பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நற்சான்று: தேர்தல் ஆணைய உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய காங்கிரஸ் எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் பேச்சில் நடத்தை விதிமுறை மீறல்கள் ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய காங்கிரஸ் எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தேர்தல் ஆணையம் இதுவரை காங்கிரஸ் கட்சியின் 11 புகார்களில் 6 புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளது. 5புகார்களுக்கு நற்சான்று அளிக்க தேர்தல் ஆணையரில் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை தெரிவிக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது என்று மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். அந்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் 146 பக்கங்கல் கொண்ட மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேன் மனு சிங்வி ஆஜராகினார்.

தேர்தல் விதிமுறை மீறல்

மனுதாரர் தாக்கல் செய்த மனுவில் " தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளில், ராணுவ வீரர்கள் குறித்து எந்தவிதமான விஷயங்களையும் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் பேசுவதற்கு தடைவிதித்திருந்தது. ஆனால், இந்த விதிமுறைகளை மீறி, பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் பேசி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரங்களில் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் வெறுப்புப் பேச்சுகளை  பேசியுள்ளனர்.

தங்களுடைய ஆட்சியில்தான் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் தாக்குதல் நடந்ததாக தொடர்ந்து இருவரும் பேசி வருகின்றனர். குஜராத்தில் பிரதமர் மோடி பேசிய பொதுக்கூட்டத்தில் ராணுவம் குறித்து பேசப்பட்டது, பிஹாரின் சீதாமார்ஹி நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவும் நடத்தை விதிமுறைகளை மீறி பேசியுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பல முறை பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷா பேசியும், வெறுப்புணர்வை பரப்பும் வகையில் பேசும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் கண்டும் காணததுபோல் செயல்படுகிறது. இதுவரை 40 மனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் செயலுக்கு மாறாக இருக்கிறது.

பாஜக வேட்பாளர்களுக்கு ஒரு நியதி, மற்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஒரு நியதி என்பதுபோன்று தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருக்கிறது. திட்டமிட்ட நாங்கள் அளிக்கும் புகார்களுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை.

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதி மீடு 72 மணிநேர தடை விதித்த தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி, அமித் ஷா மீது  எடுக்கவில்லை.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் பல முறை புகார் அளித்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆதலால், தேர்தல் ஆணையத்தை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

6-ம் தேதி கெடு

இந்த மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட 11 புகார்களில் 2 புகார்களுக்கு மட்டுமே தீர்வு கண்டிருந்த நிலையில் மீதமுள்ள அனைத்து புகார்களுக்கும் 6-ம் தேதிக்குள் தீர்வு கண்டு அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த இரு நாட்களில் மட்டும் தேர்தல் ஆணையம் 6 புகார்களுக்கு தீர்வு கண்டு பிரதமர் மோடியின் பேச்சில் தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என்று சான்று அளித்தது. இதில் லாட்டூர், வார்தா ஆகிய இடங்களில் பேசிய பேச்சுக்களும் அடங்கும்.

காரணம் தெரிவிக்க மறுப்பு

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு ஆஜராகினார். அவர் வாதிடுகையில், " தேர்தல் ஆணையம் கடந்த இரு நாட்களில் பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நற்சான்று அளித்து 6 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் 5 உத்தரவுகளுக்கு தேர்தல் ஆணையர்களில் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். என்ன காரணத்துக்காக அவர் எதிர்த்தார் என்று கேட்டதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை.

மோடிக்கு நற்சான்று வழங்கிய அனைத்து உத்தரவுகளிலும் காரணம் கூறப்படவில்லை. நாங்கள் புகார் அளித்து 40 நாட்கள் ஆகிவிட்டது. மோடி, அமித்ஷாவுக்கு நற்சான்று அளித்ததற்கான காரணத்தை கூற தேர்தல் ஆணையம் மறுக்கிறது. ஆதலால், தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய அனுமதிக் வேண்டும் " எனத் தெரிவித்தார்.

8-ம் தேதி விசாரணை

இதைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, " காங்கிரஸ் எம்.பி. தரப்பில் தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவு நகல்களை கூடுதல் பிரமாணப்பத்திரமாகத் தாக்கல் செய்யலாம். வரும் 8-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் " எனத் தெரிவித்தனர்

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

54 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்