தாம் ஒரு கடவுள் அவதாரம் எனவும், தம்மை உயிருடன் புதைத்து விட்டால் மீண்டும் அவதரிப்பதாகக் கூறியதாக, ராஜஸ்தானில் இரண்டரை வயது குழந்தையை அதன் பெற்றோர்களே உயிருடன் புதைத்து விட்டனர்.
அந்த சமாதியை அப்பகுதி மக்கள் வணங்கி, பூஜைகளை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் அருகில் உள்ள கிராமம் குமேர். உ.பி.யின் ஆக்ராவில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இங்கு நத் எனும் நாடோடி பழங்குடி சமூகத்தினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு, ஸ்ரீமதி மற்றும் வினோத் தம்பதிக்கு குஷ்பூ எனும் பெயரில் இரண்டரை வயதில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தது. பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த குஷ்பூவை கடந்த புதன்கிழமை நள்ளிரவு அவருடைய பெற்றோரே தன் வீட்டின் முன்பாக உயிருடன் புதைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த சமாதியின் முன் குஷ்பூவின் படத்தை வைத்து மலர்களுடன் மறுநாள் பெற்றோர் பூஜை செய்யத் தொடங்க, அந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவியது. இதனால், அந்தப் பகுதி கிராமத்து மக்களும் நூற்றுக்கணக்கில் கூடி குஷ்பூவின் சமாதி மீது கூடாரம் அமைத்து பூஜை செய்து வணங்க ஆரம்பித்து விட்டனர். இதற்காக, அப்பகுதியில் மலர்கள், பூஜை பொருட்கள் மற்றும் தேநீர் என திடீர்க் கடைகள் தோன்றி பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து குஷ்பூவின் தாயான ஸ்ரீமதி கூறும்போது, “எனது கனவில் தேவி துர்க்கை என் மகள் உருவில் வந்தார். கடவுளான அவர் தான் எனது வயிற்றில் குழந்தையாக வந்து பிறந்ததாகக் கூறினார்.
அவர் கூறியபடி புதன்கிழமை இரவு சரியாக 12.05-க்கு உயிருடன் புதைத்து விட்டோம். இனி அவர் மீண்டும் அவதரிப்பார்’ என்றார்.
அவரது கணவரான வினோத் கூறும்போது, ‘‘பல மாதங்களாக குஷ்பூவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அருகிலுள்ள பெரிய நகரங்களுக்குச் சென்று மருத்துவர்களிடம் காட்டியும் சரியாகவில்லை. மாந்திரீகர்களிடம் காட்டிப் பார்த்து விட்டோம். அதற்குள் கனவு வந்தமையால் உயிருடன் புதைத்து விட்டோம்’’ என்றார்.
இந்த செய்தி உள்ளூர் செய்தி சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட, கூட்டம் கூடிக் கொண்டே இருக்கிறது. இதை அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து கிராமவாசிகளை விரட்டி விட்டனர். பிறகு, குஷ்பூவின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதன் முடிவுகள் குறித்து ‘தி இந்து’விடம் பரத்பூர் உதவி ஆட்சியர் மோஹன் சிங் கூறுகையில், ‘பிரேத பரிசோதனையில் இயற்கை மரணம் அல்ல என தெரிய வந்துள்ளது. யாரும் புகார் செய்ய முன்வராததால் எவரும் கைது செய்யப்படவில்லை. பத்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை எரிக்காமல் புதைத்து சமாதியாக்கி விடுவது நத் சமூகத்தினரின் வழக்கம்’ என்றார்.
இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாகக் கூறிய மோஹன் சிங், இந்த சம்பவத்தின் மீது அநாவசியமான வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் எச்சரித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago