ஃபேஸ்புக்கில் இஸ்ரோவின் மார்ஸ் மிஷன்: கே.ராதாகிருஷ்ணன்

பொதுமக்களுக்கு மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO's Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு துவங்கியுள்ளது.

இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான ‘மங்கள்யான்’ விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

வளர்ந்த நாடுகளே வியக்கும் வண்ணம் இந்திய விண்வெளித் துறையில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ள ‘மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அவ்வப்போது தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என இஸ்ரோ மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

‘மங்கள்யான்’ விண்கலம்,அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அன்றிலிருந்து 6 மாதங்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் மார்ஸ் மிஷன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் என்றார்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில் : செவ்வாய்க் கிரக்கத்திற்கு செல்லும் ‘மங்கள்யான்’ விண்கலத்தின் வியத்தகு பயணத்திலும், பின்னர் செவ்வாயில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளிலும் பொதுமக்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

மார்ஸ் மிஷன் குறித்த ஃபேஸ்புக் பக்கத்தில், 2 மணி நேர இடைவெளியில் புதுப்புது தகவல்கள் பதிவு செய்யப்படும். ஃபோட்டோக்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும் என்றார். பொதுமக்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூரவ் இணையதளமான www.isro.gov.in - வாயிலாக மார்ஸ் மிஷன் ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்லலாம் என்றார்.

இந்த ஃபேஸ்புக் பக்கம் துவங்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே ஒரு லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE