“வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் காலூன்ற ஒரு தேசிய கட்சி சதி செய்கிறது. இதற்கு ‘ஆபரேஷன் திராவிடம்’ என்று பெயர் சூட்டி ரூ. 4,800 கோடியை அந்த கட்சி ஒதுக்கியுள்ளது” என்று தெலுங்கு நடிகர் சிவாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி. இவர் தமிழில் ‘காதல் சுகமானது’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார், சில படங்களை தயாரித்துள்ளார். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது நடந்த போராட்டங்களில், மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என குரல் கொடுத்தார். பாஜகவில் சேர்ந்து, மாநிலத்தை பிரித்த காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்தார். சில மாதங்கள் வரை எந்த கட்சியிலும் இல்லாமல் சமூக பிரச்சினைகளை மட்டும் சமூகவலைதளங்களில் சுட்டிக் காட்டி வந்தார்.
வீடியோ வெளியீடு
இந்நிலையில் நேற்று மாலை இவர், விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு வீடியோவை வெளியிட்டு யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசியதாவது:
ஒரு தேசிய கட்சி, வரும் 2019-ல் நடைபெற உள்ள மக்களவை மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில், தென்னிந்தியாவில் காலூன்ற பல சதிகளைச் செய்ய ‘ஆபரேஷன் திராவிடம்’ என பெயர் சூட்டியுள்ளது. தமிழகம், கேரளாவுக்கு ‘ஆபரேஷன் ராவணா’, ஆந்திரா, தெலங்கானாவுக்கு ‘ஆபரேஷன் கருடா’ கர்நாடகத்துக்கு ‘ஆபரேஷன் குமார்’ என அந்த தேசிய கட்சி பெயர் சூட்டி உள்ளது.
இந்த அரசியல் ஆபரேஷன்களை நடத்த ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ எனப்படும் ரகசிய நபர்கள் மூலம் அந்த கட்சி, 4 மாநிலங்களில் கடந்த 2017-ம் ஆண்டு முதலே அரசியல் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டது. இதனால் அந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளில் உட்பூசல் ஏற்படும். பலர் தாய் கட்சிகளில் இருந்து வெளியேறுவார்கள். பலர் புதிய கட்சிகளை தொடங்குவார்கள். மக்களைக் குழப்பும் பல தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புவார்கள். இதற்கென தனி அமைப்பையே அந்த தேசிய கட்சி உருவாக்கி உள்ளது. மேலும் அரசியல் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ரூ. 4,800 கோடியை அந்த கட்சி ஒதுக்கி செலவிட்டு வருகிறது.
இதில் சிலர் பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் சக்கர வியூகத்தில் விழுந்து பலியாக உள்ளனர். குறிப்பாக ஆந்திராவில் பெரும் கலவரம் நடக்க உள்ளது. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் குண்டூர் அல்லது ஹைதராபாத்தில் தாக்கப்படுவார். இதற்காக ஒடிஷா, பீஹார் மாநிலங்களில் இருந்து கூலிப்படை வரவழைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை அரங்கேற்றிய பின்னர், ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் பணிகள் நடைபெறும். இதனை காரணமாக கொண்டு வரும் செப்டம்பரில் தற்போதைய ஆந்திர ஆட்சி கலைக்கப்படும்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல வழக்குகள் பதிவாகும். ஒரு கட்டத்தில் சிபிஐ விசாரணைக்கு கூட உத்தரவிடப்படும். இதன் மூலம் தெலுங்கு தேச கட்சிக்கு அவப்பெயரை உருவாக்க அந்த தேசிய கட்சி திட்டம் தீட்டியுள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடுவை பொருளாதாரரீதியாகவும் நிலை குலைய செய்யவும் திட்டம் தீட்டியுள்ளது.
புதிதாக கட்சி தொடங்கி, தேர்தலை சந்திக்காத ஒரு கட்சி தலைவரையும் தேசிய கட்சி விட்டு வைக்க வில்லை. அவர் விரைவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவார். இதற்கு அடிபணிந்தது போல், தேசிய கட்சி ஒரு சிறப்பு நிதியை ஆந்திராவுக்கு வழங்கும். இவரை உபயோகப்படுத்தி கொண்டு அடுத்த தேர்தலில் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பேரமும் பேசப்பட்டுள்ளது. இறுதியில், சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த பின்னர், தற்போதைய எதிர்க்கட்சி, புதிய கட்சியுடன் இணைந்து தனது கட்சியை சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதியை ஆந்திராவின் முதல்வராக நியமிக்கும்.
கடந்த 6 மாதங்களாக நான் டெல்லியில் தங்கி இருந்தபோது, அந்த ஸ்லீப்பர் செல்லில் உள்ளவர்களில் ஒருவர் இந்த தகவல்களை எனக்கு தெரிவித்தார். ஆனால், இப்போதும்கூட நான் இதனை தெரிவிக்காவிட்டால், ஆந்திர மக்கள் என்னை மன்னிக்கமாட்டார்கள். ஆந்திரா மட்டுமின்றி, தென் மாநிலங்களில் நம்பக்கூட முடியாத பல செயல்களை வெற்றிகரமாக நிறைவேற்ற அந்த தேசிய கட்சி கீழ்த்தரமான செயல்களில் கூட ஈடுபட தயங்காது. பொதுமக்கள் ‘அந்த’ தேசிய கட்சியின் சதியில் விழாமல் விழித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நடிகர் சிவாஜி கூறினார்.
இது குறித்து ஆந்திரா, தெலங்கானா அரசியலில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. தெலுங்கு ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள் கூறியபோது, “அந்த தேசிய கட்சியின் அரசியல் விளையாட்டை ஆந்திராவில் அரங்கேற்ற விட மாட் sடோம்” என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago