சிபிஐ இயக்குனருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசு மறுப்பு

By செய்திப்பிரிவு

சிபிஐ இயக்குனருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் கூறியுள்ள மத்திய அரசு, மத்திய அரசுத் துறைச் செயலருக்குரிய அலுவல் சாரா அதிகாரங்களையும், தமது துறை அமைச்சரிடம் நேரடியாக அறிக்கை அளிக்க அனுமதியையும் சிபிஐ இயக்குனருக்கு வழங்க முடியாது என்று உறுதிபட தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திடம் இன்று (புதன்கிழமை) எழுத்துப்பூர்வமாக அளித்த 23 பக்க பிரமாணப் பத்திரத்தில், சிபிஐ கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுவிட்டால், இதேபோன்ற கோரிக்கைகளை மற்ற அமைப்புகளும் எழுப்பத் தொடங்கிவிடும் என்று மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

சிபிஐ இயக்குனருக்கு, செயலருக்கு உரிய அலுவல்சாரா அதிகாரங்களைத் தருவது, அரசு நிர்வாக முறைக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்றும், அது குற்றவியல் நீதிமுறையிலும் தீங்கு உண்டாக்கும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் அமைப்புத்தான் சிபிஐ என்ற நிலையில், அதன் இயக்குனருக்கு கூடுதல் அதிகாரங்களைத் தந்தால், அது சட்டத்தின் மோசமான நிலை என்றும், அத்தகைய கோரிக்கைகளுக்குச் செவிசாய்தால், அது ஓரிடத்தில் கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் குவிய காரணமாகி விடும் என்றும் அந்தப் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ இயக்குனர் நேரடியாக தமது துறை அமைச்சருக்கு அறிக்கைகளை அளிக்க முடியும் எனில், தொடர்புடைய அமைச்சரின் கண்காணிப்பு, நிறுவன, அமைப்பு ரீதியிலான ஆதரவு இல்லாமல் சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழல் வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, சிபிஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது.

அதன் தொடர்ச்சியாக, சிபிஐக்கு கூடுதல் அதிகாரங்கள், தன்னாட்சி அதிகாரம் வழங்கும் விவகாரத்தில், அந்த அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடுகள் மிகுதியாகின. இது தொடர்பாக இரு தரப்பாலும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன் முக்கியப் பகுதியாக, தன்னாட்சி வழங்க வலியுறுத்தும் சிபிஐ, தமது தலைமையான சிபிஐ இயக்குனருக்கு மத்திய அரசு துறை செயலர் பொறுப்புக்குரிய அலுவல் சாரா அதிகாரங்கள் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

அந்தக் கோரிக்கையை நிராகரிப்பதாக, உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சிபிஐ கோரிக்கையை நிராகரிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திடம் 23 பக்க பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE