இந்தியாவின் தேவை - வலுவான அரசு.. வலுவான சமூகம்

By குர்சரண் தாஸ்

மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதும், இந்தியாவில் எதேச்சதிகாரம் தலைதூக்கும் என பரவலாக பேச்சு எழுந்தது. பலமான அரசைப் பற்றி கவலை இல்லை. பலவீனமான, செயலற்ற அரசை நினைத்துத்தான் எனக்குப் பயம். பலவீனமான அரசில் சட்ட திட்டங்கள் பலமற்றதாக இருக்கும். ஒரு வழக்கில் தீர்ப்பு வர 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதனால்தான் 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

பலவீனமான ஒரு அரசால், வலுவானவர்களிடம் இருந்து, அப்பாவி மக்களைக் காப்பாற்ற முடியாது. மூன்றில் ஒரு எம்எல்ஏ மீது கிரிமினல் வழக்கு இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும். பலவீனமான அரசால் மக்களின் மனதில் ஒரு நிச்சயமற்ற நிலை தோன்றும். பணம் இருந்தால் போலீஸ்,அமைச்சர்கள், நீதிபதிகள் என யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தும். அரசு நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுப்பதை தடுக்கும். அதிகாரிகளின் சுயநலத்தால் சீர்திருத்த நடவடிக்கைகள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்லும்.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி கற்றுக் கொண்ட பாடம், பிரதமருக்கு உள்ள அதிகாரத்தின் எல்லையை அறிந்து கொண்டதுதான். ஒரு சுதந்திரமான ஜனநாயக நாட்டை சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நம்பகத்தன்மை என்ற 3 தூண்கள்தான் தாங்கி நிற்கின்றன. நாம் நம்பகத்தன்மை குறித்துதான் அதிகம் கவலைப்படுகிறோம்.

ஆனால் உண்மையான பிரச்சினை சிறந்த நிர்வாகம்தான். எப்போதும் தேர்தல் சிந்தனையிலேயே இருக்கும் இந்தியாவுக்கு பிரச்சினை நம்பகத்தன்மை கிடையாது. ஒரு செயலை சிறந்த முறையில் செய்து முடிக்கும் திறன்தான். உண்மையான அதிகாரம் அனைத்தும் மாநில முதல்வர்களிடம்தான் இருக்கிறது. அவர்கள்தான் இந்தியாவின் உண்மையான ஆட்சியாளர்கள்.

இதனாலேயே பிரதமர் பதவி பலவீனமாக இருக்கிறது. முதல்வராக இருந்த மோடியின் சிறந்த நிர்வாகம் காரணமாகவே 2014-ல் அவரை பிரதமராகத் தேர்வு செய்தோம். பிரதமர் பதவியிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. இந்திராகாந்தி சர்வாதிகாரிக்கு சமமாக செயல்பட்டபோதிலும் அவரும் தனது அதிகாரத்தின் எல்லையை அறிந்திருந்தார்.

கடந்த 2014-ல் இந்தியாவை மாற்றிக்காட்ட தனக்கு 10 ஆண்டு கால அவகாசம் அளிக்கும்படி மோடி மக்களிடம் கோரிக்கை வைத்தார். மக்கள் அந்த வாய்ப்பை அளித்துள்ளனர். மாற்றம், பொருளாதார சீர்திருத்தத்தில் தொடங்கக் கூடாது. நிர்வாக சீர்திருத்தத்தில்தான் தொடங்க வேண்டும். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரிடம் மோடி ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளலாம்.

மிகவும் கடினமான நாட்டின் நிர்வாக சீர்திருத்தத்தை தாட்சர் தனது இரண்டாவது பதவிக் காலத்தின்போதுதான் கொண்டு வந்தார். இந்தியாவில் நிர்வாகச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். ஏனெனில் வரலாற்று ரீதியாகவே சீனாவைப் போல் இந்தியா பலமான நாடு இல்லை. நமது வரலாற்றில் நாடு முழுவதும் தனித்தனி மன்னர்கள் ஆட்சிதான் நடந்துள்ளது. ஆனால் சீனா முழுவதும் ஒரே பேரரசின் கீழ் இருந்துள்ளது. மவுரியர், குப்தர், மொகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிகள் அனைத்துமே, சீனாவின் பலவீனமான அரசை விடவும் மிகவும் பலவீனமானவைதான்.

நமது முதல் விசுவாசம் சமூகம்தான். நமது குடும்பம், நமது சாதி, நமது கிராமம். நாடு பலவீனமாக இருந்தபோதிலும் சமூக அமைப்பு எப்போதுமே வலுவாகவே இருந்து வந்துள்ளது. எனவே ஒடுக்குமுறை அரசு நிர்வாகம் மூலம் வருவதில்லை. சமூகத்தின் உயர்ந்த சாதியினரால் வந்தது. இந்த ஒடுக்குமுறையில் இருந்து நம்மைக் காப்பாற்ற புத்தர் போன்ற மகான்கள் நமக்கு தொடர்ந்து தேவைப்பட்டார்கள்.

வரலாற்று ரீதியாக இந்தியாவில் அதிகாரம் பரவலாக்கப்பட்டிருந்ததால், கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவால் கூட்டாட்சி ஜனநாயகமாகத்தான் மாற முடிந்தது. ஆனால் சீனாவால் எதேச்சதிகார நாடாக மாற முடிந்தது. வரலாறு உணர்த்தும் பாடம் என்னவென்றால், காரியம் நடக்கவேண்டுமென்றால் வலுவான அரசு தேவை. வலுவான சமூகம் இருந்தால்தான் அரசு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும்.

சீன அரசு இந்திய அரசை விட பிரபலமாக இருக்கிறது. அதற்குக் காரணம் அரசின் சிறப்பான செயல்பாடு. வறுமையை முற்றிலும் ஒழித்ததோடு, ஏழை நாட்டை நடுத்தர மக்கள் வசிக்கும் நாடாக மாற்றியிருக்கிறது. அதோடு சிறந்த நிர்வாகத்தையும் அளித்து வருகிறது. இதன் காரணமாக சிறந்த கல்வி, சுகாதாரம், சாதாரண மக்களின் நல்வாழ்வை உறுதி செய்திருக்கிறது. இந்த வெற்றியின் ரகசியம் எதேச்சதிகாரமோ அல்லது சர்வாதிகாரமோ அல்ல.

நாட்டின் செயல்திறனை மேம்படுத்தியதுதான். தேர்தல் இந்திய மக்களுக்கு அதிக சுதந்திரத்தை அளித்திருப்பது போல், சீன அரசு தனது மக்களுக்கு சிறந்த நிர்வாகம் மூலம் ஸ்திரமான வாழ்க்கையை அளித்திருக்கிறது. அதற்காக சீன அரசு முறைக்கு இந்தியர்கள் மாறிக்கொள்ள வேண்டும் என்பதல்ல அர்த்தம். இரு நாட்டு மக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்திய ஜனநாயகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் நமக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றன.

சீன அரசு தனது அதிகாரிகளை ஊக்கப்படுத்தி, திறம்பட செயல்பட வைத்ததன் மூலம் அரசின் செயல்திறனை அதிகரித்துள்ளது. அதிகாரிகளை கண்காணித்து திறமையானவர்களை அங்கீகரித்துள்ளது. சீனாவில் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு கிடையாது. மக்களுக்கு செய்யும் சேவையின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து அதிகாரிகளுமே மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக அனைவரும் ஏற்றுக் கொண்ட சீர்திருத்தங்களைக் கூட அமல் செய்ய எந்தத் தலைவருக்கும் துணிச்சல் இல்லாததால், இந்திய அதிகார வர்க்கம் பல ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு வருகிறது. நேர்மையான, வெளிப்படையான வரி வசூல் முறை மூலம் அதிக வரி வசூலிக்க முடியும். போலீஸ், நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்தத்துக்கும் இது பொருந்தும்.

சுயநலத்துடன் கூடிய எதிர்ப்புகளைத் தாண்டி, நாட்டின் செயல்திறனை அதிகரிக்கும் வலுவான தலைவராக, துணிச்சல் மிக்க தலைவராக நரேந்திர மோடி இருப்பாரா? குஜராத் மாநிலத்திலும் மத்திய அரசிலும் அவருக்கு ஏகப்பட்ட அனுபவம் இருக்கிறது. சுயநலக் கூட்டத்தை எதிர்கொண்டால் ஏற்படும் இடர்களைப் பற்றியும் அவருக்குத் தெரியும். முதல் கட்டமாக, இருக்கும் சட்டங்களை தீவிரமாக அமல் செய்ய வேண்டும்.

புதிய சட்டங்களை பிறகு கொண்டு வரலாம். என்ன கொள்கை என்பதல்ல முக்கியம். அதை எப்படி அமல் செய்வது என்பதுதான் முக்கியம் என்ன செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மையான கேள்வி, அதை எப்படி செய்ய வேண்டும் என்பதுதான். இந்தியாவில் பல சட்டங்கள் உள்ளன. ஆனால் சீனாவில் ஒழுங்கு இருக்கிறது. நமக்கு சட்டமும் வேண்டும், ஒழுங்கும் வேண்டும்.

இந்தியாவைப் பொருத்தவரை மத்தியில் மட்டும் அதிகாரம் குவிந்து கிடக்கும் நிலை ஏற்றதல்ல என்பதால், இந்திய பிரதமர் மத்தியிலும் மாநிலங்களிலும் அரசு நிர்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும். பிரதமர் மோடிக்கு மக்கள் பெரும்பான்மை பலத்தை அளித்திருக்கிறார்கள். நிர்வாகச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு இது நல்ல வாய்ப்பாகும்.

அரசு அமைப்புகளை சீரமைப்பது, பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதை விட கஷ்டமான காரியம்தான்.ஆனால் அதன் பலன் மிகவும் அதிகமாக இருக்கும். இதில் மோடிக்கு வெற்றி கிடைத்துவிட்டால், இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த தலைவராக மட்டுமல்லாது, `குறைந்த அரசு, அதிக நிர்வாகம்' என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றிய தலைவராகவும் அறியப்படுவார். இந்தியா தனது மக்களை நம்பியபோது, செழித்து வளர்ந்தது. இப்போது மக்கள் அரசை நம்ப வேண்டிய காலகட்டம்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்