தாமரை மலர்கிறது; தடுக்கும் மம்தா: வாக்குகளை இழக்கும் காங்., இடதுசாரிகள்- மே.வங்கம் ஓர் அலசல்

By க.போத்திராஜ்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தேசத்தில் இருக்கும் குறிப்பிடத்தக்க பெண் தலைவர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவர். வரும் மக்களவைத் தேர்தல் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து, மத்தியில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என்பதை முடிவு செய்யும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக வியூகங்களையும், காய்களையும் நகர்த்தி வருகிறார் மம்தா.

அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் முகவரி இல்லாமல் இருந்த பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எழுச்சி பெற்று தனக்கான அடையாளங்களை அதிகப்படுத்தி வருகிறது. 2021-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு இது ஒரு 'செமி பைனல்' என்ற கணக்கில் தேர்தலில் அமித் ஷா வியூகங்களுடன் பாஜக களமிறங்குகிறது.

கால்நூற்றாண்டுக்கும் மேலாக மாநிலத்தில் கோலோச்சிய இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகள் தங்களின் கூட்டணிப் பேச்சு தோல்வியால் மக்களவைத் தேர்தலில் வாக்குகள் இழப்பைச் சந்திக்கக் காத்திருக்கிறார்கள். இந்த 4 முக்கியக் கட்சிகளும் தனித்தனியே களம் காண்பதால், 4 முனைப்போட்டி ஏற்பட்டு அதனால் சிதறும் வாக்குகள் பாஜகவின் எழுச்சிக்குக் காரணமாகப் போகிறது.

கிங் மேக்கராக  மம்தா

தேசத்தில் உ.பி.க்கு அடுத்தார்போல் அதிகமான 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் மேற்கு வங்கம். கடந்த 1950களில் இருந்து காங்கிரஸின் ராஜ்ஜியத்திலும், 1980-களுக்குப் பின் இடதுசாரிகளின் கோட்டையாகவும் 2004-ம்ஆண்டு வரை இருந்தது. ஜோதிபாசு, புத்தவேத் பட்டாச்சார்யா ஆகியோருக்கு மாற்றாக மம்தாவை மக்கள் பார்த்ததால் தொடர்ந்து இருமுறை ஆட்சியில் அமர வைத்தனர்.

இந்த மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் அதிகமான இடங்களைக் கைப்பற்றினால், காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்த இடத்தில் தேசத்தில் 3-வது மிகப்பெரிய கட்சியாகவும், கிங் மேக்கராகவும் மம்தா வருவார் என்பதில் சந்தேகமில்லை.

தேசியக் கட்சியாக தன்னை உருவகப்படுத்திக்கொண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சி பல்வறு மாநிலங்களில் போட்டியிட்டாலும், மேற்கு வங்கத்தைத் தவிர்த்து அந்தக் கட்சிக்கு முகவரி இல்லை. இருந்தாலும் மற்ற மாநிலங்களிலும் தனது தடத்தைப் பதிக்க மம்தா முயன்று வருகிறார்.

மேற்கு வங்கத்தில் ஒருநேரத்தில் இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிகளுக்கும் மட்டுமே இருந்த போட்டி, மெல்ல, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான போட்டியாக மாறியது. காங்கிரஸ் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மாநிலத்தில் முக்கிய மம்தா சக்தியாக மாறினார். இப்போது மம்தா, பாஜகவுக்கு இடையிலான போட்டியாக மாறியுள்ளது.

மம்தாவின் வளர்ச்சி

கடந்த 1998-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மம்தாவின் கட்சி 8 இடங்களைப் கைப்பற்றியது. இன்று பாஜகவுடன் எதிரும் புதிருமாக இருந்துவரும் மம்தா பானர்ஜி அன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் சேர்ந்து அங்கம் வகித்தார். 2004-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்து பெருத்த தோல்வியைச் சந்தித்து, ஒரு இடத்தில் மட்டுமே மம்தா வெற்றி பெற்றார்.

காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 2009-ல் 19 இடங்களையும், 2014-ம் ஆண்டு 34 இடங்களையும் மம்தா கைபற்றி முக்கியக் கட்சியாக விளங்கி வருகிறார்.

ஆனால், கடந்த தேர்தல் வரை இடதுசாரிகளுக்கும், மம்தாவுக்கும்தான் போட்டி என்று இருந்த நிலையில் அது மாறி,பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான போட்டியாக இந்தத் தேர்தல் மாறிவிட்டது.

இந்த முறை 42 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்துவிட்ட மம்தா பானர்ஜி, மாநிலத்தில் 40 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். கடந்த முறை போட்டியிட்டவர்களில் 17 பேருக்கு மீண்டும் சீட் கொடுத்துள்ளார். பலருக்கு சீட் கிடைக்காமல் வேறு கட்சியை நோக்கி நகர்வது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தினாலும் மம்தா தனது நகர்த்தல்களில் தெளிவாக இருக்கிறார்.

அரசியல் எதிரி பாஜக

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டையும், குறிப்பாக மோடிக்கு எதிராக தனது குரலையும், கரங்களையும் மம்தா வலுப்படுத்தி வருகிறார். நிதி மோசடி தொடர்பாக விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸார் காவலில் வைத்தது, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளைத் திரட்டி பேரணி நடத்தியது, பாஜக பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்யவிடாமல் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்தது போன்றவை பாஜக, திரிணமூல் காங்கிரஸ் கட்சி இடையே போட்டியை அதிகரிக்கச் செய்து, தனக்கு பிரதான எதிரி பாஜக என்று மக்களுக்கு சொல்லாமல் உணர்த்திவிட்டார் மம்தா.

மென்மை போக்கு

பாஜகவுக்கும், இடதுசாரிகளுக்கும் எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துவரும் மம்தா, காங்கிரஸ் கட்சியின் பக்கம் ஒருவித மென்மையான போக்கையைக் கடைப்பிடித்து வருகிறார். தான் நடத்திய எதிர்க்கட்சிகள் பேரணிக்கு காங்கிரஸ் கட்சி தனது பிரதிநிதிகளை அனுப்பி இருந்தது. சிபிஐக்கு எதிராக மம்தா போராடிய போதும், காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். ஆதலால், தேர்தலுக்குப் பின் மம்தா, காங்கிரஸ் இடையே நட்பு மலர்வதற்கும் வாய்ப்புள்ளது.

வலுவிழக்கும் இடதுசாரிகள்

மேற்கு வங்கத்தில் எப்போது ஆட்சியைப் பறிகொடுத்தார்களோ அப்போது இருந்து இடதுசாரிகளை மக்கள் மெல்ல புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு தேர்தலிலும் இடதுசாரிகள் பெரும் வாக்குகளின் சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து எடுத்துக்கொண்டால், 2004-ம் ஆண்டு 35 இடங்களில் வென்ற இடதுசாரிகள், 2009-ம் ஆண்டு தேர்தலில் 15 இடங்களில் மட்டுமே வென்று பாதியானது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி சுருங்கிப்போனது. இது மாநிலத்தில் இடதுசாரிகளின் நிலையைக் காட்டுகிறதா, அல்லது மக்களின் மனப்போக்கை பிரதிபலிக்கிறதா எனத் தெரியவில்லை.  

இந்த முறை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, இடதுசாரிகள் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. அதற்கான பேச்சும் நடந்தது. ஆனால், இரு கட்சிகளின் சில பிடிவாதப் போக்காலும், இடதுசாரிகள் காங்கிஸை ஆலோசிக்காமல் வேட்பாளர்களை அறிவித்தது விரிசலை ஏற்படுத்தி, கூட்டணிப் பேச்சை முடக்கியது. முடிவாக இரு கட்சிகளும் தனித்தனித்தனியாக தேர்தலைச் சந்திக்கிறார்கள்.

ஏற்கெனவே கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் இருந்து வாக்கு சதவீதத்தை மெல்ல இழந்து வரும் இடதுசாரிகள் இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் மூலம் வாக்குகள் சிதறி அது பாஜகவுக்குத்தான் துணை செய்யப்போகிறது.

பாஜக எழுச்சி:

bengal-bjpjpg100 

ஒருவருடைய வீழ்ச்சியில்தான் மற்றொருவருடைய  எழுச்சி இருக்கும் என்பதைப்போல், 1980களில் மேற்கு வங்கத்தில் அடையாளம் தெரியாமல் இருந்த பாஜக, மாநிலத்தில் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்குப் பின் தனக்குரிய தடத்தை பதிக்கத் தொடங்கியது.

மாநிலத்தில் இந்தி மொழிபேசும் மக்களிடம் மெல்ல ஊடுருவிய பாஜக, தனது வாக்காளர்கள் எண்ணிக்கையை 43 லட்சமாக தற்போது உய்ர்த்தி இருக்கிறது.

கடந்த 1998-ம் ஆண்டு பாஜக ஒரு இடத்திலும், 1999-ம் ஆண்டு 2 இடங்களிலும் வென்று 11.13 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2004-ம் ஆண்டு ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல முடியாவிட்டாலும், 8 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2009- ம் ஆண்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்று 6.14 சதவீத வாக்குகளை ஈட்டியது. 2014-ம் ஆண்டில் இடதுசாரிகளுக்கு இணையாக 2 இடங்களைப் பெற்று 18 சதவீத வாக்குகளைப் பெற்றது.

இதில் ஒரு வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க அதிகரிக்க இடதுசாரிகளின் வாக்கு சதவீதம் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 2009 தேர்தலில் இருந்து 2014-ம் ஆண்டு தேர்தல் வரை இடதுசாரிகள் 10 சதவீத வாக்குகளை இழந்திருக்கிறார்கள், அதை பாஜக பெற்றுள்ளது.

வலுவாக ஊன்றும் பாஜக

கடந்த ஆண்டு மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், பாஜக 2-வது இடத்தைப் பிடித்தது, காங்கிரஸ், இடதுசாரிகளுக்குப் பேரிடியாக அமைந்தது. பாஜக 5,779 இடங்களைக் கைப்பற்றியது. மாநிலத்தில் கிராமப் பஞ்சாயத்துவரை பாஜகவின் சார்பில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர், கிராமங்கள் அளவில் பாஜக 11.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சி 2.2 சதவீத வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கட்சி 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றனர்.

294 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் தற்போது பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தாலும், அடுத்துவரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வளர்ச்சி மம்தா, இடதுசாரிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

மேற்கு வங்கத்தில் இருக்கும் இந்துக்களை குறிவைத்து களம் இறங்கியிருக்கும் பாஜக, மக்களவைத் தேர்தலில் குறைந்த பட்சம் 10 முதல் 12 இடங்களை வெல்ல வேண்டும் என தீர்மானித்துள்ளது. குறிப்பாக வடமேற்கில், பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளை தீவிரமாக குறிவைத்து பாஜக களப்பணியாற்றி வருகிறது. அலிபுர்துவர், கூச் பெஹர், மால்டா ஆகிய மண்டலங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

கடந்த தேர்தலில் பாஜக 23 தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்தது. அந்த 23 தொகுதிகளை அடையாளம் கண்டு அதில் இந்த முறை 18 இடங்களைக் கைப்பற்றும் முயற்சியோடு அமித் ஷா வியூகங்களை வகுத்து வருகிறார். இந்த தொகுதிகளை ஏ, பி, சி எனப் பிரித்து பாஜக தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இதில் கூச் பெஹர், ஜல்பைகுரி, மால்டா, வடக்கு24 பர்கானா மாவட்டம், ஹவுரா, ஹூக்ளி, பீர்பூமி, ஜார்கிராம், மேற்கு மிதுன்புரி ஆகிய பகுதிகளில் தேர்தலுக்கு பலமாதங்களுக்கு முன்பே மக்களைச் சந்தித்து களப்பணியில் பாஜகவினர் இறங்கிவிட்டனர்.

முக்கியமான தேர்தல்

இந்த தேர்தல் மம்தா, பாஜக, இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தலாக அமையும். மம்தா பெருவாரியான இடங்களைப் பெற்றால், கிங் மேக்கராக வலம் வருவார். பாஜக 10 இடங்களுக்கு மேல் பெற்றால், மாநிலத்தில் அசுர வளர்ச்சியை நோக்கி முன்னேறும். 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கத் துடிக்கும் மோடி அரசுக்கு பெரும் ஊக்கமாக அமையும்.  மம்தாவுக்கு கடும் போட்டியாக எதிர்காலத்தில் மாறும்.

இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகள் தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள இந்தத் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். இருவரின் பிரிவு பாஜகவின் எழுச்சிக்கு காரணமாகிவிட்டது என்பதுதான் நிதர்சனம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்