மேற்குவங்கத்தில் பாஜக பக்கம் சாயும் இடதுசாரி வாக்குகள்: சவாலை சந்திக்கும் மம்தா பானர்ஜி

By நெல்லை ஜெனா

மக்களவைத் தேர்தலில் இந்தமுறை நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள மாநிலம் மேற்குவங்கம். இதற்கு காரணம் இதுவரை இல்லாத அளவு மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸூக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.  

மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளை கைபற்றி மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2009- மக்களவைத் தேர்தலில் அந்த கூட்டணி 13 இடங்களை கைபற்றியது.  

2009- மக்களவைத் தேர்தலில் 15 இடங்களி்ல் வெற்றி பெற்ற நிலையில் திரிணாமுல் 34 இடங்களை கைபற்றியது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 39 சதவீத வாக்குகளையும், இடதுசாரி கூட்டணி 30 சதவீத வாக்குகளையும் பெற்றன.

வாக்கு வங்கி

2014-ம் ஆண்டு  தேர்தலில் 17 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக 2 இடங்களில் வென்றது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் பாஜக கணிசமான வளர்ச்சி பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலி இடதுசாரிக் கூட்டணியை மூன்றாம் இடத்துக்கு தள்ளி பாஜக 2-ம் இடம் பெற்றது. மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதே வேகத்துடன் பாஜக, திரிணாமுல் காங்கிரஸூடன் மோதுகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே அம்மாநிலத்தில் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸூக்கும் இடையே தொடர்ந்து அடிதடி மோதல்கள் நடந்து வருகின்றன. பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வங்காளத்தில் உள்ள இந்து வாக்குகளை குறி வைத்து பாஜக காய் நகர்த்துவதால் அதற்கு சரியான போட்டியை திரிணாமுல் காங்கிரஸ் கொடுத்து வருகிறது. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பாஜகவின் கோஷத்துக்கு போட்டியாக ‘மகாளி’ கோஷத்தை முன் வைக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.

இந்தமுறை 30 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இலக்குடன் திரிணாமுல் காங்கிரஸ் பணியாற்றி வருகிறது. கடந்த முறையை போன்று தற்போது சூழல் இல்லாததற்கு காரணம் இந்த தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் வாக்கு முக்கியமாக கருதப்படுகிறது.

கடந்தமுறை இடதுசாரி கட்சிகள் பெற்ற வாக்குகளில் 10 சதவீதம் கூடுதலாக பாஜகவுக்கு செல்லக்கூடும் என திரிணாமுல் காங்கிரஸ் கருதுகிறது. அவ்வாறு நடந்தால் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதிகள் எண்ணிக்கை 25 ஆக குறையும் என கருதப்படுகிறது.

பாஜகவுக்கு இடதுசாரி வாக்குகள்

இடதுசாரிக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள், நிர்வாகிகளை பொறுத்தவரையில் தங்களுக்கு வலிமை இல்லாத தொகுதிகளில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கோரி வருவதாக கூறப்படுகிறது. இதனை இடதுசாரி கட்சிகளின் மாநில நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், கீழ்மட்ட அளவில் இடதுசாரி கட்சி தொண்டர்கள் மத்தியில் பாஜக ஆதரவு போக்கு காணப்படுகிறது.

அதற்கு காரணம் பல இடங்களில் தங்கள் எதிரியான திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த பாஜகவால் மட்டுமே முடியும் என்ற எண்ணம் இடதுசாரி தொண்டகள் மத்தியில் நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமல்லாமல் பாஜகவும் நமது எதிரி தான் என இடதுசாரிக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் வலியுறுத்தி வருகின்றனபோதிலும் தொண்டர்கள் மனநிலை மாறுப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வழக்கமாக இடதுசாரிக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் நடுத்தர வகுப்பு மக்கள் இந்த முறை பெருமளவு பாஜக மீது ஈர்ப்பு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

பாஜகவை பொறுத்தவரை இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் 15 தொகுதிகளை குறி வைத்து பணியாற்றி வருகிறது. இந்த தொகுதிகளை எப்படியும் கைபற்ற வேண்டும் என தீவிர முயற்சியுடன் பாஜக உள்ளது. இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவு மேற்குவங்க தேர்தலில் வன்முறை நிலவி வருகிறது.

கொல்கத்தா வன்முறை

பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோஷமிட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பாஜக தொண்டர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஸ்வர சந்திர வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைக்கப்பட்டது. இந்த கலவரத்துக்கு பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸூம் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் பிரச்சாரத்தை ஒருநாள் முன்கூட்டியே முடிக்க உத்தரவிட்டுள்ளது. கடைசி நாள் பிரச்சாரம் நடைபெறும் இன்று பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி என இரு தலைவர்களுமே கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

வெற்றி வாய்ப்பு

எனினும் திரிணாமுல் காங்கிரஸ் எத்தனை இடங்களில் தோல்வியடையும் என்பதை முடிவு செய்வது பாஜக அல்ல, மாறாக இடதுசாரிக் கட்சிகளே. இடதுசாரி கட்சிகளின் வாக்குகள் எந்த அளவுக்கு பாஜகவுக்கு செல்கிறது என்பதை பொறுத்து தான் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் வெற்றி எண்ணிக்கை அமையும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்