இன்றைய தேதிவரை அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடை அளித்தவர்களின் முழுமையான விவரங்கள், தேர்தல் நிதிப் பத்திரங்களின் முழுமையான விவரங்கள் ஆகியவற்றை சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதைத் தடை செய்யவேண்டும். அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்" என்று கோரப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகினார். தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதியும், மத்திய அரசு சார்பில் கே.கே.வேணுகோபாலும் ஆஜராகினார்.
மனுதாரர் சார்பில் பிரசாந்த பூஷன் வாதிடுகையில், " தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக ஆளும் பாஜகவுக்குத்தான் 95 சதவீத நன்கொடைகள் சென்று சேர்ந்துள்ளன. தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில்கூட, தேர்தல் நிதியில் பெரும்பகுதி ஆளும் கட்சிக்குத்தான் சென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
முதலில் அடையாளம் தெரியாதவர்கள் பணமாக அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்தார்கள். இப்போது, தேர்தல் நிதிப்பத்திரங்கள் எனும் பெயரில் வங்கிகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அடையாளம் தெரியாதவர்கள் மூலம் செல்கிறது" எனத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதிடுகையில், "அரசியல் கட்சிகளுக்கு நிதிப்பத்திரங்கள் மூலம் நிதி அளிப்போர் யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு இருக்கிறது. ஆதலால், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஆனால், மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், "அரசியல் கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வெளிப்படைத்தன்மை இல்லை என்பதற்காக தேர்தல் நிதிப்பத்திரங்கள் திட்டத்தை நீதிமன்றம் கொலை செய்துவிடமுடியாது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் சோதனை முயற்சியாக தேர்தல் நிதிப்பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
தேர்தல் ஆணையமோ வாக்காளர்கள், அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதி குறித்த மூலங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்புகிறது. ஆனால், அதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை. வாக்காளர்கள் எதை அறிய வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை " என்று வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள், ''அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்போரின் பணம் உண்மையில் கறுப்புப் பணமா அல்லது வரி செலுத்திய பணமா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? தேர்தல் நிதி அளிப்போரை வங்கிகளுக்கு மட்டுமே அடையாளம் தெரியும். கேஒய்சி படிவத்தை நிரப்பிக் கொடுத்தாலும்கூட, கறுப்புப் பணத்தை எவ்வாறு தடுக்க முடியும்'' என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், வாதங்கள் முடிந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், "இன்றைய தேதி வரை அரசியல் கட்சிகள் அனைத்தும் தாங்கள் பெற்ற தேர்தல் நிதி குறித்த முழுமையான விவரங்களையும், தேர்தல் நிதிப்பத்திரங்கள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு நிதி பெறப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரங்களையும், நிதி அளித்தவர்களின் விவரங்களையும் சீல் வைக்கப்பட்ட கவரில் மே 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்பாக இருக்கும். இந்த வழக்கு குறித்த விரிவான விசாரணை சரியான நேரத்தில் பின்னர் நடைபெறும். இப்போதைக்கு இது இடைக்கால உத்தரவுதான்" எனத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago