நான்கு இடங்களில் உச்ச நீதிமன்றக் கிளை: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

நாட்டின் நான்கு பகுதிகளில் உச்ச நீதி மன்றக் கிளை அமைக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆறு மாதங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வசந்தகுமார் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

மக்களின் நலன் கருதி, உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை முக்கிய நகரங்களில் தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் 1986-ம் ஆண்டு கூறியுள்ளது. மத்திய சட்டக் குழுவின் 229-வது அறிக்கையி லும், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு பிராந்தியங்களில் உச்ச நீதிமன்றம் கிளை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு கோரிக்கை அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 3,500 கி.மீ. பரந்து விரிந்த இந்தியாவில் 18 அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. நூறுக்கும் மேற்பட்ட மொழி மாறுபாடுகள் உள்ளன. மொத்தம் 120 கோடி பேர் உள்ள இந்த நாட்டில் ஓர் உச்ச நீதிமன்றம் மட்டுமே உள்ளது. நாட்டின் 24 உயர்நீதிமன்றங்களில் வழங் கப்படும் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் மட்டுமே மேல் முறையீட்டு அமைப்பாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நீதி பெற டெல்லி வந்து செல்ல பெரும் பண விரயம் ஏற்படுகிறது. இதனால், மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து நான்கு பகுதிகளில் உச்ச நீதிமன்ற கிளையை நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனு தலைமை நீதிபதி தத்து, எஸ்.ஏ.பாப்தே, ஏ.எம்.சாப்ரே ஆகியோ ரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ‘மனுதாரர் கோருவதைப் போல், நான்கு பகுதிகளில் உச்ச நீதிமன்ற கிளைகள் அமைப்பது சாத்தியமா, இல்லையா என்பது குறித்து மத்திய அரசு ஆறு மாதங்களில் பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE