ஹைட்ரோகார்பன் மீதான ஆய்வுக்கு அனுமதி பெறுவதற்காக தமிழக அரசுடன் வேதாந்தா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், ஹைட்ரோகார்பன் (மீத்தேன்) மீதான தடையை நீக்க தமிழக அரசு முன்வருமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஒஏஎல்பி-1 முறையில் ஹைட்ரோகார்பன் எடுக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம், 41 வட்டாரங்களில் ஏலம் எடுத்துள்ளது. இதில், தமிழகத்தில் ஆழம் குறைந்த கடல்பகுதிகள் 2 காவிரி டெல்டா பகுதிகளில் அமைந்துள்ளன. இது தவிர, அதன் தரைப்பகுதியில் ஒஎன்ஜிசியும் ஒரு வட்டாரத்தில் ஏலம் எடுத்துள்ளது.
இங்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு முன்பாக வேதாந்தாவும், ஒஎன்ஜிசியும் அதன் நிலப்பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும். இதற்காக, பிஇஎல் (பெட்ரோல் ஆய்வு உரிமம்) பெற தமிழக அரசிடமும், சுற்றுச்சூழல் அனுமதி பெற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும் விண்ணப்பித்துள்ளன.
மீத்தேன் எடுக்க தமிழகத்தில் உள்ள தடையின் காரணமாக, அதற்கான அனுமதி பெறுவது கடினம். இதனால், உரிமம் பெறும் வகையில் மீத்தேன் மீதான தடையை அகற்ற, தமிழக அரசுடன் வேதாந்தா பேசிவருவது தெரியவந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் வேதாந்தா நிறுவனத்தின் செய்திதொடர்பு பிரிவினர் கூறும்போது, "முதலில் ஆய்வு செய்த பிறகே ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி தொடங்கப்படும். நிலத்துக்கு அடியில் படம் எடுக்கும் இந்த ஆய்வினால், சுற்றுச்சுழலுக்கும், விவசாய நிலங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
ஹைட்ரோகார்பன் எடுக்கும்போது விவசாயிகளுக்கு எந்த இழப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம். எனவே, மீத்தேனுக்கான தடையை ரத்து செய்யுமாறு தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இதற்கு ஒரு சில மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறோம். ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி மத்திய அரசு ஏலம் எடுத்த போதே தமிழக அரசிற்கு கடிதம் எழுதி அறிவுறுத்தி உள்ளது" எனத் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கடும் எதிர்ப்பு நிலவும் நிலையில், பிஇஎல் உள்ளிட்ட அனுமதியை அளிப்பது தமிழக அரசுக்கு சவாலாக உள்ளது.
இதற்காக நடத்தப்படும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களில் அனுமதி கிடைப்பதும் கடினமாகி விட்டது. எனவே, கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தாமலேயே வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.டி.கருப்பண்ணன் கடந்த அக்டோபரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சுழல் அமைச்சரான ஹர்ஷவர்தனிடம் மனு அளித்திருந்தார்.
மேலும், வேதாந்தா நிறுவனமும், கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமலேயே உரிமங்கள் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது.
ஆய்வுக்கான அனுமதி பெற்ற பின்னர், டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் உள்ள இடங்கள் கண்டறியப்படும். சுமார் ஒரு வருடம் நடைபெறும் இந்த ஆய்வுக்கு பின், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணியை கிணறுகள் அமைத்து வேதாந்தா நிறுவனம் தொடங்கவுள்ளது.
இதே முறையை, டெல்டாவில் தரைப்பகுதியை ஏலம் எடுத்த ஓஎன்ஜிசியும் செயல்படுத்த உள்ளது. எனினும், இதன் வட்டாரம் அமைந்திருப்பது தரைப்பகுதி என்பதால் கருத்துக்கேட்புக் கூட்டத்தை தவிர்க்க முடியாத நிலை உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago