முடிவுக்கு வருகிறதா ‘இரும்பு மனிதர்’ அத்வானியின் அரசியல் பயணம்?

By நெல்லை ஜெனா

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா களமிறங்குகிறார். இதன் மூலம் அத்வானியின் நீண்டநெடிய அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஒருகாலத்தில் பாஜகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் அத்வானி. வல்லபாய் படேலைத் தொடர்ந்து இரண்டாவது ‘இரும்பு மனிதர்’ என பாஜக தொண்டர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் அவர், கட்சியில் வளர்ந்து பெரும் தலைவராக உயர்ந்தது சுவாரஸ்யமானது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிறந்தவர் அத்வானி. நாடு சுதந்திரமடையும் முன்பு, பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது, ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, வாழ்ந்த இடத்தையும், பூர்வீகத்தையும் விட்டு உடுத்தியிருந்த உடைகளோடு அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு வந்த குடும்பங்களில் அத்வானியின் குடும்பமும் ஒன்று. அத்வானி குடும்பம் மும்பை வந்தது.

கராச்சியில் இருக்கும்போதே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்திருந்த அத்வானி, அந்த இயக்கத்தில் முழு நேர ஊழியராகச் சேர்ந்து ராஜஸ்தானுக்குப் பணி செய்யச் சென்றார்.

1952 வரை ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணியாற்றிய அவர், அதன் அரசியல் அமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 

1957-ம் ஆண்டு தேர்தலில் ஜனசங்கத்தின் சார்பில் வென்ற வாஜ்பாய்க்கு உதவியாக அரசியல் பணியில் அடியெடுத்து வைத்தார் அத்வானி. இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்திய போது ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையிலான எதிர்ப்பு இயக்கத்தில் ஜனசங்கமும் இணைந்து போராட்டத்தில் பங்கெடுத்தது. அதில் பங்கேற்ற அத்வானி 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.

இந்திராவை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த ஜனதா அரசில் அத்வானி மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சரானார். அதன்பிறகு பாஜக தொடங்கப்பட்ட பிறகு வாஜ்பாய்க்குப் பிறகு இரண்டாம் நிலைத் தலைவராக உயர்ந்தார் அத்வானி.

ரத யாத்திரை

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி 1990-ம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரை அவரை வலிமையான இந்துத்துவா தலைவர் என்ற நிலைக்குக் கொண்டு சென்றது. அதுவரை இல்லாத அளவில் பாஜகவின் வளர்ச்சி உயர்ந்தது. கூடவே அத்வானியின் பிம்பமும் பாஜகவில் உச்சத்தை எட்டியது.

1998 மற்றும் 1999-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் அமைந்ததில் அத்வானியின் பங்கு முக்கியமானது. அந்த அரசை திறம்பட நகர்த்திச் சென்றதில் வாஜ்பாய்க்கு பெரும் துணையாக இருந்தார் அத்வானி. பாஜவில் வாஜ்பாய்க்குப் பிறகு அத்வானி என்ற நிலை ஏற்பட்டது. வாஜ்பாய் காலத்துக்குப் பிறகு பாஜகவில் முன்னிறுத்தப்படும் தலைவராக அத்வானி உயர்ந்தார்.

வாஜ்பாய் அட்சிக் காலத்தில் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக வாஜபாய் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியபோது, தனது ஆதரவாளரான மோடியைக் காப்பாற்றியதில் அத்வானிக்கு பெரும் பங்கு உண்டு.

அந்தக் காலத்தில் துணை பிரதமராக இருந்த அத்வானி, உடல்நலம் பாதிக்கப்பட்டு வாஜ்பாய் ஒதுங்கிக்கொண்ட நிலையில் 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

ஆனால் மக்கள் பாஜகவை ஆட்சியில் உட்கார வைக்கவில்லை. அத்வானியின் அரசியல் உத்தி எடுபடவில்லை. இதனால் வேறு தளத்தை நோக்கி நகர்ந்தது பாஜக. அந்தத் தேர்தலுக்குப் பிறகு எதிர்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அத்துடன் அத்வானியின் வசீகரம் குறைந்து விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவைப் புகழ்ந்தது உட்பட சில தர்மசங்கடமான சூழலும் அவருக்கு இந்துத்துவ ஆதரவாளர்களிடையே இருந்த புகழைக் குறைத்தது.

மோடியின் காலம்

2014-ம் தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தலைமை தயாரான நிலையில், அதனை ஏற்றுக்கொள்ளவில்லை அத்வானி. பல்வேறு வகைகளில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனாலும் பாஜகவில் அவரது குரல் எடுபடவில்லை. தேர்தலில் வென்று மோடி பிரதமர் ஆனார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஏறக்குறைய விலகிவிட்டார் அத்வானி.

பாஜகவின் நாடாளுமன்றக் குழு, மார்க்க தர்ஷக் மண்டல் போன்ற அமைப்பில் இருந்தாலும், சம்பிரதாயத்துக்காக மட்டுமே அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். தற்போது காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வயதைக் காரணம் காட்டி அவருக்குப் பதிலாக காந்தி நகரில் அமித் ஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எட்டுமுறை மக்களவை உறுப்பினராகவும், நான்கு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ள அத்வானியின் நாடாளுமன்றச் செயல்பாடுகள் சிறப்பானவை. தற்போது கூட கடந்த 5 ஆண்டுகளில் மக்களவைக்கு அவரது வருகைப்பதிவு 92 சதவீதம் ஆகும். இந்த மக்களவையில் உறுப்பினர்களின் சராசரி வருகை 80 சதவீதம் தான். ஆனால், அதைவிடவும் அதிகமான அளவு அத்வானி பங்கேற்றுள்ளார்.

வயது மூப்பு மற்றும் வாய்ப்பு கிடைக்காததால் 16-வது மக்களவையில் அவர் அதிக அளவு பேசவில்லை. இருப்பினும் அவரது நாடாளுமன்ற வரலாற்றில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். வாஜ்பாய் போன்று வசீகரமான பேச்சாற்றல் இல்லாவிட்டாலும், புள்ளி விவரங்களுடன் தகவலைத் தந்து மற்றவர்களைத் திணறடிப்பார்.

குறிப்பாக, பாஜக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது அவையில் கட்சியின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தவர். அவரது மிகச்சிறப்பான கடைசி உரை 2012-ம் ஆண்டு மக்களவையில் எதிராலித்தது. அசாம் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்த அவர் ஆவேச உரை நிகழ்த்தினார்.

பாஜக எம்.பி.க்கள் மட்டுமின்றி அப்போது பதவியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் அத்வானியின் பேச்சை வெகுவாகப் பாராட்டினர். காங்கிரஸுக்குப் போட்டியாக பாஜகவை முதல் நிலை அரசியல் கட்சியாக வளர்த்தெடுத்த அத்வானியின் பிரதமர் கனவு மட்டும் கடைசி வரை நிறைவேறவில்லை.

மூத்த தலைவர் அத்வானிக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்க வேண்டும் என தற்போது பாஜகவில் ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர். ஆனால் அதற்கு பாஜக தலைமை செவி சாய்க்குமா? எனத் தெரியவில்லை.

ஒருவேளை அரசியல் வாழ்க்கையில் இருந்து அத்வானி ஓய்வு பெற்றுவிட்டாலும், அவரது பொது வாழ்க்கை என்பது அவ்வளவு விரைவாக முடிவுக்கு வராது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்