கோவாவில் தடுமாற்றத்தில் பாஜக ஆட்சி?-முதல்வர் பதவிக்கு போட்டா போட்டி: என்ன செய்யப் போகிறார் ஆளுநர்?

By க.போத்திராஜ்

கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் காலமான அடுத்த சில மணிநேரங்களிலேயே பாஜக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு அடுத்த முதல்வர் யார் என்ற போட்டா போட்டி தொடங்கிவிட்டது.

ஆலோசனை தீவிரம்

மனோகர் பாரிக்கர் இறந்தவுடன் இருமுறை கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து ஆலோசனை நடத்தின. அதன்பின் டெல்லியில் இருந்த வந்த மூத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக கூட்டணி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சமாதானப் பேச்சு, இன்று அதிகாலை 4 மணி வரை நீடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், கூட்டணிக் கட்சியில் ஒன்றாக மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியும், கோவா ஃபார்வர்ட் கட்சியும் முதல்வர் பதவியைக் கேட்டுவருவதால், பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வருகிறது. எப்படியாகினும், இன்று மாலை மனோகர் பாரிக்கர் இறுதிச்சடங்கு முடிந்த பின்தான் எந்த முடிவும் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

காங். தீவிரம்

இது ஒரு பக்கம் இருக்க, காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவேல்கர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று இரவு அவரின் இல்லத்தில் சந்தித்து அடுத்த கட்டநடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

கோவா மாநிலத்தில் நிலையான முதல்வர் தேவை என்றும், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் தங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆளுநர் மிருதுளாவைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் கடந்த இரு நாட்களுக்கு முன் மனு அளித்தனர். இந்தக் கோரிக்கையை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

நிபந்தனை

கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி 17 இடங்களைப் பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லை. ஆனால், 13 இடங்களைப் பெற்ற பாஜக, தலா 3 இடங்களில் வென்ற மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி(எம்ஜிபி), கோவா பார்வேர்ட் கட்சி(ஜிஎப்பி), 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

ஆனால், கடந்த 2017-ம் ஆண்டு கூட்டணி அமைக்கும்போது, பாஜக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் அனைத்தும் மனோகர் பாரிக்கர் முதல்வராக வந்தால் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவோம் என்று நிபந்தனை விதித்தன. இதனால், அப்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வகித்து வந்த மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கோவா முதல்வர் பதவியை ஏற்றார்.

ஆனால், சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக  இருக்கும் தங்களை அழைக்காமல் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்த பாஜக கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது குறித்து காங்கிரஸ் கட்சி சர்ச்சையை கிளப்பியது.

காலமானார்

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கணையப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதனால், முதல்வர் இல்லாத சூழல் இருந்தது. வேறு முதல்வரை நியமிக்க காங்கிரஸ் வலியுறுத்தியபோதிலும் பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

மாநிலத்தில் நிர்வாகப் பணிகள் ஸ்தம்பிப்பதாகவும், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கூறி, இருமுறை ஆளுநரைச் சந்தித்தும் புதிய முதல்வரை நியமிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி மனு அளித்தது, போராட்டங்களையும் நடத்தியது.

இந்நிலையில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இறந்துவிட்டதால், இப்போது அடுத்த முதல்வர் யார் என்கிற குழப்பமும், ஆட்சியை பாஜக தக்கவைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சட்டப்பேரவை பலம்

கோவா சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 36 ஆகக் குறைந்துள்ளது. கடந்த மாதம் எம்எல்ஏ பிரான்சிஸ் டிசோசா காலமானார். நேற்று முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். இதுதவிர காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் ராஜினாமா செய்துவிட்டனர். இதனால், எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 36 ஆக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதில் பாஜக எம்எல்ஏ பாண்டுரங் மட்கைக்கர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இதுதவிர மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி(எம்ஜிபி), கோவா பார்வேர்ட் கட்சி(ஜிஎப்பி) கட்சிகளுக்கு தலா 3 எம்எல்ஏக்களும்,  3 சுயேச்சை எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்ஏல்ஏவும் உள்ளனர். இதனால், தற்போது மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக 14 எம்ஏல்ஏக்களுடன் காங்கிரஸ் கட்சி இருப்பதால், தங்களை ஆட்சி அமைக்கக் கோரி வருகிறது.

போட்டா போட்டி

ஆனால், முதல்வர் பாரிக்கர் இறந்ததையடுத்து, நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக கூட்டணிக் கட்சிகளான கோவா ஃபார்வர்ட் எம்எல்ஏ விஜய் சர்தேசாய், பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ, மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி தலைவர் சுதின் தாவலிகர் ஆகியோர் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இன்று அதிகாலை வரை மத்திய நிதிஅமைச்சர் நிதின் கட்கரி, கூட்டணிக் கட்சி உறுப்பினர்களிடம் பேச்சு நடத்தியும் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் பாஜக குழப்பத்தில் இருக்கிறது.

இதுகுறித்து மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் கூறுகையில், "முதலில் மனோகர் பாரிக்கரின் இறுதிச்சடங்கை முடிக்க வேண்டும். அவரின் உடல் கட்சி அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டபின், அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

பாஜக தேர்வு

இதற்கிடையே சுதின் தாவலிகர் முதல்வர் பதவி கேட்டு பிரச்சினை செய்து வருகிறார். ஆனால், பாஜக சார்பில் அடுத்த முதல்வராக விஸ்வஜித் ரானே, பிரமோத் சாவந்த் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆளுநர் என்ன செய்யப் போகிறார்?

ஆனால், மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைக்காவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சியை பாஜக அமல்படுத்தக்கூடும் என்று காங்கிரஸ் கட்சி கவலை தெரிவிக்கிறது. ஆட்சிஅமைக்க யாருக்கும் போதுமான அளவு எம்எல்ஏக்கள் இல்லாத சூழலில், சட்டப்பேரவையை மக்களவைத் தேர்தல் வரை  சஸ்பெண்ட் செய்து வைக்கவும் ஆளுநர் மிருதுளா சென் திட்டமிடலாம்.

இப்போதுள்ள நிலையில், சட்டப்பேரவையில் 36 இடங்களில் 17 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரச்சினை செய்துவருவதால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. இவை அனைத்தும் ஆளுநர் மிருதுளா சென் கையில்தான் இருக்கிறது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்