ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கோரியுள்ளனனர்.
மேலும் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த வகையில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் அவரின் தந்தையும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கவில்லை.
ஆனால், கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக அனுமதி பெற்றுத் தந்தார். இதற்காக கார்த்தி சிதம்பரம் தனது அட்வான்டேஜ் ஸ்டிராடஜ் கன்சல்டிங் பிரைவேட் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் குறிப்பிடத்தகுந்த ஆதாரம் கிடைத்ததையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, லண்டன் சென்றுவிட்டு நேற்று காலை கார்த்தி சிதம்பரம் சென்னை வந்தார்.
விமான நிலையத்திலேயே அவரை மடக்கிய சிபிஐ சிறப்பு பொருளாதார பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். அவரை டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த ஒருநாள் மட்டும் சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது..
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்திம் விசாரணை நடத்த நீதிமன்றம் அளித்த ஒரு நாள் காவல் முடிந்ததையடுத்து, பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் அவரை ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்த ப.சிதம்பரம் தைரியமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன் சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 14 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார்.
கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க எடுத்த ஒருநாள் முழுவதும் சிபிஐ அதிகாரிகளுக்கு வீணாகப் போனது. கார்த்தியின் உடல்நிலை சீராக இருக்கும்போது, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இதயசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றக் கோரியது வியப்பாக இருந்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரத்தின் ஏஎஸ்சிபி நிறுவனம் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கார்த்தி சிதம்பரத்துக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதற்காக, ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்துக்கு பணம் அனுப்பப்பட்டதற்கான இன்வாய்ஸ் உள்ளிட்டவற்றையும் சிபிஐ கைப்பற்றியுள்ளது. இதுதொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டியிருப்பதால், 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கும் அளவுக்கும் கார்த்தி சிதம்பரம் எந்த ஆதாரமும் இல்லை. அவருக்கு முறையாக சம்மனும் அளிக்கவில்லை. சம்மன் அனுப்பாதபோது, கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று சிபிஐ தரப்பில் எப்படி கூற முடியும் என்று வாதிட்டார்.
இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்த போது, ப.சிதம்பரம்தான் நிதி அமைச்சராக இருந்தார். அவரின் அனுமதியுடன்தான் இந்த அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கும் என்பதால், அவரிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
36 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago