கட்சிகளின் கதை: காங்கிரஸின் பாதையும் பயணமும் - பன்முகத் தன்மையின் அடையாளம்

By நெல்லை ஜெனா

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நாடு அடிமைப்பட்டு இருந்தபோது, 1885-ம் ஆண்டு தொடங்கப்பட்டது காங்கிரஸ். தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுதலை பெறும் குறிக்கோளுடன் காங்கிரஸ் தொடங்கப்படவில்லை. காங்கிரஸ் என்பதன் அர்த்தமே மாநாடு அல்லது கூட்டம் தான்.

அதாவது ஆண்டுக்கு ஒருமுறை கூடி படித்த இந்தியர்களின் நலனை, கோரிக்கையை ஆங்கில அரசுக்கு முன் வைப்பதே இதன் செயல்திட்டமாக இருந்தது. கல்வி கற்ற இந்தியர்களுக்குத் தேவையானவற்றை பெற்றுத் தரும் நோக்கிலேயே, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன், தாதாபாய் நௌரோஜி போன்றவர்களால் காங்கிரஸ் கட்டியமைக்கப்பட்டது.

பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் முதல் தலைவராக உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். படித்த மேல்தட்டு இந்தியர்களுக்கு வடிகாலாக இருக்கும் என்பதால் ஆங்கிலேயர்களும் இதனை வரவேற்றனர். ஆனால் நடந்ததோ வேறு. படித்த இளைஞர்களை  தேசபக்தியுடன் ஒருங்கிணைக்கும் அமைப்பாக மெல்ல வடிவெடுத்தது.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறை அதிகரிக்க காங்கிரஸின் முகமும் மாறியது. சுதேசி இயக்கம் தொடங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை காங்கிரஸ் கண்ட பல போராட்டங்கள் இறுதியில், தேசம் விடுதலை பெறக் காரணமாக அமைந்தது. தொடக்கம் முதலேயே காங்கிரஸில் பல்வேறு சிந்தனை கொண்ட தலைவர்கள் இருந்தனர்.

காந்தியின் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே மிதவாத எண்ணம் கொண்ட கோபால கிருஷ்ண கோகலேயும், தீவிரப் போராட்ட எண்ணம் கொண்ட பால கங்காதர திலகரும் ஒரே இயக்கத்தில் பயணிக்க முடிந்தது. பின்னாளில் வன்முறை மூலம் ஆங்கிலேயர்களுக்கு பதிலளிக்க முயன்ற சந்திசேகர் ஆசாத், வீர சாவர்க்கர், பகத் சிங் போன்றவர்களையும் தன்னகத்தே கொண்டு காங்கிரஸ் இயங்கியது. எனினும் இவர்கள் தனித்தனி இயக்கங்கள் காணவும் காங்கிரஸில் இருந்த எதிர்ப்பும் காரணமாக அமைந்தது.

நேதாஜி போன்றவர்களைத் தலைவர்களாகவும் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. மகாத்மா காந்தியின் வசீகரமான தலைமை, இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டது. ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவராக, அனைவரையும் கட்டுப்படுத்தும் நபராகவும் அவர் இருந்தார்.

நேரு தலைமையில் காங்கிரஸ்

சுதந்திரத்துக்கு முன்பே முழுமையான அரசியல் இயக்கமாக மாறிவிட்ட காங்கிரஸ் சுதந்திரத்துக்குப் பிறகு ஜவஹர்லால் நேருவின் தலைமையில் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கியது. 1951-52 ஆம் ஆண்டில் முதல் தேர்தலிலேயே இந்திய அரசியல் எதை நோக்கி நகரும் என்பதை உணர்த்தத் தொடங்கியது. சுதந்திரமடைந்தபோது, காங்கிரஸுக்கு மாற்றாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இருந்தது.

ஆனால் காங்கிரஸுக்குள் இருந்த சோஷலிஸ்ட்டுகள் தனி அணியாகப் பிரிந்து புதிய அரசியலை உருவாக்கினர். ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் ஆச்சார்யா நரேந்திர தேவ் ஆகியோர் தலைமையில்  சோஷலிஸ்ட் கட்சி இடதுசாரி சிந்தனையை உள்வாங்கிய அரசியல் அமைப்பாக உருவெடுத்தது. அதுபோலவே காங்கிரஸில் இருந்த வலதுசாரிச் சிந்தனையாளர்களை ஒருங்கிணத்து சியாம பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தை உருவாக்கினார். இதுமட்டுமின்றி வட மத்திய இந்திய விவசாயிகளை மையப்படுத்தி ஜே.பி கிருபாளினி உருவாக்கிய கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியும் மிக முக்கியக் கட்சியாக உருவெடுத்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் காங்கிரஸ் என்ற அமைப்பில் இருந்த வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்ட இயக்கங்கள் தனி அரசியல் இயக்கமாக வேகமாக வளரத் தொடங்கின. இருப்பினும் காங்கிரஸின் செல்வாக்கு என்பது நேரு காலம் முழுவதுமே ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.

இந்திராவும் நெருக்கடி நிலையும்

நேருவின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையேற்ற லால் பகதூர் சாஸ்திரி திடீரென மறைந்து விட சிந்தாந்த அரசியல் இயக்கங்களிடம் இருந்து காங்கிரஸ் வாக்கு வங்கியைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டது. வசீகரமான தலைமை காங்கிரஸுக்குத் தேவை என்ற நிலையில் நேருவின் மகள் இந்திரா காந்தி தலைமை ஏற்க காமராஜர் போன்ற வலிமையான தலைவர்களும் அதற்கு உதவியாக இருந்தனர்.

1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினார் இந்திரா. ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் இதற்குப் பிந்தைய காலம் மிக முக்கியமானது. காங்கிரஸ் என்ற வேரில் இருந்து பிரிந்த அரசியல் இயக்கங்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் திமுக, பஞ்சாபில் அகாலிதளம் என அந்தந்த மாநிலங்களில் கட்சிகள் வலிமை பெறத் தொடங்கின. இதனால் புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டது.

1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 352 இடங்களில் வெற்றி பெற்று அசைக்க முடியாத பிரதமராக உருவெடுத்தார் இந்திரா. பசுமைப் புரட்சி, 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றிபெற்று வங்க தேசத்தை உருவாக்கியது. 1974-ல் அணு சோதனை நடத்தியது போன்றவை இந்திரா காந்தியின் வலிமையைக் கூட்டியது.

இதன் பின் காங்கிரஸில் அவர் ஏற்படுத்திய எதேச்சதிகாரம், நெருக்கடி நிலை அமல் போன்ற காரணங்களால் காங்கிரஸுக்கு எதிரான சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளை ஒருதளத்தில் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களுடன் மாநிலக் கட்சிகளும் கைகோக்க வலிமையான எதிர்ப்பைச் சந்தித்தார் இந்திரா. 1977-ம் ஆண்டு தேர்தலில் பெரும் சக்தியாக உருவெடுத்த ஜனதா கட்சியிடம் பெரும் தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ்.

முதன்முறையாக ஆட்சியைப் பறிகொடுத்து எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சூழ்நிலை இந்திரா காந்திக்கு ஏற்பட்டது. கட்சிக்கு வெளியில் மட்டுமின்றி காங்கிரஸிலேயே இந்திராவுக்கு எதிர்ப்பு உருவானது. கட்சி ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என இரண்டானது. ஆனால் உள்ளுக்குள்ளும், வெளியேயும் எதிரான எதிர்ப்புகள் எல்லாம் நீண்ட நாட்களுக்குத் தொடரவில்லை.

வெவ்வேறு சிந்தனை கொண்ட தலைவர்கள் ஓரணியில் நீண்ட நாட்களுக்குப் பயணிக்க முடியாது என்பதற்கு ஏற்ப ஜனதா கட்சி சிதறியது. இந்திராவின் வசீகரத் தலைமை காங்கிரஸுக்குப் பெரிதும் உதவியது. ஆனால் அதுவே பிற்காலத்தில் காங்கிரஸை வழி நடத்த நேரு குடும்பத்தைத் தவிர மற்றவர்களால் இயலாது என்ற நிலையையும் ஏற்படுத்தி விட்டது.

மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார் இந்திரா காந்தி. ஆனால் 1984-ம் ஆண்டு மரணத்தைத் தழுவ அடுத்த பிரதமரானார் ராஜீவ் காந்தி. ராஜீவ் காந்தியின் 5 ஆண்டு கால ஆட்சியில் உலுக்கிய போபர்ஸ் ஊழல் மீண்டும் காங்கிரஸுக்கு சோதனையை ஏற்படுத்தியது. காங்கிரஸில் இருந்து வெளியேறிய வி.பி.சிங் மீண்டும் ஜனதா கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா தளத்தை உருவாக்கினார்.

ஜன சங்கம் ஜனதாவில் ஐக்கியமாகி, அது உடைந்த போது வெளியே வந்த வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் 1980-ல் பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கினர். இந்த காலகட்டத்தில் வலதுசாரி அரசியல் வேகமெடுக்க பாரதிய ஜனதாவும் வலிமையான அரசியல் இயக்கமாக வளர்ந்தது. எதிரெதிர் கொள்கைகளைக் கொண்ட பாரதிய ஜனதாவும், இடதுசாரிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க ஜனதாதளத்தின் வி.பி.சிங் பிரதமரானார். ஆனால் இந்த ஏற்பாடு நீண்டகாலம் தொடரவில்லை.

ஜனதா என்ற சோஷலிசத் தலைவர்களிடம் இருந்த ஒற்றுமைக் குறைவும், போட்டியும் அந்த அரசை வீழ்த்தின. உடைந்த அணியின் பிரதமர் சந்திரசேகருக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க ஜனதா பரிவாரங்கள் மீண்டும் சிதறின. எதிர்க்கட்சிகள் பலம் குன்றி இருந்த நிலையில் ராஜீவ் காந்தி தலைமையில் மீண்டும் காங்கிரஸ் வலிமை பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம், காங்கிரஸின் பயணத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது. நேரு குடும்பத்தைச் சாராத நரசிம்மராவ் பிரதமரானார். பெரும்பான்மை இல்லாத அரசுக்கு அவர் தலைமை வகித்தபோதிலும் அவர் செயல்படுத்திய பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் குறிப்பிடத்தக்கவை. அடுத்த பல ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மாற்றங்களுக்கு இவை வித்திட்டன. ஆனால் அப்போது இதுகுறித்த ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் ராம ஜென்மபூமி இயக்கம் பெரும் வலிமை பெற பாபர் மசூதி இடிக்கப்பட்டது வலது சாரி அரசியலைக் கூர்மையாக்கியது. இது காங்கிரஸுக்குப் பெரும் சேதாரத்தை உருவாக்கியது. 1996-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது.

பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேவகவுடா, குஜ்ரால் போன்ற பரிசோதனை முதல்வர்கள் பதவியில் அமர்ந்தனர். 1998-ம் ஆண்டு நடந்தபொதுத் தேர்தலிலும் காங்கிரஸ் வலிமை பெற முடியவில்லை. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, வாஜ்பாய் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைத்தது. 13 மாதங்களில் மீண்டும் தேர்தல். மீண்டும் வாஜ்பாய் பதவியில் தொடர்ந்தார்.

இருப்பினும் வலிமையுடைய தனிப்பெரும் கட்சிகளாக காங்கிரஸும், பாஜகவும் உருவெடுத்தன. தேசிய அளவில் போட்டி என்பது இவ்விரு கட்சிகளுக்கு இடையில் தான் என நிலை மாறியது. இவர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் நிலையில் மாநிலக் கட்சிகள் இருந்தன.

சோனியா அரசியல் வருகை

imagesjpgராகுல், சோனியா: கோப்புப் படம்100 

சிறிய இடைவெளிக்குப் பிறகு நேரு குடும்பத் தொடர்பு மீண்டும் காங்கிரஸை தன் வயப்படுத்தியது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். 2004-ம் ஆண்டு காங்கிரஸ் வெறும் 145 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றபோதிலும், முந்தைய காங்கிரஸ் அல்லாத பிரதமர்கள் மேற்கொண்ட சோதனை முயற்சியை முதன்முறையாக காங்கிரஸ் மேற்கொண்டது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி யுகம் ஆரம்பமானது.

2009-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி முழங்க 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது. ஆனால் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல் 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி வலதுசாரி அரசியலுடன், நிர்வாகத் திறன், வளர்ச்சியையும் முன்னிறுத்திய  மோடி அலை என்ற சூறாவளி 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸை கடுமையாகச் சாய்த்தது.

பல ஆண்டுகளாக, பல தேர்தல்களைக் கண்ட காங்கிரஸ் கட்சி முதன்முறையாக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றது. வெறும் 44 இடங்களில் மட்டுமே பெற்ற வெற்றி காங்கிரஸுக்கு, இது,  இதுவரை கண்டிராத மாபெரும் தோல்வியாக அமைந்தது. பிரதமர் மோடி தலைமையில் பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் அல்லாத ஒரு தனிப்பெரும் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றது இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறை.

அதன் பிறகு நடந்த பல சட்டப்பேரவை தேர்தல்களிலும் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் வலிமையான பாஜகவையும், மோடியையும் வீழ்த்த மாநிலக் கட்சிகளுடன் கைகோக்கும் சூழல் ஏற்பட்டது.

2014-ம் ஆண்டு இருந்தநிலை மாறியுள்ள போதிலும், பாஜகவுக்கு நிகரான போட்டியை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் உள்ளது. இருபெரும் வலிமையான தேசியக் கட்சிகள் என்ற நிலை மாறியது. இந்திரா காந்தி காலத்தை போலவே, வலிமையான ஒற்றை அரசியல் கட்சி என்ற இடத்துக்கு பாஜக நகர்ந்தது.

அக்கட்சியை வீழ்த்த காங்கிரஸ் மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. 5 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சி மீதான எதிர்ப்பு உணர்வு, தீவிர வலதுசாரி வெறுப்புணர்வு, மோடி அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு போன்றவை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஒற்றைக் கட்சி, ஒற்றைத் தலைமை என்ற பாஜகவின் அரசியலால் பாதிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் சிலவும் காங்கிரஸுடன் அணி சேர்கின்றன. மோடியை வீழ்த்த வேண்டும் என்ற இலக்கே இந்தத் தேர்தலில் காங்கிரஸின் பிரதான நோக்கம். ஆனால், பாஜகவை வீழ்த்தி மாற்று அரசை உருவாக்க காங்கிரஸ் முன் பல சவால்கள் உள்ளன. அரியணையைக் கைப்பற்ற காங்கிரஸுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க பல தடைகளைத் தகர்க்க வேண்டிய கட்டாயமும் இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு உள்ளது.

காங்கிரஸ் கண்ட தேர்தல்கள்:

* 1951-52 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 489 இடங்களில் காங்கிரஸ் 364 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸைச் சேர்ந்த நேரு பிரதமரானார்.

* 1957-ம் ஆண்டு தேர்தலில் 371 இடங்களில் வெற்றி பெற்று நேரு மீண்டும் பிரதமரானார்.

* 1962-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 361 இடங்கள் பெற்று நேரு பிரதமர் பதவியில் தொடர்ந்தார். பாரதிய ஜனசங்கம் 14 இடங்களிலும், இடதுசாரிக் கட்சிகள் 31 இடங்களிலும் வெற்றி பெற்றன.

* 1967-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 520 இடங்களில் காங்கிரஸ் 283 இடங்களில் வென்றது.

* 1971-ம் ஆண்டு தேர்தலை இந்திரா காந்தி தலைமையில் எதிர்கொண்ட காங்கிரஸ் 352 இடங்களில் வென்றது.

* 1977-ம் ஆண்டு நெருக்கடி நிலைக்குப் பிந்தைய பொதுத்தேர்தலில் முதன்முறையாக 154 இடங்களில் மட்டுமே வென்று காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவியது. ஜனதா கூட்டணி 295 இடங்களைக் கைப்பற்றியது.

* 1980-ம் ஆண்டு தேர்தலில் ஜனதாவின் தோல்விக்குப் பிறகு இந்திரா தலைமையிலான காங்கிரஸ் 353 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.

* 1984-ம் ஆண்டு இந்திராவின் மரணத்தால் ஏற்பட்ட அனுபதாப அலை, காங்கிரஸுக்கு இதுவரை இல்லாத வகையில் 404 இடங்களைப் பெற்றுத் தந்தது. இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார்.

* 1989-ம் ஆண்டு தேர்தலில் 197 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. வி.பி.சிங் தலைமையில் ஜனதாவின் புதிய அமைப்பான ஜனதா தளம், பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தது.

* 1991-ம் ஆண்டு தேர்தலில் ராஜீவ் மரணம் ஓரளவு அனுதாபத்தைப் பெற்றுத் தர காங்கிரஸ் 232 இடங்களைக் கைப்பற்றியது. நரசிம்மராவ் தலைமையிலான பெரும்பான்மை இல்லாத அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்தது.

* 1996-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களை மட்டுமே பெற, பாஜக 161 இடங்களைக் கைப்பற்றியது.

* 1998-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 141 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக 181 இடங்களைக் கைப்பற்றி வாஜ்பாய் தலைமையில் 13 மாதங்கள் ஆட்சி நடந்தது.

*1999-ம் ஆண்டு தேர்தலில் 114 இடங்களுடன் மீண்டும் காங்கிரஸுக்குத் தோல்வி. 182 இடங்களில் வென்ற பாஜக மாநிலக் கட்சிகளின் தலைமையில் ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார்.

* 2004-ம் ஆண்டு 145 இடங்களில் மட்டும் வென்ற காங்கிரஸ் மாநிலக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. நேரு குடும்பத்தைச் சாராத மன்மோகன் சிங் பிரதமரானார்.

* 2009-ம் ஆண்டு தேர்தலில் 206 இடங்களில் வென்ற காங்கிரஸ் மீண்டும் கூட்டணி ஆட்சியைத் தொடர்ந்தது.

* 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி அலையில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்றி 282 இடங்களைப் பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி பிரதமரானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்