தெலங்கானா மசோதாவை திருப்பி அனுப்ப முடிவு: ஆந்திர முதல்வர் அதிரடி நடவடிக்கை
தெலங்கானா மசோதா குறித்து ஆந்திர சட்டமன்றத்தில் விவாதித்து 23-ம் தேதிக்குள் திருப்பி அனுப்பி வைக்குமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார். ஆனால், காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என ஆந்திர அரசு கோரியதன்பேரில் இம்மாதம் 30-ம் தேதி வரை காலக்கெடுவை குடியரசுத் தலைவர் நீட்டித்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாள்களாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் கிரண்குமார் ரெட்டி மாநிலம் பிரிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார். தான் எப்போதும் மாநில பிரிவினையை ஏற்காதவன் என பகிரங்கமாக தனது கருத்தைப் பதிவு செய்தார்.
இதற்கு, தெலங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ க்கள், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பா.ஜ.க.வினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தெலங்கானா மசோதாவில் பல்வேறு தவறுகள் உள்ளதால் அதனை சட்டமன்றத் தலைவர் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் சட்டமன்ற விதி 77-ன் படி திரும்ப அனுப்ப தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் சனிக்கிழமை நோட்டீஸ் அளித்தார்.
முதல்வர் சார்பில் அமைச்சர் ஷைலஜநாத், மன்றத் தலைவர் நாதெள்ள மனோகரிடம் நோட்டீஸை வழங்கினார். மேலும் தெலங்கானா மசோதாவை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பல்வேறு உறுப்பினர்கள் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கு எதிரான ஆந்திர முதல்வரின் நடவடிக்கை, தெலங்கானா பிரச்சனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.