தனியார் நிறுவனங்களுக்கு தகவலை பகிரக் கூடாது; ஆதார் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: அரசின் நலத்திட்டங்கள், பான் எண்ணுக்கு கட்டாயம்

By எம்.சண்முகம்

மக்களின் பயோ-மெட்ரிக் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் மத்திய அரசின் ஆதார் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அரசின் திட்டங்கள், வருமான வரி உள்ளிட்டவை தவிர தனியார் பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆதார் சட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, மக்களின் பயோ-மெட்ரிக் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை திரட்டும் பணியை மேற்கொண்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சட்ட விரோதம் என்றும் தனிமனித அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும் 31 பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த மே மாதம் விசாரணையை முடித்து தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதிகள், இறுதித் தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உட்பட எதற் கும் ஆதார் எண் கட்டாயமாக்கக் கூடாது என்று இடைக்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டது. தலைமை நீதிபதி உள்ளிட்ட 4 நீதிபதிகள் அளித்த பெரும்பான்மை தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் ஆதார் சட்டம் செல்லும். இதன்மூலம் சேகரிக்கப்படும் தகவல்களை மானியங்கள் வழங்குவதற்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வருமான வரிக்கணக்கு எண் (பான்) அட்டையுடன் ஆதார் தகவல்களை இணைப்பது கட்டாயம். வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கு ஆதார் அவசியமாகும்.

நீட் தேர்வுக்கு தேவையில்லை

ஆனால் சிபிஎஸ்இ, நீட், ஜெஇஇ, யுஜிசி போன்ற கல்வி நிறுவன தேர்வுகள், தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதார் தகவல்களை கேட்பது சட்டவிரோதம். 6 முதல் 14 வயதுடைய குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமை. இந்த உரிமையை ஆதார் தகவலை காரணம் காட்டி மறுக்கக் கூடாது. பள்ளிக் கல்வி என்பது சேவையும் அல்ல; மானியமும் அல்ல. அதை எக்காரணம் கொண்டும் மறுக்கக் முடியாது. பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கும் எந்தச் சலுகையையும் ஆதார் தகவலைக் காரணம் காட்டி மறுக்கக் கூடாது. மற்ற ஆவணங்களை வைத்து அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்க வேண்டும்.

ஆதார் தகவல்களை செல்போன் நிறுவனங்களுடன் இணைப்பது கட்டாய மல்ல. இ-காமர்ஸ், ஆன்லைன் வர்த்த கம், தனியார் வங்கிகளில் கணக்கு தொடங்குதல் மற்றும் வங்கிச் சேவை போன்றவற்றுக்கு ஆதார் தகவல்களை தர வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு ஆதார் தகவல்களை வழங்கலாம் என்ற சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது.

எந்த தனியார் அமைப்புக்கும் ஆதார் தகவல்களை மத்திய அரசு பகிரக் கூடாது. தற்போது சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களை பாதுகாக்க இன்னும் வலுவான சட்டத்தை மத்திய அரசு இயற்றி, தகவல் பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும். சட்ட விரோதமாக குடிபெயர்ந்தவர்கள் ஆதார் அட்டை பெற்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை.

ஆதார் அட்டை என்பது மற்ற அடையாள அட்டை போல அல்லாமல் தனித்துவம்மிக்கது. இந்திய மக்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கக் கூடியது. அதேபோல, ஆதார் தகவல்கள் அந்த தனித்துவம் மிக்கதாகவே இருக்க வேண்டும். இது தனிநபர் அந்தரங்கத்தை மீறவில்லை. அதேபோன்று வங்கிக் கணக்கு தொடங்கும் ஒவ்வொருவரையும் தீவிரவாதிகளாக இருப்பார்களோ என்ற சந்தேக நோக்கத்துடனும் கள்ளப் பணப்புழக்கம் செய்ய வாய்ப்பு இருப் பவர்களைப் போலவும் பார்ப்பது கொடூரமானது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பு

இந்த அமர்வில் இடம்பெற்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பை எழுதி யுள்ளார். அதில், “நாடாளுமன்றத்தில் நிதி மசோதா என்ற பெயரில் ஆதார் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கக் கூடாது. இது அரசியலமைப்பை ஏமாற்றும் மோசடி செயலாகவே கருதப்படும். ஆதார் தகவல்களை சேகரித்து வைத்துள்ள யுஐடிஏஐ நிறு வனம் அவற்றைப் பாதுகாக்க போது மான சட்டப்பூர்வ அம்சங்களை பெற்றிருக்கவில்லை. இது நாட்டு மக்களின் அனைத்து அடிப்படை உரிமை களையும் மீறுவதற்கு எளிதான வாய்ப்பை ஏற்படுத்தி தரும்” என கூறியுள்ளார்.

இதுதவிர, நீதிபதி ஏ.கே.சிக்ரி தனியாக கருத்து தெரிவித்திருந்தாலும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பை ஏற்பதாகக் கூறியுள்ளார். இதனால், 4:1 என்ற அடிப்படையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பே இறுதி தீர்ப்பாக கருதப்படும்.

ஆதார் எண் அவசியம்

* பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்.

* வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய அவசியம்.

*அரசின் நலத்திட்டங்கள், மானியங்களைப் பெற கட்டாயம்.

ஆதார் எண் கட்டாயமல்ல

* வங்கிக் கணக்கு தொடங்க..

* செல்போன் இணைப்பு (சிம் கார்டு) பெற..

* இணையவழி ஷாப்பிங் செய்ய..

* பள்ளிக்கூடங்களில் மாணவர்களை சேர்க்க..

* சிபிஎஸ்இ, யுஜிசி, நீட் தேர்வு எழுத..

* தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தேவையில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்