2 ரொட்டிகளுக்காக மனிதக் கழிவுகளை அள்ளும் தாழ்த்தப்பட்ட மக்கள்: ராஜஸ்தானில் பெயரளவுக்கு ‘ஸ்வச் பாரத்’

By பிரிசில்லா ஜெபராஜ்

ஸ்வச்பாரத் திட்டம், 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம் என்று காகிதத்தில் மட்டுமே ராஜஸ்தான் மாநிலத்தைக் கூறிக்கொள்ள முடியும்.இன்னும் அந்த மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் உயர் சாதி மக்களின் மனிதக் கழிவுகளை அள்ளி 2 ரொட்டிகளைக் கூலியாக தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றுவரும் கொடுமை நடந்து கொண்டு இருக்கிறது.

ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக வசுந்திரா ராஜே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானின் பாரத்பூர் மாவட்டத்தில் பெஹ்நாரா கிராமத்தில்தான் இந்த சமூகக் கொடுமை, கொடுங்குற்றம் நடந்து வருகிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான சாந்தா தேவி என்ற பெண் நாள்தோறும் காலையில் உயர் சாதிமக்கள் குடியிருக்கும் தெருவுக்கு வருகிறார்.

தனது சேலையால் வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ளும் சாந்தா தேவி, இரும்பு கரண்டியால், மனிதக் கழிவுகளை அள்ளி இரும்பு வாளியில் போட்டு சுமந்து சென்று அப்புறப்படுத்துகிறார்.

கூலியாக 2 ரொட்டி

இந்த வேலையைச் செய்தபின் அவருக்கு உயர்சாதி மக்கள் 2 ரொட்டிகளை கூலியாகக் கொடுக்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மனிதனின் கழிவுகளை மற்றொரு மனிதன் அள்ளும் அவலத்தைச் செய்து வருகிறார்.

கடந்த 4 ஆண்டுகளுக்குமுன் பிரதமர் மோடி ஸ்வச் பாரத் திட்டத்தை கொண்டுவந்தபின் பல்வேறு மாநிலங்களில், நகரங்களில் மக்களுக்கு இலவசமாக அரசால் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இதனால், பல நகரங்கள் திறந்த வெளிக்கழிப்படம் இல்லாத நகரம் என்றும் அறிவிக்கப்பட்டன. அவ்வாறு ராஜஸ்தானிலும் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் பெயரளவுக்குத்தான் இருக்கிறது.

மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவது தடை செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டும், உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தும் இன்னும் இந்த இரக்கமற்ற பாவச் செயல் ராஜஸ்தானில் உயர்சாதி மக்கள் பகுதியில் தொடர்கிறது.

இந்த வேலைக்கு பணமில்லை

இதுகுறித்து 65 வயதாகும் சாந்தா தேவி கூறுகையில், என்னுடைய சகோதரி முன்னி, அவரின் கணவர் ராம்புகு, நான் மூன்று பேரும் இந்த வேலையை நாள்தோறும் செய்கிறோம். நாள்தோறும் உயர்சாதி மக்களின் கழிவுகளை அள்ளுவதற்கு 5 முதல் 6 மணிநேரம் ஆகும்.

இந்த வேலைக்கு எங்களுக்கு பணம் கொடுப்பதில்லை, அதற்குப் பதிலாக வீட்டுக்கு 2 ரொட்டி கொடுப்பார்கள். மற்ற வேலை செய்தால் சிறிய அளவு கூலிகொடுப்பார்கள்.

இரவுநேரத்தில் உயர்சாதி மக்களின் கழிவறைக்கு பின்னால் மண்ணை கொட்டிவிட வேண்டும். அப்போதுதான் மறுநாள் வேலை எளிதாக இருக்கும் என்று சொல்ல முடியா துயரத்தில் தெரிவித்தார்.

கட்டாயப்பணி

இந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மெஹ்தார் சமூகத்தைச் சேர்ந்த 5 குடும்பங்கள் மட்டும் வசிக்கின்றனர். காலங்காலமாக இந்த மனிதநேயமற்ற பணியைச் செய்ய இவர்களின் குடும்பம் ஆதிக்க சாதியினரால் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்தக் கிராமத்தில் ஜாட் மற்றும் ஜாட்வாஸ் ஆகிய உயர்சாதியைச் சேர்ந்த 250 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் 10 முக்கிய ஜாட் சமூகத்தினரின் வீட்டுக்குச் சென்று அவரின் உலர் கழிவறையில் இருந்து மனிதக் கழிவுகளை அகற்ற வேண்டும், பின்னர் உயர் சாதியினர் தெருவில் சென்று அவர்களின் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று சாந்தா தேவியும், அவரின் சகோதரியும் உயர் சாதியினரால் பணிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சாந்தா தேவி, அவரின் சகோதரி முன்னி ஆகியோரின் மகன்கள் இந்த மனிதக்கழிவுகள் அள்ளும் பணியை எப்போதாவது மட்டுமே செய்கிறார்கள். மற்றவகையில், சிறிய கூலிவேலை செய்வது, கழிவறையைச் சுத்தம் செய்வது, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வது, இறந்த மனித உடல்களை அப்புறப்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

கோயிலுக்குள் அனுமதியில்லை

இதுகுறித்து முன்னியின் மகன் முகேஷ் கூறுகையில்,” எங்களை யாரும் வேறு எந்த பணிக்கும் அழைப்பதில்லை. எங்களிடம் எந்தப் பொருளும் யாரும் வாங்குவதும் இல்லை நாங்கள் மிகுந்த அசுத்தம் என்கிறார்கள். கிராமத்தில் உள்ள கோயிலுக்குள் கூட எங்களை அனுமதிப்பதில்லை” என குமுறுகிறார்.

ஆனால், தாங்கள்தான் மனிதக்கழிவுகளை அள்ளி பிழைப்பு நடத்துகிறோம் தங்களின் பேரக்குழந்தைகள் நன்றாகப் படிக்க ஆசைப்படுகிறோம் என்று முன்னி ஆசையுடன் தெரிவிக்கிறார்.

வகுப்பறையில் தனி இடம்

முன்னியின் 4-ம் வகுப்பு படிக்கும் பேரன் கூறுகையில், "நான் போலீஸ் அதிகாரியாக ஆசைப்படுகிறேன். ஆனால், வகுப்பறையில் என்னை உயர் சாதி வகுப்பினரோடு சேர்ந்து அமர வைக்காமல் ஆசிரியர் தனியாக அமர வைத்துள்ளார். என்னுடன் மற்ற மாணவர்கள் யாரும் விளையாடமாட்டார்கள். தெரியாமல் அவர்களை நான் தொட்டுவிட்டல், என்னை கெட்டவார்த்தையால் திட்டுவார்கள். என்னுடைய தாத்தா பெரும்பாலான நாட்களில் பள்ளிக்கு வந்து பள்ளியின் கழிவறைகளைச் சுத்தம் செய்வார். " என்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சுகாதாரத்துறை செயலாளர் பரமேஸ்வரன் அய்யர், ஸ்வச் பாரத் அபியான் தனது இறுதிஆண்டை நெருங்கும் ஒருவாரத்துக்கு முன் தி இந்துவுக்கு(ஆங்கிலம்) பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி கொண்டுவந்த ஸ்வச் பாரத் திட்டம் சாதியப்பாகுபாடுகளை அடித்து நொறுக்கிவிட்டது. திறந்தவெளிக்கழிப்பிடமாக ஒரு நகரம், கிராமம் அறிவிக்கப்படுகிறது என்றால், அனைத்து வீடுகளிலும் உலர்கழிவறை நீக்கப்பட்டு, சுகாதாரமான கழிவறை கட்டப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இன்னும் உலர் கழிவறைகளை மக்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தால், ஸ்வச் பாரத் திட்டம் தனது பாதையில் இருந்து விலகிவிட்டது என்று பொருள் எனத் தெரிவித்தார்.

ஆனால், இன்னும் ராஜஸ்தான் மாநிலத்தில் உலர் கழிவறையை சுத்தம் செய் தாழ்த்தப்பட்ட மக்கள் பலவந்தப்படுத்தப்படுகிறார்களே இதை என்ன சொல்வது.

50 ஆயிரம் பேர்

சமீபத்தில் மத்திய சமூகநீதித்துறை அமைச்சகமும், ராஷ்ட்ரிய கிராம அபியான்(ஆர்ஜிஏ) ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், நாட்டில் இன்னும் 160 மாவட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

சில மாவட்டங்கள் திறந்தவெளிக்கழிப்பிடம் இல்லாத மாவட்டங்களாக அறிவித்தபின் அங்கு மனிதர்கள் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் இருந்தால்கூட , அங்கு மனிக்கழிவுகளை அள்ளு பணியில் யாரும் இல்லை எனக் கூற உயர் அதிகாரிகளின் நெருக்கடிக்கு உள்ளூர் அதிகாரிகள் ஆளாகின்றனர் என்று ஆர்ஜிஏ அமைப்பு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

                                                                                                        தமிழில்-போத்திராஜ்         

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்