அதிருப்தி எம்எல்ஏ பின்னியை அதிரடியாக நீக்கியது ஆம் ஆத்மி
இது தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முடிவின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து வினோத் குமார் பின்னி நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் எதிராக பொய்யான கருத்துகளை பகிரங்கமாக வெளியிட்டதாலும், கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காகவும் பின்னி நீக்கப்பட்டுவதாக ஆம் ஆத்மி குறிப்பிட்டுள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தகவலை, எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னிக்கும் ஆம் ஆத்மி கட்சி முறைப்படி அனுப்பியுள்ளது.
முன்னதாக, டெல்லியின் லக்ஷ்மி நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினோத் குமார் பின்னியால் ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி பூசல் எழுந்தது. அரவிந்த் கேஜ்ரிவால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று இவர் கடுமையாக சாடினார்.
மக்களை தமது கட்சி ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை 'ஒரு சர்வாதிகாரி' என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
மேலும், ஜனவரி 27-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், தாம் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.
பின்னியின் நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் பாஜக இருப்பதாக, ஆம் ஆத்மி குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.