எடுக்கும் முடிவுகளை சந்தேகித்தால் எந்த தொழிலுமே நிலைக்காது

எடுக்கும் எல்லா முடிவுகளையுமே சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எந்த தொழிலுமே நிலைக்காது. யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளும்படி புலனாய்வு அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் (பேங்கான் 2013) மாநாட்டில் அமைச்சர் பேசியதாவது: உள்நோக்கத்துடனும் தப்பான நோக்கத்துடனும் முடிவெடுத்துள்ளதாக எதையுமே சந்தேகிக்கும் நிலைமை எந்த தொழிலையும் வாழவைக்காது, யாரும் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்கள். எனவே எடுக்கும் முடிவுகள் மீது கேள்வி எழுப்புவதையும் அவற்றை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதையும் புலனாய்வு அமைப்புகள் தவிர்க்க வேண்டும்.

தற்போதைய நடப்பு நிலவரங்களை கருத்தில்கொண்டு வங்கிகள் நேர்மையான முடிவு எடுத்தால் அவர்களை பிரச்சினையிலிருந்து அரசு காப்பாற்றும். எப்போதோ எடுத்த முடிவுகளில் சில இப்போதைய கால கட்டத்தில் தவறான முடிவாக தென்படலாம்.

ஒவ்வொரு முடிவையும் துருவி துருவி நுணுக்கமாக ஆராய்ந்து உள் அர்த்தம் கற்பித்து குற்றச்செயலோ என்கிற கண்ணோட்டத்தில் அதிகாரிகள் கேள்வி எழுப்பும்போது அதுதான் மிக மிக ஆபத்தான முடிவாகும். இத்தகைய அணுகுமுறையை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பதே எனது அறிவுரை.

உண்மை நிலவரம், சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கியாளர்கள் முடிவு எடுக்கும்போது அரசு அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்றார் சிதம்பரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE