பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியுள்ளது. அந்த கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவையில் அமளி நிலவியதால் நோட்டீஸ் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இதனால் தெலுங்கு தேசம் சார்பில் வரும் திங்கள்கிழமை மீண்டும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இதற்கு காங்கிரஸ், திரிண மூல் உள்ளிட்ட 8 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டில் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது ஆந்திராவுக்கு உதவும் வகையில் 19 அம்ச மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆந்திராவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறப்பு அந்தஸ்து வழங்குவது, போலாவரம் அணைக்கட்டு திட்டத்துக்கு சிறப்பு நிதி உள்ளிட்ட அம்சங்கள் மாநில பிரிவினை மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தன.
கடந்த 2014 மக்களவை, ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசமும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்றது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியைப் பிடித்தது. மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி வந்தார். ஆனால் மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டிலும் ஆந்திராவுக்கான சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக தெலுங்கு தேசத்துக்கும் பாஜகவுக்கான இடைவெளி அதிகரித்தது. இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன. மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த அஷோக் கஜபதி ராஜு மற்றும் சுஜனா சவுத்ரி ஆகி யோர் அண்மையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறவில்லை.
இந்நிலையில், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக அறிவித்தார். அந்த கட்சியின் எம்பி சுப்பாரெட்டி நேற்றுமுன்தினம் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை நாடாளுமன்ற செயலாளரிடம் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அன்றிரவு அமராவதியில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் உயர்நிலைக் குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாமா அல்லது ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கலாமா என ஆலோசிக்கப்பட்டது.
முதலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு செய்தால், சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு நற்பெயர் வந்துவிடும். என்பதால் நேற்று காலை டெலிகான்பரன்ஸ் மூலம் கட்சியின் உயர்நிலைக் குழுவுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
மக்களவையில் அமளி
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் விலகுவது என்றும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக சந்திரபாபு நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற் கான நோட்டீஸை மக்களவை சபாநாயகரிடம் நேற்று தெலுங்கு தேசம் கட்சி வழங்கியது. ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப் பட்டிருக்கிறது.
இந்த நோட்டீஸை எடுத்துக் கொள்ள குறைந்தபட்சம் 50 எம்பிக்கள் எழுந்து நிற்க வேண்டும். மக்களவையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டதால் எம்பிக்களை எண்ண முடியவில்லை என்று கூறிய சபாநாயகர் நோட்டீஸை எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
இதனால் இரு கட்சிகளும் வரும் திங்கட்கிழமை மீண்டும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்க உள்ளன. இதுகுறித்து தெலுங்கு தேசம் எம்.பி. ரமேஷ் கூறியபோது, “வரும் திங்கள்கிழமை 54 எம்.பி.க்களின் கையெழுத்தை பெற்று மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை வழங்குவோம்” என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடுவின் முடிவை வரவேற்பதாகவும் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இதேபோன்று, காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், எம்ஐ எம், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பி விஜய்சாய் ரெட்டி கூறியபோது, “தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago