‘மிஷன் சக்தி’ சாதனை; தேர்தல் நேரத்தில் பிரதமர் அறிவிக்கலாமா? - மாலன் பேட்டி

By நெல்லை ஜெனா

‘நாட்டு மக்களுக்கு இன்று நண்பகல் 11.45 முதல் 12 மணிவரை முக்கியத் தகவலுடன் உரையாற்ற இருக்கிறேன். தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்களைப் பாருங்கள’ என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்தார்.

இதனால் பிரதமர் மோடி எதைப்பற்றி பேசப் போகிறார், என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் எனும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. பிரதமர் மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மக்களிடம் உரையாற்றியபோதுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதனால், இந்த முறை அப்படி ஏதேனும் அறிவிப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை (இஸ்ரோ) மிகப்பெரிய மைல்கல் சாதனை செய்துள்ளதைக் குறிப்பிட்டார். விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களைப் பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘மிஷன் சக்தி’ திட்டம் குறித்தும், ‘A-SAT’ திட்டம் என்றால் என்ன என்பது பற்றியும் மூத்த பத்திரிகையாளர் மாலனிடம் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்காகத் தொடர்புகொண்டோம்.

‘மிஷன் சக்தி’ என்றால் என்ன? அதன் முக்கியத்துவம்?

ஒடிசாவின் பாலாசோர் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.16 மணிக்கு இந்தியா ஏவுகணையை ஏவி, செயற்கைக்கோளை 3 நிமிடங்களில் திட்டமிட்டபடி தகர்த்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இதற்கு ‘மிஷன் சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த A-SAT தொழில்நுட்பம், இந்தியாவின் மிகப்பெரிய சாதனை.

இந்தத் தொழில்நுட்பத்தை, நீண்டகாலமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் வைத்துள்ளன. 2007-ம் ஆண்டு முதல் இந்தத் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை சீனா மேற்கொண்டு வந்தது.

செயற்கைக்கோள் ஒன்றை சீன ஏவுகணை தாக்கி அழித்தபோது, அதன் உடைந்த பாகங்கள் ரஷ்யாவின் மற்றொரு செயற்கைக்கோளைத் தாக்கிய சம்பவமும் நடந்தது. இதனால், இரு நாடுகளிடையே உரசலும் ஏற்பட்டது. எனினும், 2013-ம் ஆண்டு இந்தத் தொழில்நுட்பத்தை கைக்கொண்ட நாடாக சீனா உயர்ந்தது.

அப்போதுதான் இந்தியாவிலும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அவசியம் என்ற ஆதங்கம் வெளிப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை மறித்து தகர்க்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இருப்பதால், அந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் இதனைச் செய்யமுடியும் என நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால், அதனை உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை கம்ப்யூட்டரில் படமிட்டு நமது விஞ்ஞானிகள் காட்டியபோது, இந்தியாவை ‘காகிதப் புலிகள்’ என வெளிநாடுகள் ஏளனம் செய்தன.

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை ஏவியது, இந்தத் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு முன்னோட்டமாக அமைந்தது. 2 டன் எடையைத் தாங்கும் செயற்கைக்கோள் செலுத்தியதன் மூலம் அடுத்தகட்ட நகர்வு அமைந்தது.

தற்போது நமது விஞ்ஞானிகள் முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளைத் தகர்த்து, இந்தியாவின் திறனை உலகுக்கு உணர்த்தியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பத்தை வைத்துள்ள நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவும் பெற்றுள்ளது. நாம் ‘காகிதப் புலிகள்’ அல்ல, தொழில்நுட்பத்தில் மற்ற வல்லரசு நாடுகளுடன் போட்டியிடுபவர்கள் என்பதை நிருபித்துள்ளோம். இதுமட்டுமின்றி, சீனா ஏவியபோது தகர்க்கப்பட்ட செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் விண்வெளியில் பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் வெற்றிகரமாக அழிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்தியாவின் இந்தச் சாதனையால் சர்வதேச அளவில் என்ன தாக்கம் ஏற்படும்?

2013 நவம்பரில் நாம் செவ்வாய்க் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலம் அனுப்பிய பிறகு, இந்தத் திறன்பெற்ற அமெரிக்கா, சீனா, ரஷ்யா மூன்றும் கூட்டாக ஒரு முயற்சியில் இறங்கின. நாம் முன்பு அணுகுண்டு வெடித்தபோது, நமககு எதிராகத் தடை கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இறங்கின.

எனவே, தற்போதும் அது அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் போன்ற ஒன்றை உருவாக்கி மற்ற நாடுகள், குறிப்பாக இந்தியா இந்தத் திறன் பெற்றுவிடாமல் தடுக்கும் முயற்சியை ஏற்கெனவே மேற்கொண்டன. ஆனால், அதற்கு முன்பாக இந்தியா இந்தத் தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்றுவிட்டது.

சர்வதேச அளவில் சில தடைகளை ஏற்படுத்த இந்த நாடுகள் முனையலாம். மற்ற நாடுகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ள நிலையில், பிரதமர் இதுபோன்ற உரை நிகழ்த்தலாமா?

ஏற்கெனவே அணுகுண்டு வெடித்தபோது வாஜ்பாய் செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்தாரே... அதேபோன்ற இந்தியாவின் மிகப்பெரிய சாதனை இது. இந்தியப் பிரதமர் இதை அறிவிப்பதுதான் பொருத்தமானது. இதற்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

புதிய திட்டங்கள், அறிவிப்புகள் எதையும் வெளியிடக்கூடாது என்பதுதான் தேர்தல் விதிமுறை. இது தேர்தலுக்குப் பின்பு தொடங்கப்பட்ட திட்டம் இல்லை. தொடர்ந்து சில ஆண்டுகளாக நடந்துவரும் திட்டம். அதுமட்டுமின்றி, இது தனது சாதனை, தனது அரசின் சாதனை என அவர் சொல்லவில்லை. வெறும் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டு பிரதமர் மோடியும், பாஜகவும் அரசியல் ஆதாயம் தேடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளதே?

தாங்கள் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் இந்தப் புகாரைத் தெரிவிக்கின்றன. பல கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேரந்து அரசு அமைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கின்றன.

பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சியே அமையும் என சொல்கின்றன. இதனால், விரக்தியில் உள்ள எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது புகார் கூறுவதாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு மாலன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்