பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 19 ஆண்டுகளாக பேராசிரியர் இன்றி செயல்படாத தமிழ்துறை

By ஆர்.ஷபிமுன்னா

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கடந்த 19 ஆண்டுகளாக தமிழ்த்துறை செயல்படாமல் உள்ளது. இங்கு 2001-ல் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் கு.ராமகிருட்டிணன் ஓய்வுக்குப் பின் புதிதாக எவரும் பணி அமர்த்தப்படவில்லை.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் தலைநகராக இருப்பது சண்டிகர். இங்கு பழம்பெருமை வாய்ந்ததாக பஞ்சாப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதன் செனட், சிண்டிகேட் உள்ளிட்ட பல கல்விக்குழுக்களின் உறுப்பினராக குருதாஸ்பூரின் காங்கிரஸ் எம்.பி. இ.சி.சர்மா இருந்தார். இவருக்கு தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் செய்த முயற்சியில் தென்னிந்திய மொழிகள் துறை இங்கு துவக்கப்பட்டது. தமிழில் முதல் விரிவுரையாளரான முனைவர் கு.ராமகிருட்டிணன் பல ஆண்டுகள் பணியாற்றி 2001-ல் பேராசிரியராக ஓய்வுபெற்றார். இவருக்கு பின் எவரையும் தமிழுக்காக நியமிக்காமல், தென்னிந்திய மொழிகள் துறை பெயரளவில் உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஓய்வுபெற்ற பேராசிரியரான ராமகிருட்டிணன் கூறும்போது, “தமிழகம், தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை பற்றி அறிய ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநில மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் இணைந்து தமிழைப் பயின்று வந்தனர். எனினும், எனது ஓய்விற்கு பின் தமிழ் உட்பட நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் விளம்பரம் வெளியிட்டு வந்த விண்ணப்பங்கள் 19 வருடங்களாகப் பரிசீலிக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

திண்டிவனம் அருகிலுள்ள புலியூரை சேர்ந்த ராமகிருட்டிணன் ஓய்வுக்குப் பின் ஹரியாணாவின் குருகிராமத்தில் தங்கி உள்ளார். இவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பணியில் சேர்ந்ததும், தமிழுக்காக சான்றிதழ், டிப்ளமோ மற்றும் அட்வான்ஸ் டிப்ளமோ ஆகியப் பாடப்பிரிவுகளை துவக்கி உள்ளார். பிறகு, பி.ஏ. மற்றும் எம்.ஏ.வும் தமிழில் அறிமுகப்படுத்தி மாணவர்கள் பயின்று வந்துள்ளனர். மேலும் பி.ஏ. பட்டப்படிப்பில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு கட்டாயப் பாடமாக இருந்தது.

அதில் இந்திய மொழிகளுடன் தமிழிலும் மொழிபெயர்க்கலாம். இதில் தமிழை விரும்பிய பி.ஏ. மாணவர்களுக்கும் அது போதிக்கப்பட்டு வந்தது. சண்டிகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு அலுவலர்கள், இந்திய ராணுவத்தின் முப்படையினர் மற்றும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர். இவர்களுக்காக பகுதிநேர தனி மாணவர்களாகக் கருதி தமிழ் பாடப்பிரிவு எம்.ஏ. வரையும் கூட தபால் மூலமும் தனியாக போதிக்கப்பட்டு வந்தது.

இதன் தாக்கத்தால் ஹரியாணாவின் குருஷேத்ரா பல்கலைக்கழகம், பஞ்சாபில் அமிருதசரஸின் குருநானக் பல்கலைக்கழகம் மற்றும் பாட்டியாலா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் மொழிபெயர்ப்பு தமிழ் பகுதிநேரமாகப் போதிக்கப்பட்டு வந்தது. இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ராமகிருட்டிணன் மேலும் கூறும்போது, “இப்பகுதியில் நம்மொழி வளர்ந்த காரணத்தால் அங்கு வாழும் தமிழர்களுக்காக நான் மார்ச் 31, 1969-ல் துவக்கிய, தமிழ் மன்றம் எனும் பொதுநல அமைப்பிற்கு நல்லாதரவு கிடைத்தது.

இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியால் இங்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் மூலம், தமிழகம், ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளிடம் திரட்டிய நிதியில் இப்போது சொந்தக் கட்டிடம் உள்ளது. ஆனால், அதற்கு அடித்தளமிட்ட பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் பாடப்பிரிவுதான் உயிரில்லாமல் உள்ளது. இதை உயிர்ப்பிக்க நம் தமிழக அரசும், அதன் எம்.பி.க்களும் இம்மாநிலங்களிடமும், மத்திய அரசிடமும் கோரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

திட்டமிட்டு அமைக்கப்பட்ட யூனியன் பிரதேச நகரமான சண்டிகர் உருவானதில் தமிழர்களின் பங்கும் அதிகமாக இருந்துள்ளது. அதன் சாலை சீரமைப்பு பணிகளுக்காக தமிழகத்தில் இருந்து பெருமளவில் பணியாளர்கள் வந்து தங்கியுள்ளனர். அவர்களின் குழந்தைகள் இந்தி மொழி அறியாமல் பள்ளிக்கு செல்லவில்லை.

இவர்களுக்காக பேராசிரியர் ராமகிருட்டிணன் முயற்சியால், சண்டிகரின் தமிழ் மன்றம் சார்பில் எட்டாம் வகுப்பு வரை போதிக்கும் ஒரு தமிழ் பள்ளி செக்டர் 14-ல் துவக்கப்பட்டிருந்தது. இதை அங்கு துணை ஆணையராக வந்த தமிழரான தேவசகாயம் எனும் அதிகாரி முயற்சியால் சண்டிகர் அரசுப் பள்ளியுடன் அது இணைக்கப்பட்டு அங்கு இன்றும் தமிழ் பாடப்பிரிவு ஐந்தாம் வகுப்பு வரை போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உயர்கல்வியில் முடக்கப்பட்ட தமிழ் மட்டும் மீட்டெடுக்க முடியாமல் இருப்பது வருந்தத் தக்கதாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்