மக்களவையில் பேசப்படும் இந்தி, ஆங்கில உரைகளை தமிழக எம்பிக்களுக்காக தமிழில் உடனடியாக மொழிபெயர்க்கும் வசதி கோரப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் 11 எம்பிக்கள் அதன் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் அமைச்சர்களும், உறுப்பினர்களும் பெரும்பாலும் உரையாற்றும் மொழி இந்தி அல்லது ஆங்கிலமாக உள்ளது. அனைத்து எம்பிகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணைப் பிரிவில் இடம்பெற்ற பெற்றுள்ள 22 மொழிகளில் பேசவும் அனுமதி உள்ளது.
இவற்றின் ஏதாவது ஒரு மொழியில் எம்பிக்கள் பேசும் உரையின் மொழிபெயர்ப்பு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மற்ற உறுப்பினர்களுக்கு ஒலிபரப்பப்படுகிறது. இதன்மூலம், தம் தாய்மொழியில் பேசும் எம்பிக்களின் உரையை ஆங்கிலம், இந்தி மொழி அறிந்தவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
இதேபோல், ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசும் எம்பிக்களின் உரையை தம் தாய்மொழியில் புரிந்துகொள்ளும் வசதி இல்லை. இதனால், தமிழக எம்பிக்கள் இருஅவைகளிலும் மொழிப்பிரச்சனையின்றி தீவிரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.
இதன் மீதான விரிவான செய்தி கடந்த ஜூன் 22-ல் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியானது. இந்நிலையில், மக்களவையின் 11 தமிழக எம்பிக்கள் அதன் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் உடனடி மொழிபெயர்ப்பு வசதி செய்ய வேண்டி மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவில், தமிழகத்தின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கையெப்பம் இட்டுள்ளனர்.
இந்த மனுவில் தமிழ எம்பிக்கள் குறிப்பிடும்போது, ‘எம்பிக்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது. மக்களவையில் நாம் மூன்றாவது பெரிய கூட்டணியாக 38 எம்பிக்கள் உள்ளோம்.
எனவே, எங்கள் மக்களுக்கு முறையாகத் தொண்டாற்றும் வகையில் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். மக்களவையில் பேசும் உறுப்பினர்கள் உரைகளை உடனடி மொழிபெயர்ப்பு வசதி இருந்தால் தான் அதற்கு எங்களால் தக்க பதில் அளிக்க முடியும்.
அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணை பிரிவின் 22 மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்து தரவேண்டியது அவசியம் ஆகும். இதற்காக நிரந்தரமான உடனடி மொழிபெயர்ப்பு அமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த மனு அளித்தவர்களில் காங்கிரஸ் உறுப்பினர்களான மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, டாக்டர்.விஷ்ணு பிரசாத், வைத்தியலிங்கம்(புதுச்சேரி), சிபிஎம் கட்சியின் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், சிபிஐயின் கே.சுப்பராயன், எம்.செல்வராஜ், விடுதலை சிறுத்தையின் தொல்.திருமாவளவன், டி.ரவிக்குமார், மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் கே.நவாஸ்கனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சிபிஐயின் திருப்பூர் தொகுதி எம்பியான கே.சுப்பராயன் கூறும்போது, ‘மக்களவையில் தற்போதுள்ள முறையில் அனைத்து உறுப்பினர்களும் சுதந்திரமாக செயல்பட முடியாது. இது நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்குகொள்ளும் சுதந்திரத்தை பறிப்பதாகும்.
சமஸ்கிருதத்திற்கும் தொன்மையானது எங்கள் தாய்மொழியான தமிழ். தாய்மொழியில் புரிந்துகொள்ளும் உறுப்பினர்களால் மட்டுமே தமது கருத்தை ஆணித்தரமாக பேசி வலியுறுத்த முடியும்.’ எனத் தெரிவித்தார்.
சபாநாயகரிடம் மனு அளிக்கும் முன் அதில் திமுக உறுப்பினர்களிடமும் கையெப்பம் பெற அக்கட்சியின் அவைத்தலைவர் டி.ஆர்.பாலுவிடமும் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் தம் தலைவரிடம் ஆலோசித்தபின் தனியாக மனு அளிப்பதாகக் கூறியதாகத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
48 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago