பாஜக ஆட்சிக்கு வந்தால் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா, குடியரசு தினத்தன்று 'சிறப்பு சாதனையாளர்' என வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், 'பாரத ரத்னா விருதுக்காக நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை பரீசீலனை செய்ய மத்திய அரசு மறுக்கிறது.
இந்த விவகாரத்தை, அந்த தலைவர் உருவாக்கிய மாநிலத்தில் இருந்து எழுப்புகிறேன். சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வழங்கியதை மதிக்கிறேன். ஆனால், வாஜ்பாய்க்கு அந்த விருதைத் தர மறுப்பது ஏன்" என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், 'அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வாஜ்பாய்க்கு நிச்சயம் பாரத ரத்னா விருது வழங்கப்படும்" என தெரிவித்தார். இந்த விருது பெருந்தலைவர்களுக்கு தாமதமாக வழங்கப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
'வல்லபாய் பட்டேல் ஒரு தேசிய தலைவர். அவருக்கு 41 வருடங்களுக்கு பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது, மௌலானா அபுல் கலாம் ஆசாத்திற்கும் மிக தாமதமாகவே வழங்கப்பட்டது" என்ற கூறிய அவர், இந்த விருது விஷயத்திலும் காங்கிரஸ் குடும்பத்தினரின் ஆலோசனைப்படியே அரசு முடிவு எடுத்துள்ளது என புகார் கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ராஜீவ் சுக்லா, 'சச்சின் மற்றும் விஞ்ஞானி ராவ் ஆகியோர் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. இந்த விஷயத்திலும் காந்தி குடும்பத்தை இழுக்கும் பாஜக-வின் வியாதிக்கு எந்த சிகிச்சையும் கிடையாது" எனத் தெரிவித்தார்.
தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரராகி விட்ட சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவிற்கு மத்திய அரசு கடந்த சனிக்கிழமை பாரத ரத்னா விருது அறிவித்ததை அடுத்து இந்த பிரச்சனை எழுந்துள்ளது.