தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைக்கத் தவறியதன் மூலம், மீண்டும் பிரதமராக நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தியே மகுடம் சூட்டியது போல் ஆகிவிட்டது.
டெல்லியில் தனித்து போட்டியிட்டால் மும்முனைப் போட்டியாகி பாஜக வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கருதினார். இதனால் அங்குள்ள 7 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட கேஜ்ரிவால் எண்ணினார். இத்துடன் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவிலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க அவர் விரும்பினார். ஆனால், டெல்லியில் மட்டும்தான் கூட்டணி என ராகுல் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் கோபமடைந்த கேஜ்ரிவால், ‘மோடி மீண்டும் பிரதமரானால் அதற்கு ராகுல்தான் காரணம்’ எனப் புகார் கூறினார். கூட்டணி முயற்சியும் தோல்வி அடைந்தது. இந்நிலையில், நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் கேஜ்ரிவாலின் கூற்றை நிரூபிப்பதாக அமைந்துள்ளது.
உதாரணமாக, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக போட்டியிடுகிறதா அல்லது எதிர்க்கட்சிகளை எதிர்த்து போட்டியிடுகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. உபியில் அமைந்த மெகா கூட்டணியின் வாக்குகளை காங்கிரஸ் கட்சி பிரித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் சேதம் ஏற்படுத்தியது. இதுபோல, ஆந்திராவில் தெலுங்கு தேசம், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிகளின் வாக்குகளையும் காங்கிரஸ் பிரித்தது. இதன்மூலம், எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முடியாமல் போனதற்கான முழுப்பொறுப்பு ராகுல் காந்தியைத்தான் சேரும். இதனால், ராகுல் காந்தி மோடிக்கு மீண்டும் பிரதமர் மகுடம் சூட்டியது போலாகி விட்டதுஉத்தரபிரதேசத்தில் 2017-ல் பாஜக ஆட்சி அமைந்த பிறகு நடந்த 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தன. இந்த 2 தொகுதியிலும் போட்டியிட்ட அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி வேட்பாளர்களுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆதரவளித்தது. இங்கு காங்கிரஸும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகள் பிரிய வழிவகுத்தது. எனினும் 2 தொகுதிகளிலும் சமாஜ்வாதியே வெற்றி பெற்று, பாஜகவுடன் காங்கிரஸும் தோல்வி அடைந்தது.
இதனால் உற்சாகமடைந்த எதிர்க்கட்சிகள், மக்களவை தேர்தலுக்காக உ.பி.யில் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையை தொடங்கின. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்களது கட்சியின் பலத்தை அறியாமல் அதிக தொகுதிகளைக் கேட்டார். இதனால் காங்கிரஸை சேர்க்க மறுத்த மாயாவதியும், அகிலேஷும், ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங்குடன் சேர்ந்து உபியில் மெகா கூட்டணி அமைத்தனர்.
அடுத்தபடியாக, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் முயற்சித்தார். அதில் கூடுதல் தொகுதிகளை தர ராகுல் மறுத்ததால் கூட்டணி முயற்சி தோல்வி அடைந்தது. மாயாவதியும், அகிலேஷும் தனித்து போட்டியிட்டனர். ஆனாலும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் பாஜக அரசு மீதான அதிருப்தி வாக்குகள் காங்கிரஸுக்கு சாதகமாக அமைந்ததே இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தது.
எனினும், தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸும் ஆந்திரா முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் இக்கூட்டணிக்கு மோசமான தோல்வி கிடைத்தது. தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகர் ராவ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். இதனால், மக்களவைதேர்தலில் காங்கிரஸும் தெலுங்கு தேசமும் தனித்தே போட்டியிட்டன.
உ.பி. தவிர மற்ற மாநிலங்களில் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியை காங்கிரஸ் தொடர்ந்தது. தனது பழைய அனுபவம் காரணமாக, தமிழகத்தில் தொகுதி எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படாமல் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றது. கர்நாடகாவிலும் தங்களது கட்சியின் ஆதரவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடைபெறுவதால் அக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. எனினும், கர்நாடகாவில் மாநில அளவில் எழுந்த கோஷ்டி பூசலை ராகுலால் சரிசெய்ய முடியவில்லை.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ஒத்துழைப்பால் அங்கு கூட்டணி அமைந்தது. அதிலும் பாபா சாஹேப் அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியை சேர்க்க ராகுல் மறுத்து விட்டார்.
மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பிய ராகுல், அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுத்து வந்த இடதுசாரிகளும் மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி சேரவில்லை.
இடதுசாரிகள் ஆட்சி செய்யும் கேரளாவின் வயநாட்டில் 2-வது தொகுதியாக ராகுல் மனு தாக்கல் செய்ததால், இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் இருந்த பிளவு அதிகரித்தது. இதன் தாக்கம் மேற்குவங்கத்திலும் பிரதிபலித்தது.
இறுதியாக, ஆம் ஆத்மியுடனும் கூட்டணி அமைக்க ராகுல் தவறிவிட்டார். ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணிக்காக மம்தாவும் சரத் பவாரும் மேற்கொண்ட முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதன் தாக்கம் டெல்லி மட்டுமல்லாமல் ஹரியாணா மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது.
மேலும் பிரச்சாரத்தின்போது மோடி அரசின் குறைகளை பொதுமக்களிடம் முறையாக எடுத்துக்கூற ராகுல் தவறிவிட்டார். மாறாக ஒரு காலத்தில் தங்கள் கட்சி தோல்வி அடையக் காரணமாக இருந்த போபர்ஸ் ராணுவ பீரங்கி ஊழலைப் போல, மோடி அரசின் ரஃபேல் ஒப்பந்த முறைகேடு பிரச்சினையை கையில் எடுத்தார். இதனால், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக புகார் தெரிவித்தார்.
ஆனால், இதே பாதுகாப்பு பிரச்சினை மோடிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது விமானப்படை மூலம் துல்லியத் தாக்குதல் நடத்தி பொதுமக்களின் தேசிய உணர்வை தூண்டினார் மோடி. இதையே தனது பிரச்சார மேடைகளிலும் பேசினார். அதுவே பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தொடர்ந்து 2-வது முறை (2009) ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி கூட்டணி பேச்சுவார்த்தையை சுமுகமாக முடித்தார். ஆனால், மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியைப் போல, இந்த தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க ராகுல் காந்தி தவறிவிட்டார். இதன்மூலம் அவருக்கு கட்சி நிர்வாகத்தில் அனுபவம் போதாது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago