தன்பாலின உறவு: சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, மனுவில் தாக்கல் செய்யப் பட்டுள்ள ஆவணங்களை ஆராய்ந்து பரிசீலனை செய்வ தாகத் தெரிவித்தது.

தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009 ஜூன் 2-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பல்வேறு மத அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மற்றும் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில் தன்பாலின உறவு குற்றம் என்ற தீர்ப்பை எதிர்த்து நாஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசோக் தேசாய் ஆஜராகி வாதாடினார்.

“தன்பாலின உறவு தொடர்பான வழக்கில் 2012 மார்ச் 27-ம் தேதியே விசாரணை நிறைவு பெற்றுவிட்டது. அதன் பின்னர் 21 மாதங்கள் கழித்து 2013 டிசம்பர் 11-ம் தேதிதான் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் சட்டத் தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை நீதிபதிகள் பரிசீலனை செய்யவில்லை. பழைய சட்டங்களின் அடிப்படை யிலேயே தீர்ப்பை வழங்கி யுள்ளனர்.

மேலும் இதுபோன்ற முக்கிய மான வழக்குகளை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கக் கூடாது. அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்” என்று அசோக் தேசாய் வாதிட்டார்.

அவருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, முகுல் ரோட்டகி, ஆனந்த் குரோவர் ஆகியோரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வெளிப்படையாக விசாரணை நடத்தவும் ஒப்புதல் வழங்கினர்.

பொதுவாக சீராய்வு மனுக்கள் தொடர்பாக நீதிபதிகளின் தனி அறையில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பரிசீலனை செய்யப்படும். இதற்கு விதிவிலக்கு அளித்து சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரணை நடத்த நீதிபதிகள் ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE