5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

By ஆர்.முத்துக்குமார்

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது. அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகை நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக 312 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாதிக்கு 47 இடங்களும் காங்கிரஸுக்கு 7 இடங்களும் கிடைத்தன. பகுஜன் சமாஜ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

பஞ்சாபில் 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. அகாலிதளம் 15, பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றன. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளைக் கைப்பற்றியது.

கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 3, கோவா பார்வர்டு கட்சி 3, சுயேச்சைகள் 3, தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் 28 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைத்தன பெரும்பான்மையை நிரூபிக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அங்கு ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

உத்தராகண்டில் பாஜக 57 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

உத்தரப் பிரதேசம்:

கட்சிகள்

பாஜக

எஸ்.பி.-காங்.,கூட்டணி

பி.எஸ்.பி

மற்றவை

மொத்தம் 403 தொகுதிகள்

312

54

19

5



பஞ்சாப்:

கட்சிகள்

காங்கிரஸ்

ஆம் ஆத்மி

அகாலி தளம்- பாஜக கூட்டணி

மொத்தம் 117 தொகுதிகள்

77

20

18



கோவா:

கட்சிகள்

காங்கிரஸ்

பாஜக

ஆம் ஆத்மி / மற்றவை

மொத்தம் 40 தொகுதிகள்

17

13

0 / 8



மணிப்பூர்:

கட்சிகள்

காங்கிரஸ்

பாஜக

இடது சாரிகள்

மொத்தம் 60 தொகுதிகள்

28

21

1



உத்தராகண்ட்:

கட்சிகள்

பாஜக

காங்கிரஸ்

பிஎஸ்பி / மற்றவை

மொத்தம் 70 தொகுதிகள்

57

11

0 / 2

நிகழ்நேரப் பதிவு நிறைவு

9.30 PM: உத்தரப் பிரதேச தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறினார். அதன் முழு விவரம்: >ராகுல் பதவி விலகும் பேச்சுக்கு இடமில்லை: திக்விஜய் சிங் கருத்து

9.10 PM: மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் பதில்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த மோசடியும் செய்ய முடியாது. வாக்குச்சீட்டு மூலம் மறுதேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

9.05 PM: உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு 39.7% வாக்குகள்

உ.பி. தேர்தலில் சட்டப்பேரவைத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு 39.7 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜுக்கு தலா 22 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் 6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

8:50 PM: கோவா முதல்வர் தோல்வி

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் சோப்டேவிடம் தோல்வியடைந்தார்.

8.40 PM: அரசியலுக்கு முழுக்கு போட இரோம் சர்மிளா முடிவு

மணிப்பூரில் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்ட சமூக ஆர்வலரும், இரும்பு பெண்மணியுமான இரோம் சர்மிளா படுதோல்வி அடைந்தார். அவருக்கு மொத்தம் 90 வாக்குகளே கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசியலுக்கு முழுக்கு போட அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

8.10 PM: உத்தரப் பிரதேசத்தில் மக்களை மிரட்டி பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றே கருதுகிறேன். கடந்த 5 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி நடத்த வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். அதன் முழு விவரம்: >எதிர்காலத்திலும் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: அகிலேஷ்

7.45 PM: உத்தராகண்ட் மாநில முதல்வர் ஹரிஷ் ராவத், தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.

7.15 PM: சமாஜ்வாதி கட்சியின் உட்பூசலில் ஓரங்கட்டப்பட்ட முக்கிய தலைவரான சிவ்பால் யாதவ் மோடி அலையின் வீச்சுக்கு இடையிலும் வெற்றி பெற்றுள்ளார்.

6.50 PM: உ.பி.யில் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வராக முன்னிறுத்தப்பட்டவர்கள் எவரும் போட்டியிடவில்லை. இப்பதவிக்கு வெற்றி பெற்ற கட்சியான பாரதிய ஜனதாவும் எவரையும் முன்னிறுத்தவில்லை. அதன் முழு விவரம்: >உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக முன்னிறுத்தப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை

6.15 PM: பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் தனது வெற்றிக்கு ராகுல் காந்தி, கேப்டன் அமரீந்தர் சிங், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார் நவ்ஜோத் சிங் சித்து .. முழு விவரம்> > ஆம் ஆத்மி பஞ்சாபில் தோல்வியடைந்தது ஏன்?: நவ்ஜோத் சிங் சித்து விளக்கம்

5.55PM: ப.சிதம்பரம் கருத்து: நாடு முழுதும் ஆதரவு உள்ள ஆதிக்கத் தலைவர் மோடி என்பதை தேர்தல் முடிவுகள் நிறுவியுள்ளன. இந்த வெற்றிகளை அடுத்து மாநிலங்களவையிலும் பாஜக பெரும்பான்மை பெறும்.

5.45PM: மோடி அலையிலும் வெற்றி பெற்ற சமாஜ்வாதி மூத்த தலைவர் ஷிவ்பால் யாதவ்! ஜஸ்வந்த் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மணிஷ் யாதவ் பாத்ரே என்பவரை சுமார் 52,616 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

5.30PM: ராகுல் வாழ்த்து ட்வீட்டிற்கு பிரதமர் மோடி நன்றி! உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிக்க, அதற்குப் பதில் அளிக்கும் ட்வீட்டில் பிரதமர், “நன்றி, நெடுநாள் வாழ்க ஜனநாயகம்” என்று கூறியுள்ளார்.

5.15PM: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பாஜக, ஐந்தில் 4 மாநிலங்களில் ஆட்சியமைக்கும் என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளார்... அதன் முழு விவரம்> > ஐந்தில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும்: அமித் ஷா உறுதி

( உ.பி. தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பாஜக தொண்டர்கள் | படம்: ராஜீவ் பட்.)

4.15PM: உ.பி.: நவ்தன்வா தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் அமன்மானி திரிபாதி, சமாஜ்வாதி வேட்பாளர் கன்வர் கவுஷல் கிஷோர் சிங் என்கிற முன்னா சிங்கை 32,478 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

3.50 PM: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதேவேளையில்,, தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும் மம்தா கேட்டுக் கொண்டுள்ளார். >| தேர்தல் தோல்வியால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: மம்தா |>

3.22PM: பஞ்சாபில் காங்கிரஸ் பெரும்பான்மை: பஞ்சாப் சட்டப்பேரவையின் 117 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் வெற்றி பெற்று 18 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

2.00PM உ.பி: நொய்டா தொகுதியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை, பங்கஜ் சிங் 99.530 வாக்குகள் பெற, சமாஜ்வாதி வேட்பாளர் சுனில் சவுத்ரி 32,623 வாக்குகள் பெற்றுள்ளார்.

1.50Pm: மாயாவதி: “உ.பி.தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிக்கிறது. மின்னணு வாக்கு எந்திரம் பாஜக வாக்குகளைத் தவிர வேறு எதையும் அங்கீகரிக்கவில்லை போல் தோன்றுகிறது” >| உ.பி.வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக; மீண்டும் தேர்தல் நடத்துக: மாயாவதி ஆவேசம் |

1.45PM உ.பி.: அலகாபாத்தில் உள்ள 12 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 8 தொகுதிகளில் நல்ல முன்னிலை பெற்றுள்ளது

12.50PM: பாஜக கொள்கைக்கு கிடைத்த வெற்றி: அமித் ஷா! பிரதமர் நரேந்திர மோடியின் ஏழைகள் ஆதரவு மற்றும் வளர்ச்சிக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று உ.பி.உத்தராகண்ட் வெற்றிகள் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அமித் ஷா கூறியுள்ளார். > | ஊழலற்ற ஆட்சிக்கு கிடைத்த வெற்றி: அமித் ஷா பெருமிதம் |

12.48PM: உ.பி.யில் பாஜக-வுக்கு 43.87% வாக்குகள் கிடைத்துள்ளது. சமாஜ்வாதிக்கு 29%, பகுஜன் சமாஜுக்கு 21%

12.45PM:ராஜ்நாத் சிங்: "இது மிகப்பெரிய வெற்றி, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசத்தில் பாஜக புதிய உச்சத்தை தொட்டுள்ளது, இந்த வெற்றி நாட்டின் அரசியல் சித்திரத்தையே மாற்றி விட்டது"

12.40PM: உத்தராகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத், ஹரித்வார் (ஊரக) தொகுதியில் பாஜக வேட்பாளர் யதீஷ்வரானந்த் என்பவரிடம் தோல்வி அடைந்தார்.

12.35PM: அகாலிதளத்தின் அராஜகத்துக்கு ஏற்பட்ட தோல்வி: நவ்ஜோத் சித்து !

பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி முகம் குறித்து முன்னாள் பாஜக தலைவரான நவ்ஜோத் சிங் சித்து கூறும்போது, “இது காங்கிரஸின் புத்துயிர்ப்பு, இந்த தொடக்கத்திலிருந்து மேலும் பலம் பெறுவோம், அகாலிதளத்தின் அராஜகத்தினால் அக்கட்சி படுதோல்வி கண்டுள்ளது” என்றார்.

12.30 PM: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி செய்த இரண்டரை வருடகால ஆட்சியின் தாக்கம் முடிவுகளில் தெரிந்துள்ளதாக பாஜகவின் எம்பியான யோகி ஆதித்யநாத் கருத்து கூறியுள்ளார். > | மத்தியில் மோடியின் நல்லாட்சியின் பலனே உ.பி. வெற்றி: யோகி ஆதித்யநாத் கருத்து|

12.10 PM: மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இரோம் ஷர்மிளா தோல்வி அடைந்தார். > | மணிப்பூர் முதல்வரிடம் இரோம் ஷர்மிளா தோல்வி |

11.40AM: கோவா: முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர், மாந்த்ரெம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் சோப்தேயிடம் தோல்வி அடைந்தார்.

11.30AM: உத்தரப் பிரதேச தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியை குற்றம் சொல்ல வேண்டாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷக் மனு சிங்வி கூறியுள்ளார். > | உ.பி தேர்தல் தோல்விக்கு ராகுலை குற்றம் சொல்ல வேண்டாம்: அபிஷேக் மனு சிங்வி |

11.05AM: பசு இறைச்சி வைத்திருந்ததாக இக்லக் என்பவர் கொல்லப்பட்ட தாத்ரி தொகுதியில் பாஜக வேட்பாளர் தேஜ்பால் சிங் நாகர் பகுஜன் வேட்பாளரைக் காட்டிலும் 8147 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். > | மோடி அலையே காரணம்: உ.பி. பாஜக தலைவர்கள் உற்சாக கோஷம் |

10.45AM: உ.பி: தோல்வி எதிரொலியால் வாரணாசியில் அர்தாலி பஜாரில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. மோடியின் சொந்தத் தொகுதியான இங்கு அவரது 3 நாள் கடுமையான பிரச்சாரத்தை எதிர்த்து அகிலேஷ்-ராகுல் கூட்டணியும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக வாரணாசி பாஜக அலுவலகத்தில் ‘ஹர் ஹர் மோடி, ஜெய் ஸ்ரீராம் என்று பாஜக தொண்டர்கள் வெற்றி முழக்கமிட்டு வருகின்றனர்.

10.34AM: டெல்லியில் பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் கோலாகலம் துவங்கி விட்டது. உபி, உத்தராகண்டில் பாஜகவிற்கு ஆட்சி அமைக்கும் அளவிலான முன்னிலை கிடைத்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு: > | டெல்லி பாஜக அலுவலகத்தில் கோலாகலம்: உபி, உத்தராகண்டில் வெற்றிமுகம் பெற்றதால் உற்சாகம் |

10.30AM: உ.பி.யில் ராம்நகர் மற்றும் அயோத்தியா தொகுதிகளில் பாஜக முன்னிலை

10:20 AM: பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் முன்னிலை

10.10 AM: கோவா முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் காங்கிரஸ் வேட்பாளரை விட 1000 வாக்குகள் பின்னிலை.

10.05.AM: உ.பி. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் நொய்டா தொகுதியில் முன்னிலை

10.02 AM: உ.பி.: சமாஜ்வாதி தலைவர் ஷிவ்பால் யாதவ் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மணிஷ் யாதவ்வை காட்டிலும் 5,742 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வின் வெற்றி மாநிலங்களவையில் அதன் வலுவைக் கூட்டும், மாநிலங்களவையில் தங்கள் எண்ணிக்கை மூலம் காங்கிரஸ் கட்சி பாஜக-வின் பல மசோதாக்களுக்கு சிக்கல்களை எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

முசாபர் நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் ரானா ஷாம்லி தொகுதியில் 2,602 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா யாதவ் பாஜக வேட்பாளர் ரிதா ஜோஷியிடம் பின்னடைவு.



3 அடுக்கு பாதுகாப்பு:

5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 20,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 70 தொகுதிகளை கொண்ட உத்தராகண்டில் 15 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்