பைலின் புயலால் 90 லட்சம் பேர் பாதிப்பு; ரூ.2,400 கோடி மதிப்பிலான பயிர்கள் நாசம்

By செய்திப்பிரிவு

ஒடிசாவின் கோபால்புரில் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தாக்கிய பைலின் புயலுக்கு இதுவரை 14 பேர் பலியாகினர். ஒடிசாவில் 13 பேரும், ஆந்திரத்தில் ஒருவரும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசாவின் கஞ்சம் உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

ஒடிசா மற்றும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் புயல் தாக்கிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சேதமடைந்த முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகளின் மீட்புப் படையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

புயல் தாக்கியபோது, ஒடிசா கடற்பகுதியில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நிவாரணப் பணிகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு, இன்று காலை 11 மணியளவில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

ஒடிசாவில் பைலின் புயலால் 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், ரூ.2,400 கோடி மதிப்பிலான பயிர்கள் நாசமடைந்துள்ளன என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பைலின் போன்று இதற்கு முன் ஒடிசாவில் இப்படி ஒரு பேரிடர் ஏற்பட்டதில்லை என்று குறிப்பிட்ட அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பைலின் புயல் காரணமாக, பிகாரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய காற்றின் வேகம் 11 மணிக்குப் பிறகு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவின் கோபால்புரில் கரையைக் கடந்து வீசிவரும் பைலின் புயல், இன்று பிற்பகலுக்குள் வலுவிழக்கும் என்றும், பின்னர் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறும் என்றும் இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பைலின் புயல் காரணமாக, 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

அதேவேளையில், ஹவுரா - பூரி இடையே ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டதாக கிழக்கு கடலோர ரயில்வே தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க கடற்பகுதியில் 20 பேருடன் சரக்குக் கப்பல் மூழ்கியதாக அச்சம் நிலவுகிறது. மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவில் கடலோர மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்வே சிக்னல்கள், மின் கோபுரங்கள், நடைமேடைகள் முதலானவற்றுக்கு பெருத்த சேதம் ஏற்படுத்துள்ளது.

முந்தைய தகவல்கள்...

ஒடிசா, ஆந்திரத்தில் மீட்புப் பணிகள் தீவிரம்

ஒடிசா மற்றும் வடக்கு கடலோர ஆந்திரத்தைத் தாக்கிய பைலின் புயல் காற்றின் வேகம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஒடிசாவின் கோபால்பூரில் மையம் கொண்ட பைலின் புயலின் வேகம் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது என்றும், மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை படைகள் நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் எம்.சசிதர் ரெட்டி இன்று காலை தெரிவித்தார்.

புயல் கரையைக் கடக்கத் தொடங்கியபோது, மணிக்கு 200 கி.மீ. என்ற அளவில் இருந்த காற்றின் வேகம், அதிகாலை 5 மணியளவில் 160-ல் இருந்து 170 கி.மீ. வரையிலான வேகத்துக்க்குக் குறைந்தது.

அதன்பின், மேலும் வலு இழந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் 70 முதல் 80 கி.மீ வரையிலாக காற்றின் வேகம் குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி மஹாபாத்ரா தெரிவித்தார்.

ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான கஞ்சம் மற்றும் பேரம்பூரில் வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்ததாகவும், மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, ஆந்திரம் மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதிகள் மிக பலத்த மழை நீடித்துள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

உயிர் சேதம் இல்லை

பைலின் புயலின் விளைவால், ஞாயிற்றுக்கிழமையைப் பொருத்தவரையில் இதுவரை உயிர் சேதத் தகவல்கள் எதுவும் இல்லை என்று தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

முன்னதாக, ஒடிசாவில் வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக 7 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஒடிசா மாநிலத்தையொட்டி, நடுக்கடலில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்கள் தத்தளித்து கொண்டிருப்பதாகவும், அவர்களை மீட்க கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல் கரையைக் கடக்கத் தொடங்கியபோது...

கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான "பைலின்" புயல் மணிக்கு 200 கி.மீட்டர் வேகத்தில் ஒடிசாவின் கோபால்பூர் அருகே சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது.

புயலின் வேகம், வீரியம் அதிகமாக இருந்தது முன்கூட்டியே கணிக்கப்பட்டதால் இரு மாநிலங்களிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கடற்கரையோர குடிசைகள் காற்றில் பறந்தன. அலைகளின் ஆக்ரோஷத்தால் பழைய கட்டிடங்கள் இடிந்தன. 4 அடி உயரத்துக்கு எழும்பிய ராட்சத அலைகளால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 600 மீட்டர் தொலைவு வரை கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. சாலைகளில் நூற்றுக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.

கடலோர ஒடிசாவின் கஜபதி, கன்ஜம், குர்தா, புரி, கட்டக் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆந்திரத்தில் விசாகப்பட்டினம், விஜயநகரம், கலிங்கப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் புயல் பாதிப்புகள் அதிகமாக இருந்தன.

ஆந்திரத்தின் காக்கிநாடாவில் கடற்கரையோர சாலை வரை கடல்நீர் புகுந்தது. தாடேபள்ளி பகுதியில் விவசாய நிலங்களை கடல்நீர் மூழ்கடித்தது.

இரு மாநிலங்களிலும் கடலோர மாவட்டங்களில் மின் இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புப் பணியில் முப்படைகள்

புயல் சூறையாடிய ஒடிசா, ஆந்திரப் பகுதிகளில் ராணுவம், விமானப் படை, கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் நள்ளிரவிலும் துணிச்சலுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் விமானங்களும் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்டன.

இவை தவிர நிவாரணப் பொருள்களை கொண்டு செல்ல 2 சூப்பர் ஹெர்குலஸ் ரக விமானங்களையும் விமானப் படை தயார் நிலையில் வைத்திருந்தது. மேலும் நாசிக், ராஞ்சி, பெங்களூர், நாக்பூர், பாரக்பூர் விமானப்படை தளங்கள் நிவாரணப் பணிகளுக்காக உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக விமானப் படையின் சரக்கு விமானம், உயிர் காக்கும் மருந்துகள் உள்பட சுமார் 500 டன் நிவாரணப் பொருள்களுடன் புவனேஸ்வரத்தில் சனிக்கிழமை காலையே தரையிறங்கியது.

ரயில்கள் ரத்து

ஹவுரா- விசாகப்பட்டினத்துக்கு இடையே இயக்கப்படும் அனைத்து ரயில்களும் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதன்படி, புவனேஸ்வரம்-விசாகப்பட்டினம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், புவனேஸ்வரம்- திருப்பதி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், புவனேஸ்வரம்- செகந்திராபாத் விசாகா எக்ஸ்பிரஸ், குண்டூர்- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ், ஹவுரா- புவனேஸ்வரம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், ஹவுரா- புரி சதாப்தி எக்ஸ்பிரஸ், புவனேஸ்வரம்- புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை, திருச்சியில் இருந்து ஹவுராவுக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.ஒட்டுமொத்தமாக 56 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 16 ரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

விமானச் சேவை நிறுத்தம்

புவனேஸ்வரம் பிஜு பட்நாயக் விமான நிலையத்தில் 18-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. வானிலை சீரடைந்த பின்னரே மீண்டும் சேவை தொடங்கும் என்று விமான நிலைய இயக்குநர் சரத் குமார் தெரிவித்தார்.

ஒடிசாவின் பாரதீப், கோபால்பூர் துறைமுகங்கள் மூடப்பட்டன. இந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

5 கி.மீ. தொலைவுக்குள் ஆள் இல்லை

கடற்கரையில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் மக்கள் அனைவரும் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்படி ஒடிசாவில் சுமார் நான்கரை லட்சம் பேரும், ஆந்திரத்தில் ஒன்றரை லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இரு மாநிலங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகின்றன. 500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் சுமார் 1,500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவை தவிர கோயில்கள், பள்ளிகளிலும் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

கால்நடைகளுக்காக அமை க்கப்பட்ட சிறப்பு முகாம்களில் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் அடைக்கப்பட்டிருந்தன.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆன்மிக சுற்றுலாத் தலமான புரியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி ஒடிசா, ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களை "பைலின்" புயல் சூறையாடிச் சென்றுள்ளதாக நள்ளிரவில் அந்தப் பகுதிகளை ஆய்வுசெய்த மீட்புப் படையினர் தெரிவித்தனர். இந்தப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பல மாதங்கள் தேவைப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

கடந்த 1999-ல் ஒடிசாவில் வீசிய புயலில் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்