சமூக அந்தஸ்தை காரணம் காட்டி உலகத் தமிழ் மாநாட்டுக்காக அமெரிக்கா செல்ல 7 தமிழர்களுக்கு விசா மறுப்பு

By ஆர்.ஷபிமுன்னா

அமெரிக்காவின் சிகாகோவில் 10-வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இதில் ஏற்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க 7 தமிழ் ஆய்வாளர்களுக்கு சமூகம், நிதி அந்தஸ்தை குறைகூறி விசா மறுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஜூலை 4-ல் தொடங்கி 7 ஆம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டை சர்வதேச தமிழாய்வு சங்கத்தினர் நடத்துகின்றனர். இதன் இணைஅமைப்பாளர்களாக வட அமெரிக்காவின் தமிழ் கூட்டமைப்பினர் மற்றும் சிகாகோ தமிழ் சங்கத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான எஸ்.எம்.ராமசாமி, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியர் கே.ராஜன், முனைவர் சாரதா நம்பி ஆரூரான் உள்ளிட்ட 20 பேரின் ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப்பட்டுள்ளன.

இதற்காக அவர்கள் அனைவரும் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அவர்களில் 7 இளம் தமிழ் ஆய்வாளர்களுக்கு மட்டும் விசா மறுக்கப்பட்டுள்ளது.

இந்த விசா மறுப்புக்கான காரணம் குறித்து அமெரிக்க தூதரகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘பயணம் முடிந்தவுடன் இந்தியாவுக்கு திரும்பி விடுவீர்கள் என்றும், பயணத்திற்கான உரிய நிதி வைத்திருக்கிறீர்கள் எனவும், அமெரிக்கா சென்று அங்கீகாரம் இல்லாத வேலை வாய்ப்பை தேடமாட்டீர்கள் என்றும் நம்பிக்கையை வரவழைக்கத் தவறி விட்டீர்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பவர்களுக்கான அனைத்து செலவுத் தொகைகளையும் மாநாட்டின் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதற்கான ஆதாரக் கடிதம் காட்டிய பின்பும், அந்த 7 பேரின் விசா மறுக்கப்பட்டதற்கு அவர்களது சமூகம் மற்றும் நிதி அந்தஸ்தையும் (தற்காலிகப்பணி) காரணம் எனவும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து 7 பேருக்கும் அளிக்கப்பட்ட பதிலில், ‘அமெரிக்க விசா சட்டம் 214/பி-யின் கீழ் தங்களுக்கு இம்முறை விசா அளிக்க முடியவில்லை. எதிர்காலத்தில் தங்களின் சமூக மற்றும் நிதிஅந்தஸ்து மாறும் பட்சத்தில் அமெரிக்காவின் விசா கோரி நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 7 பேரும் விசா பெற்று தங்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மா.ப.பாண்டியராஜனிடம் உதவியை கோரியுள்ளனர். இவரது பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏழு பேரும் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். இதில் 6 பேர் தமிழகத்தின் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் தற்காலிக உதவி பேராசிரியராக இருக்கும் இளம் ஆய்வாளர்கள்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தமிழகத்தின் மூத்ததமிழறிஞர்கள் வட்டாரம் கூறும்போது, ‘நிரந்தரப்பணி இல்லாத இளைஞர்களுக்கு அமெரிக்க செல்ல விசா கிடைப்பதில் இந்த சிக்கல் உள்ளது. இதற்கு தமிழக அரசு அல்லது நாடாளுமன்ற எம்.பி.க்கள் மத்திய வெளியுறத்துறை அமைச்சகத்திடம் பேசினால் வாய்ப்பு கிடைக்கும். இதுபோல், தமிழாய்வுக்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அறிஞர்களுக்கும் தற்போதைய மத்திய அரசு விசா அளிப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.

அதேசமயம், சம்ஸ்கிருத ஆய்வுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு மட்டும் நம் நாட்டு அரசு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது’ எனத் தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த இளம் பாடகி ஜோதி கலைச்செல்விக்கு பார்வையில்லாத காரணத்தால் இந்தியாவில் உள்ள அந்நாட்டு தூதரகம் விசா அளிக்க மறுத்திருந்தது. இதில், திமுக எம்.பி கனிமொழி தலையிட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிய பின் விசா அளிக்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்