ஆ
ம் ஆத்மி கட்சி (ஆஆக) உருவாகி ரொம்ப காலம் எல்லாம் ஆகிவிடவில்லை. 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ல் உருவானது. ‘அரசியல் ஒரு சாக்கடை - தேங்கும் குட்டை’ என வர்ணித்து ஊழலுக்கு எதிராகப் போராடியவர்களே அரசியலில் குதித்த நாள் அது. 2010-ல் நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடந்தபோது, அண்ணா ஹசாரே மட்டுமே முக்கியத் தலைவராகத் திகழ்ந்தார். அவரைத்தான் ஊழலுக்கு எதிரான உருவமாக எல்லோரும் பார்த்தார்கள். அப்போது ஆதரவுப் போராட்டங்களை நடத்தியவர் அர்விந்த் கேஜ்ரிவால்தான்.
இந்தப் புதிய சக்திக்கு எந்த உருவமும் இல்லை. ‘ஜன் லோக்பால்’ மூலம் ஊழலை ஒழிக்க வேண்டும் என விரும்பியதைத் தவிர, வேறு எந்தக் கொள்கையும் இதற்கு இல்லை. எந்தக் கொள்கையும் இல்லாததாலேயே, நாடு முழுவதிலும் இருந்து பலர் இந்த இயக்கத்தில் இணைந்தார்கள். மேடைகளில் அமர்ந்தார்கள். டிவி, சமூக வலைதளங்களில் ஹசாரேயின் கருத்துக்கள் அதிகம் இடம்பெற்றபோது, இயக்கம் புகழடைந்தது.
ஆரம்ப நாட்களில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நோக்கம், வழிமுறைகள் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. கேள்வி கேட்டவர்கள் கேலிக்கு உள்ளானார்கள். என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு அர்விந்த் கேஜ்ரிவாலை காட்டினார்கள். அவர் சொன்னது, பொருளற்ற, நம்ப முடியாத விஷயமாக இருந்தது.
‘என் தலைவன் ஒரு திருடன்..’ என்ற கூச்சல் போடும் இவர்களுக்கு என்ன கொள்கை இருக்கப் போகிறது? நாடாளுமன்றத்தைத் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் கூடாரம் என அழைத்தார்கள். அரசியல்வாதிகள் அல்லாத, நோபல் பரிசு, மகசாசே விருது வாங்கியவர்கள்தான் ‘ஜன் லோக்பால்’ அமைப்பில் இருக்க வேண்டும் என்றார்கள். சிபிஐ அமைப்பே வேண்டாம் என்றார்கள். கடைசியில், ‘சிஸ்டத்தை’ மாற்ற வேண்டும் என்றால் வேறு வழியில்லை எனக் கூறி அத்தனை பேரும் அரசியல்வாதிகளாகி விட்டார்கள்.
தற்போது அரசியலில் இருப்பவர்களைவிட, 20 ஆண்டுக்கும் குறைந்த வயதுடைய இளைஞர்களால் உருவான இயக்கம் அரசியல் கட்சியானபோது, அவர்களுக்கு இடையே ஒரு புரிதல் இல்லாமல் போனது. ஆட்சி அதிகாரத்தால், ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம், ஊழலற்ற ஆட்சி நடத்தி, முன்மாதிரியாக இருக்க வேண்டும் என மாறிப்போனது.
ஆனால் இது சரிவராது. அசாமில் பிரபலமான மாணவர் இயக்கம், அசாம் கண பரிஷத் (ஏஜிபி) கட்சியாக மாறி, பின்னர் இருந்த இடம் தெரியாமல் போனது இதற்கு உதாரணம். ‘வெளிநாட்டவரை வெளியேற்றுவோம்’ என்ற கோஷத்துடன், 1985-ல் நடந்த முதல் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைப் போன்றே மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால் அதன்பிறகு கலைந்து போனார்கள். வெளிநாட்டவருக்கு எதிரான இயக்கங்களில் முக்கியப் பங்காற்றிய பலர் இப்போது பாஜகவில் இருக்கிறார்கள். முதல்வர் சர்வானந்த சோனோவால் மற்றும் அவரின் முக்கிய அமைச்சரான ஹிமாந்த விஸ்வ சர்மா ஆகியோர் இதில் அடக்கம். கடந்த காலங்களில் இடதுசாரிகளுடன் இணைந்திருந்த அசாம் கண பரிஷத் கட்சி இப்போது பாஜகவின் கூட்டணிக் கட்சியாக உள்ளது. இதனால் தெரிய வருவது என்னவென்றால், நோக்கம் நிறைவேறவில்லை என்றாலும், கொள்கை இல்லாவிட்டாலும், கட்சி காணாமல் போய்விடும் என்பதுதான்.
ஆம் ஆத்மி கட்சிக்கும் இதே நிலைமை வந்திருக்கிறது. அதன் முக்கியத் தலைவர்கள் பலர் மனக் கசப்புடன் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷணும் போட்டிக் கட்சியை ஆரம்பித்து விட்டனர். ‘அதிகார ஆசை பிடித்தவர்..’ என கேஜ்ரிவாலை அண்ணா ஹசாரேவும் மயங்க் காந்தியும் விமர்சித்து வருகிறார்கள். சமீபமாக, கட்சியின் பஞ்சாப் தலைமை இவரைத் திட்டித் தீர்த்தது.
அசாம் கண பரிஷத் போன்று இயக்கமாக இருந்து சிறிய அரசியல் கட்சிகளாக மாறியவை பல இருந்தாலும், ஆம் ஆத்மிக்கு மட்டுமே தன்னிகரற்றத் தலைவராக கேஜ்ரிவால் கிடைத்திருக்கிறார். நரேந்திர மோடியைப் போன்றே 2010 முதல் கடந்த 8 ஆண்டுகளாக, இவரும் இரக்கமற்ற அதிகார அரசியல் நடத்தி வருகிறார். இதனால், ஊழல் ஒழிப்புக் கொள்கையை மறந்து, துடிப்பான இளைஞர்களை இழந்து, தனிநபர் துதி பாடும் கட்சியாக மாறி விட்டது. போட்டியோ அல்லது எதிர்ப்போ வரும்போது, மோடியைப் போன்றே கேஜ்ரிவாலும் அதிரடியாகக் களம் புகுந்து எதிரிகளைத் துவம்சம் செய்துவிடுவார்.
ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இவரே தேர்வு செய்த பலரை ஊழல் காரணமாகவும் மற்ற குற்றங்கள் காரணமாகவும் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஊழலற்ற ஆட்சி என்ற கவர்ச்சி பறிபோனது. வழக்குகள் விசாரணை வேகம் எடுத்ததால், அருண் ஜேட்லிக்கு எதிரான வழக்கில், கேஜ்ரிவாலுக்கே பாதிப்பு ஏற்பட்டது. அவர் சந்திக்கும் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளுமே இப்படிப்பட்டவைதான் என்பது அவருக்குத்தெரியும். அதனால்தான் இவர் போதைக் கடத்தல் புகார் சுமத்திய பஞ்சாப் முன்னாள் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதனால், அரசியல் செல்வாக்கு உயர்வுக்குக் காரணமான இவர் மீதான நம்பகத்தன்மை அடிபட்டுப் போய்விட்டது. அச்சமற்ற போராளி என்ற பெயரும் அடிவாங்கியிருக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் செல்வாக்குடன் ஒப்பிடும்போது, பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் கட்சி இன்னமும் செல்வாக்குடன் இருக்கிறது. கட்சியின் புத்திசாலித் தொண்டர்களால் டெல்லி ஏழைகளின் மத்தியில் வலுவாக இருக்கிறது. நடுத்தர வர்க்கம் கட்சியைக் கைவிட்டு விட்டது. இருந்தாலும் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. மம்தா பானர்ஜிக்கு இணையாக வளர்ச்சி அடைய விரும்பி, கடைசியில் டெல்லியோடு குறுகிப் போனது. இதில் கேஜ்ரிவாலுக்கும் அவரது கட்சிக்கும் உடன்பாடில்லை. ஆட்சி முறையை மாற்றி இந்தியாவை காப்பாற்ற வந்தவர்கள் இவர்கள். இப்போது அது முடிந்துபோய் விட்டது. மீண்டும் அவர்கள் எழுச்சி பெறுவார்களா? அரசியலில் முடியாதது என்று எதுவுமே சொல்ல முடியாது. மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி பெறுவதைப் பார்க்கலாம். ஆனால் இந்த முறையாவது அவதூறு அரசியல் செய்யாமல் இருப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
சேகர் குப்தா,
‘தி பிரிண்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்
தமிழில்: எஸ். ரவீந்திரன்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago