பினர்கள் இடைநீக்கம், அதை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் என நடந்து முடிந்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்