பாக். தாலிபன் தலைவர் ஹகிமுல்லா மெசூத் கொல்லப்பட்டார்
பாகிஸ்தானின் தண்டே தர்பா கேல் என்ற இடத்தில், அமெரிக்கப் படையினர் இரண்டு ஏவுகணைகள் மூலம் வெள்ளிக்கிழமை தாக்கியதில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், இந்தச் செய்தியை இன்னும் உறுதி செய்யவில்லை என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடக்கு வாஸிரிஸ்தானின் தண்டே தர்பாகேல் பகுதியில் தொழுகைக்காக புறப்பட்டபோது, மெசூத் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், அவரது நெருங்கிய உதவியாளர் அப்துல்லா பாஹர் மெசூத் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்; இருவர் காயம் அடைந்தனர் என்று தனது உயர் மட்ட அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு தகவல் தெரிவித்ததாக, பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிரானது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பைசுல்லா மேசூத் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, கடந்த 2009-ல் பாகிஸ்தான் தாலிபன் தலைவரான மெசூத், மிகவும் முக்கியத் தீவிரவாதியாகக் கருதப்பட்டவர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில், பாகிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக கிடைத்த தகவலின்படி, தமது இயக்கத்தின் தலைவர் ஹகிமுல்லா மெசூத் இறந்துவிட்டதாக, பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தாலிபனைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.