ரயிலில் எஸ்.எம்.எஸ். மூலம் உணவு சேவை: செப்.25 முதல் சோதனை முயற்சி

ரயில் பயணத்தில்போதே பயணிகள் தங்களுக்குத் தேவையான உணவு வகைகளை எஸ்.எம்.எஸ். மூலம் ஆர்டர் செய்து பெறும் வசதியை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.

இந்தத் திட்டம், சில ரயில்களில் மட்டும் இம்மாதம் 25-ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்படவுள்ளது. பின்னர், முழுமையாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, பிரபல உணவு விடுதிகளுடனும் ரயில்வே அமைச்சகம் கைகோத்துள்ளது.

'இ-கேட்டரிங்' சேவையின் ஒரு பகுதியாக‌ இந்தப் புதிய திட்டம் இருக்கும் என்றும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கான எண்ணை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக‌ ஈடுபட்டுள்ளது என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ரயில் பயணி ஒருவர் குறிப்பிட்ட எண்ணுக்குத் தன் பி.என்.ஆர். எண்ணை அனுப்ப வேண்டும். பின்னர் அந்த பி.என்.ஆர்.ன் நிலை, எந்தப் பெட்டி என்பதெல்லாம் இணையத்தில் பரிசோதிக்கப்படும். அதன் பிறகு இந்தத் திட்டத்துக்காகவே தனியாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழுவினரிடமிருந்து அந்தப் பயணிக்கு அழைப்பு வரும். அப்போது அவர்களிடம் தனக்குத் தேவையான உணவு வகைகளைச் சொல்லலாம். உணவு கிடைத்த பிறகு பணம் செலுத்தினால் போதுமானது என்று விவரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தாலும்கூட, ஏற்கெனவே உள்ள உணவு விநியோக முறையும் தொடரும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தற்போது, ரயிலில் பயணம் செய்பவர்கள் அதில் விநியோகிக்கப்படும் உணவு வகைகளை மட்டுமே உட்கொள்ளும் சூழல் இருக்கிறது. அந்த உணவு வகைகள் தொடர்பாகப் பல்வேறு புகார்களும் வந்தவண்ணம் உள்ளன. அதனைத் தொடர்ந்தே ரயில்வே அமைச்சகம் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

பி.டி.ஐ.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE