டெல்லியில் தமிழக மாணவர்கள் ஆக்கிரமிப்பா?- உண்மை என்ன?

By ஆர்.ஷபிமுன்னா

டெல்லி கல்வி நிலையங்களில் தமிழக மாணவர்கள் அதிகம் சேர்வதால் அம்மாநிலத்தவர்கள் வாய்ப்பை இழப்பதாகப் புகார் எழுந்துள்ளது. முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் புகாருக்கு நடிகர் பிரகாஷ்ராஜும் தெரிவித்த ஆதரவில் துளியும் உண்மை இல்லை எனத் தெரியவந்துள்ளது.

டெல்லியில் மே 12-ல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் தீவிரப் பிரச்சாரம் நிலவுகிறது. இதில் முதல்வர் கேஜ்ரிவால் ஒரு குரல் பதிவை  வெளியிட்டார். அதில், தமிழக மாணவர்களின் ஆக்கிரமிப்பால் டெல்லி கல்வி நிலையங்களில் தம் மாநிலத்தவர் வாய்ப்பை இழப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். டெல்லியில் மட்டும் உலவி வந்த இந்தப் பதிவின் மீது மூன்று தினங்களுக்கு முன் அங்கு ஆம் ஆத்மியின் பிரச்சாரத்திற்கு வந்த நடிகர் பிரகாஷ்ராஜிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு அவரும் கேஜ்ரிவாலின் கருத்தை ஆதரிப்பதாகக் கூறியது தமிழகத்திலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

டெல்லியில், ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யூ), டெல்லி, ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ), அம்பேத்கர் மற்றும் இந்திரபிரஸ்தா ஆகிய பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன. இதில், முதல் மூன்று மிகவும் பழமையான மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் மத்தியப் பல்கலைகழகங்கள் ஆகும். மற்ற இரண்டும் டெல்லி மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள். இவற்றில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட மாநிலத்தவருக்கு என எந்த இட ஒதுக்கீடும் கிடையாது.

ஜேஎன்யூ மற்றும் ஜேஎம்ஐயில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 58 கல்லூரிகளில் நிர்வாகம், ஆசிரியர் கல்வி உள்ளிட்ட ஆறு வகை தவிர அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. உயர்கல்விக்கு மற்ற மத்தியப் பல்கலைக்கழகங்களைப் போல் டெல்லி பல்கலைக்கழகத்திலும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு எஸ்.சி., எஸ்.டி.யுடன் காஷ்மீரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு மட்டும் ஒதுக்கீடு உள்ளது. மற்ற அனைவரும் பொதுப்பிரிவிலேயே சேர்க்கை பெறவேண்டி உள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் அனைத்து மாநிலத்தவர்களைப் போல் தமிழக மாணவர்களும் தேர்வாகி அனுமதி பெறுகின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்பானிஷ் மொழித்துறை இணைப்பேராசிரியர் விஜயா வெங்கட்ராமன் கூறும்போது, ''2016-ல் மட்டும் டெல்லியின் பிரபல ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் சுமார் 80 சதவிகிதம் தமிழக மாணவர்கள் சேர்ந்தனர். இதற்கு அதிக மதிப்பெண் பெற்ற தமிழர்கள் பெரும் அளவில் அக்கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தது காரணமானது. அப்போது முதல், டெல்லியின் கல்வி நிலையங்களில் தமிழர்கள் ஆதிக்கம் நிலவுவதாகவும், இதனால் டெல்லிவாழ் மாணவர்கள் தம் வாய்ப்பை இழப்பதாகவும் புகார் அதிகரித்தது. ஆனால், உண்மையில் டெல்லி உள்ளிட்ட மத்தியப் பல்கலைக்கழகங்களில் உ.பி., பிஹார், ஹரியாணா மாநிலத்தவர்களை விடக் குறைந்த எண்ணிக்கையிலேயே தமிழர்கள் பயில்கின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகளால் புதிய கல்லூரிகள் தொடங்குவதே தீர்வாக அமையும்'' எனத் தெரிவித்தார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் 58-ல் 27 கல்லூரிகளின் நிர்வாகம் மட்டும் யூனியன் பிரதேசம் காரணமாக டெல்லி அரசின் கீழ் உள்ளது. இதனால், ஆம் ஆத்மி கட்சி மட்டும் தொடர்ந்து தனது தேர்தல் அறிக்கைகளில் டெல்லி மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிப்பதாக வாக்குறுதி அளித்து வருகிறது. ஆனால், மத்திய பல்கலைக்கழகத்தில் மாநிலத்தினருக்கு ஒதுக்கீடு அளிக்க நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். மற்ற மாநிலத்தினரைப் போல், டெல்லியில் வந்து வந்து தமிழர்கள் கல்வி பயில இந்த அளவிற்கு சிறந்த மத்தியப் பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் இல்லாதது காரணம் ஆகும். இவற்றின் கல்விக்கட்டணங்கள் மிகவும் குறைவு.

டெல்லியின் அருகிலுள்ள உ.பி.யில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், இந்து பனாரஸ் பல்கலைல்கழகம், பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வட மாநில மாணவர்களே அதிகம் பயில்கின்றனர். இதுபோன்ற புகாரைத் தவிர்க்கவே இரண்டாம் முறை ஆட்சிசெய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைத்து மாநிலங்களிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களை அமைத்தது. ஆனால், தமிழகத்தின் திருவாரூரில் உள்ளது உட்பட அனைத்து புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் அதன் முழுப்பலன் அம்மாநிலத்தினருக்குக் கிடைக்கவில்லை.

காலியாகும் தமிழ்த் துறைகள்

டெல்லிக்கு அருகிலுள்ள மத்திய மற்றும் தென் மாநில அரசுகளின் நிதி உதவிகளில் பல பள்ளிகளும் டெல்லியில் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றாக டெல்லி தமிழ் கல்விக் கழகம் சார்பில் ஏழு பள்ளிகளும் செயல்படுகின்றன.  தொடக்கக் காலங்களைப் போல் அன்றி அதில் வட மாநிலத்து மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்பள்ளிகளில் முடிக்கும் தமிழக மாணவர்களுக்காக டெல்லி பல்கலைக்கழத்தின் பல கல்லூரிகளில் தமிழ்த் துறை இருந்தது. அவை கடந்த 15 ஆண்டுகளாக படிப்படியாக மூடப்பட்டு அப்பணியிடங்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

இதனால், டெல்லிவாழ் தமிழர்கள் தம் குழந்தைகளின் தமிழ் கல்விக்காக தமிழகத்திற்கு அனுப்பி படிக்க வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மீதான செய்தியை கடந்த பிப்ரவரி 7-ல் ‘இந்து தமிழ்’ வெளியிட்டு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தது. இதன் தாக்கமாக, தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு இல்லத்தில் டெல்லியின் தமிழர்களான பேராசிரியர்களின் ஆலோசனைல் கூட்டம் நடத்தியது. அதில், மீண்டும் தமிழ்த் துறைகள் செயல்படவும், தமிழர்களுக்காக ஒரு கல்லூரி தொடங்கவும் முயற்சி எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்திற்குப் பின் அந்த அரசு முயற்சி எந்த நடவடிக்கையும் இன்றி அப்படியே முடங்கியுள்ளது. இதன் பிறகு தயாள்சிங் கல்லூரியிலும் ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஓய்வுபெற்று அவரது பணியும் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்