போலி மத்திய அமைச்சருக்கு பாதுகாப்பு: குற்றவாளியிடம் ஏமாந்த உ.பி. போலீஸார்

By செய்திப்பிரிவு

மத்திய அமைச்சரைப் போல் நாடகமாடிய ஒரு கிரிமினலிடம் ஏமாந்த உத்தரப் பிரதேச மாநில போலீஸார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். பிறகு அவர் மீது உள்ளூர் பாஜகவினர் புகார் செய்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

டெல்லிக்கு அருகே சுமார் 80 கி.மீ தொலையிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளது மீரட் நகரம். கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியிலிருந்து ரயில் மூலம் மீரட் நகருக்கு சென்றுள்ளார் தன்ஜீம் அப்பாஸ். அவர், அங்கிருந்த போலீஸாரிடம் தான் மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயர் கல்வி பிரிவின் தலைவர் எனவும், தமது பதவி மத்திய இணை அமைச்சருக்கு நிகரானது எனவும் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் போலீஸார் அப்பாஸுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

பிறகு அவர்களிடம் “ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன்” எனக் கூறி அரசு வாகனத்தில் போலீஸாரின் பாது காப்புடன் கிளம்பி இருக்கிறார் அப்பாஸ். இதுகுறித்து மீரட் பாஜக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பாஸை மடக்கி மாலை போட முயன்றவர்களுக்கு அதிர்ச்சி. காரணம், அவர் அதிகாரி அல்ல என்பதும், போலி மது கடத்தல் வழக்கில் சிக்கியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் மீரட் மாவட்ட போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர் கூறும்போது, “ஞாயிற்றுக்கிழமை அப்பாஸ் வருகை பற்றிய தகவல் எங்களுக்கு டெல்லியிலிருந்து ஃபேக்ஸ் மூலம் வந்தது. இதை நம்பிதான் அவருக்கு பாதுகாப்பு கொடுத்தோம். அதன் பிறகுதான் அவரே டெல்லியிலிருந்து ஃபேக்ஸ் அனுப்பி விட்டு வந்துள் ளார் என்பதும் அவர் போலியான அமைச்சர் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவருக்கு அளித்த பாதுகாப்பை விலக்கிக் கொண் டோம். அவர் மீது நகர பாஜகவின் சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் குன்வார் பாஸித் அலி கொடுத்த புகாரின் அடிப்டையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

இதற்கிடையே, அப்பாஸுக்கு பாதுகாப்பு அளித்த போலீஸார் மீது விசாரணை நடத்த வேண்டும் என உபி மாநில பாஜக தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பாய் கோரிக்கை வைத்துள்ளார்.

பலாவாதா காவல் நிலையத்துக் குட்பட்ட பகுதியைச் சேர்ந்த அப்பாஸ், ரூ.25 லட்சம் மதிப் பிலான போலி மது கடத்தல் வழக்கில் கடந்த ஜூன் 18-ல் கைது செய்யப் பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE