வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்தும் எதிர்ப்பலை போக்கு குறித்தும் மார்கன் ஸ்டேன்லி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சர்வதேச உத்தியாளர் ருச்சிர் சர்மா பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்.
இவர் ‘Democracy on the Road: A 25 Year Journey Through India’ என்ற புத்தகத்தை அண்மையில் வெளியிட்டிருக்கிறார். 27 தேசிய மற்றும் மாநில தேர்தல்களை பகுப்பாய்வு செய்தவர் என்ற வகையில், 2019 தேர்தல் பார்வையை தெரிவித்துள்ளதோடு இந்தியாவில் மட்டும் ஏன் எதிர்ப்பலை விகித்தாச்சாரம் மிக மிக அதிகமாக இருக்கிறது என்பதையும் பொருளாதார சீர்திருத்தங்களில் ஏன் சீனாவை நெருங்கமுடியவில்லை என்பதையும் விளக்கியிருக்கிறார்.
தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து..
உங்கள் புத்தகம் முழுவதுமே இந்தியாவில் நிலவும் எதிர்ப்பாளர்களின் ஆழமான வெறுப்புணர்வு பற்றி பேசுகிறது. இந்தியர்கள் அரசாங்கங்களை அவர்களது பழைய சாதனைகள் எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஏதோ உள்ளுணர்வின் அடிப்படையில் மட்டும் தூக்கி எறிகிறார்கள் என நினைக்கிறீர்களா?
எதிர்ப்பலை anti-incumbency என்ற வார்த்தையே இந்தியாவில் உருவானதுதான். தி நியூயார்க் டைம்ஸ் இதழுக்கோ இல்லை அது போன்ற வேறு இதழுக்கோ எழுதும்போது என்னால் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவே இயலாது. காரணம் அவர்களுக்கு நான் எதைப் பற்றி பேசுகிறேன் எனப் புரியாது. அது ஏனென்றால் உலகிலுள்ள ஜனநாயக நாடுகளிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் எதிர்ப்பலை இருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் எல்லாம் ஒருமுறை மக்கள் எதிர்ப்பை சந்தித்தவர்கள் மீண்டும் தேர்வாவதற்கு வாய்ப்பிருக்கிறது. அமெரிகாவில் மூன்றில் 2 குடியரசு தலைவர்களும், மாகாண ஆளுநர்களும் மீண்டும் தேர்வாவதற்கான சாத்தியத்தைப் பெற்றிருக்கின்றனர் எனப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
இந்தியாவில் எதிர்ப்பலையின் தாக்கம் அதிகமாக இருக்க இரண்டு அல்லது மூன்று முக்கியக் காரணங்களை சொல்லமுடியும். இங்கு அரசியல்வாதிகள் சில வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். ஆனால், அது மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இயந்திரங்கள் உடைபட்டுக் கிடக்கின்றன.
அதனால் அது அவர்களை சென்று சேராமல் போகிறது. உதாரணத்துக்கு நேற்று நான் உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதிக்குச் சென்றிருந்தேன். அங்கு மாவட்ட நீதிபதி அலுவலகம் முன் கரும்பு விவசாயிகள் தங்களுக்கான நிலுவைத் தொகையைக் கோரி போராடிக் கொண்டிருந்தனர். குறைந்தபட்ச ஆதார விலையை அரசு அறிவித்திருக்கலாம்.
ஆனால் அதற்கான பேமென்ட் ஸ்லிப்பை எடுத்துக் கொண்டு நீங்கள் உணவு பாதுகாப்பு கழகதுக்குச் சென்றீர்கள் என்றால் நீங்கள் அலைக்கழிக்கப்படுவீர்கள். இப்படித்தான் இங்குள்ள அரசு அங்கங்கள் உடைந்து கிடக்கின்றன. இதனால் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையேயான தினசரி தொடர்பு சேதத்துக்கு உள்ளாகிறது. அதனால் மக்கள் விரக்தியில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுகிறார்கள்.
இரண்டாவதாக, துண்டுதுண்டாக பிரிந்து கிடக்கும் ஆட்சி அமைப்பு ஒரு கட்சியை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வாக்கு வங்கியில் 30% பெற்றாலே வெற்றியை பெற்றுவிட முடியும். அதேபோல், 3 முதல் 4% வாக்கு வாக்கு வேறுபாடுகள் அரசாங்கத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துவிட்டாலும் இதே நிலைதான். இதுதான் மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவை வேறுபடுத்திக் காட்டும் அம்சம்.
ஆனால், ஒருமுறை தோற்றுப்போன கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறதே. இதை எப்படி நீங்கள் விவரிப்பீர்கள்?
இதற்கும் இரண்டு காரணிகள் இருக்கின்றன. 2005 - 2010 காலகட்டத்தில், எதிர்ப்பலைகளால் மிக அதிகமானோர் தேர்தல் வெற்றியை ருசித்தனர். அப்போது இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்திருந்தன. ஒன்று, பொருளாதாரம் மேம்பட்டுக் கொண்டிருந்தது. பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது. மற்றொன்று பொருளாதாரம் மேம்பட்டதால் நிறைய நலத்திட்டங்களுக்கான வாய்ப்புகள் திறந்திருந்தன. ஆட்சியில் இருந்த கட்சிகள் நலத்திட்டங்களுக்கு செலவு செய்ய முடிந்ததால் அந்த அரசே மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு ஏற்பட்டது.
இதை சொல்லும்போது மங்களூரு எம்.எல்.ஏ. யு.டி.காதிரின் அளித்த வாக்குமூலத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். எனது புத்தகத்திலும் இதை நான் இரண்டு இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். தேர்தலில் வெல்வது என்பது 6 தேர்வு நிலைகளை குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் வெற்றி காண்பது எனக் கூறியிருக்கிறார்.
ஏதாவது ஒரே ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு உங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. உங்களுக்கு மக்கள்நலன் தெரியவில்லை என்றால் நீங்கள் தோல்வி அடைவீர்கள். உங்களுக்கு சாதி கணக்கும், மத அரசியலும் செய்யத்தெரியவில்லை என்றால் தோல்வி நிச்சயம்.
உங்கள் மீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்க வேண்டும். அமெரிக்க அரசியலில் பொருளாதாரத்துக்கும் அரசியலுக்கும் இடையே நிறைய தொடர்பு இருக்கிறது. ஆனால், இந்திய சூழலில் அது மிகவும் எளிமையான ஒப்பீடாகிவிடுகிறது.
இந்தியாவில் பொதுத் தேர்தல் என்பது மாநிலத் தேர்தல்களின் தொடர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதை விவரிக்க இயலுமா?
2004-லும், 2009-லும் இதுதான் நடந்தது. அலை வீசாத எல்லா தேர்தலிலுமே இதுதான் நடந்திருக்கிறது. 1984-85 காலகட்டத்தில் ராஜீவ் காந்தி அலை வீசியது, 2014-ல் மோடி அலை வீசியது. இப்படியான அலைகள் இல்லாதபோது மாநில தேர்தல்களின் முடிவே பொதுத் தேர்தலிலும் பிரதிபலித்திருக்கிறது.
டெல்லி, மும்பையில் இப்போதே ஒரு கேள்வி எழுந்துவிட்டது. 2019-ல் மோடி ஆட்சிக்கு வராவிட்டால் அந்த இடத்துக்கு யார் வருவார்? என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், இந்தியாவின் பிற பகுதிகளில் இது போன்ற நிலையில்லை. இந்தியாதான் உண்மையாக நாடாளுமன்ற முறைமையினைப் பின்பற்றுகிறது.
இது தொடர்பாக ஒரு தகவலை நான் அவ்வப்போது பகிர்ந்து வருகிறேன். 2004-ல் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இருந்த மக்கள் அபிமானத்துக்கும் சோனியா காந்திக்கு இருந்த மக்கள் அபிமானத்துக்கும் இடையே மிகுந்த வித்தியாசம் இருந்தது. அது இப்போது மோடி - ராகுல் காந்தி மீதான மக்கள் அபிமான இடைவெளியைவிட மிக அதிகமானது. இருந்தாலும் சோனியா நல்ல கூட்டணிகளை அமைத்தார். அதனால் தேர்தலில் வெற்றி கண்டார். இந்தத் தேர்தலையும் ஒவ்வொரு மாநிலமும் சேர்ந்துதான் தீர்மானிக்கப்போகிறது.
அரசியல் பிரமுகர்களுக்கு வருவோம். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரப் பிரதேசத்துக்கு வெளியே பெரிதாக தாக்கம் செலுத்த முடியவில்லை என்று கூறியிருக்கிறீர்களே?
எந்த ஒரு பிராந்தியத் தலைவருமே தேசிய அளவில் அடையாளம் ஏற்படுத்த முடியவில்லை என்பது எனக்கு இன்றும் ஆச்சர்யம் அளிப்பதாகவே இருக்கிறது. தேசம் முழுவதும் தலித் மக்கள் இருப்பதால் மாயாவதி அனைத்திந்திய அடையாளத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்திருக்கலாம்.
ஆனால், தலித் வாக்குகள் எல்லாமே ஒரே தலைவரை நோக்கி சீராகப் பதிவாவது இல்லை என்பதே உண்மை. மகாராஷ்டிராவில் மாயாவதியால் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால், அங்குகூட அவர் இன்னும் தனது கணக்கை துவக்கவில்லை. நிலவரம் இப்படி இருக்க பிரதமர் வேட்பாளராக இருப்பது என்பது முற்றிலும் மாறுபட்ட விஷயமாகும். மாயாவதி எத்தனை சீட்களை வெல்கிறார் என்பதைப் பொறுத்தது அது. என்னைப் பொருத்துவரை இந்தியாவில் ஒரு மாநிலத்தில் வலுவாக இருக்கும் தலைவரால் இன்னொரு மாநிலத்தில் அதை பிரதிபலிக்க முடியாது.
ராகுல் காந்தி, 2007-ல் நீங்கள் பார்த்ததற்கும் இப்போ பார்ப்பதற்கும் என்ன மாற்றம் பெற்றிருக்கிறார்?
2007-ல் நான் பார்த்த போது 2 மணி நேரம் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது அவர் 1 மணி நேரம் 59 நிமிடங்கள் பேசியிருப்பார். அப்போதுதான் அரசியலில் நுழைந்திருந்ததால் அவரைச் சுற்றி அந்த அறை முழுவதும் அரசியல் நோக்கர்கள் இருந்தனர். அவர் கேள்விகள் கேட்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இப்போதெல்லாம் அவர் மட்டுமே பேசாமல் பேசுவதைக் கேட்கவும் கேள்விகள் எழுப்பப்படுவதையும் விரும்புகிறார். இதில் எவ்வளவு மாற்றம் சுயமாக ஏற்பட்டது எவ்வளவு விமர்சனங்களால் ஏற்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், 2007-ல் இருந்ததைவிட இப்போது பிரச்சார களத்தில் அவர் முன்னேறியிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.
பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவரால் காங்கிரஸுக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வர இயலுமா?
தோற்றத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியலில் சாதிக்கும் காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. அந்த இந்தியா இப்போது இல்லை. உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் களத்தில் சாதியின் தாக்கம் எத்தகையது என்பதும் நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த நேரத்தில் அதை அசைத்துப் பார்ப்பது என்பது மிகவும் கடினமானது.
பிரியங்கா பெரிய மாற்றத்தை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் யாராவது கேட்டால் அவர் ஒரே ஒரு விஷயத்தில் கவனத்தை குவிக்க வேண்டும் என்று நான் யோசனை சொல்வேன். வாரணாசியில் மோடியை எதிர்த்து நிறுத்தப்படும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சியின் வேட்பாளர் என்று அவரை களமிறக்கலாம்.
அப்படி இறக்கினால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் குவியும். அதைவிடுத்து காங்கிரஸை பலப்படுத்தும் நோக்கில் 2019 தேர்தல் நெருங்கும் வேளையில் பிரியங்காவின் ஈர்ப்புவிசையை மட்டும் நம்பி இறக்கினால் அது பலனளிக்காது. எனவே பிரியாங்காவிடம் இருந்து எதைப் பெற வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறதோ அதற்கு மெனக்கிட வேண்டும்.
மோடி, அமித் ஷாவுடனான உங்கள் பயணக்குழு பலமுறை பதற்றத்துடன் இருந்ததாக கூறியிருக்கிறீர்கள், ஏன்?
ஒட்டுமொத்த ஊடகமும் தங்களை பழிவாங்குவதாகவே மோடியும், அமித் ஷாவும் நினைக்கின்றனர். அதைத்தான் ஊடகங்கள் சுதந்திரமாகக் கருதுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்னதாக சுதந்திரம் என்ற வார்த்தை இவ்வளவு இழிநிலையில் பயன்படுத்தப்படவில்லை. ஊடகங்கள் தங்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை அவர்கள பூரணமாக நம்புகிறார்கள். அந்த எண்ணம் அவர்களது கலந்துரையாடல்களில் பிரதிபலிக்கிறது.
மோடி இல்லாவிட்டால் அரசு இயந்திரம் சீர்குலைந்து விடும் என்ற கருத்த உருவாக்கப்படுகிறது. 2019 தேர்தலில் இது எந்த அளவுக்கு பயனளிக்கும்?
1989-ல் இது மாதிரியான ஒரு முயற்சியை ராஜீவ் காந்தி மேற்கொண்டார். ஆனால் அது எந்த பலனையும் அளிக்கவில்லை. ஒரு சில மக்கள் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பரந்துபட்ட அளவில் மக்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களித்துவிட்டு செல்வார்கள். தேர்தலுக்குப் பின்னர் என்ன நிகழும் என்பதை எல்லாம் அவர்கள் யோசிக்க மாட்டார்கள்.
2019 தேர்தல் பிரச்சாரக் களங்களில் ஆதிக்கம் செலுத்தப்போவது வேலைவாய்ப்பின்மை பிரச்சினையா? கிராமப்புற வளர்ச்சியின்மையா? ராமர் கோயில் விவகாரமா? அல்லது மோடியின் பார்வையிலான இந்துத்துவாவா?
இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெறப்போவது கூட்டணி கணக்குகளே. ஏனெனில் மோடிக்கான ஆதரவு நிலை இன்னும் வலிமையாகவே இருக்கிறது. அதில் முன்பின் ஏதாவது சரிவு இருக்கலாம். இருந்தாலும் அவரால் 31% வாக்குகளைப் பெற்றுவிட முடியும். ஆனால், வெற்றி பெறும் தொகுதிகளின் கணக்கு இந்தமுறை 9:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் அமையலாம்.
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் அதிகப்படியான வாக்கு - தொகுதி விகிதாச்சாரமாக (vote-to-seat conversion ratio) இருக்கும். ஒரு வேட்பாளருக்கு வெற்றிக்கு தேவைப்படும் வாக்குகளையும் ஒரு தொகுதியில் உள்ள மொத்த வேட்பாளர்கள் எவ்வளவு பேர் என்ற விகிதாச்சாரம் அடிப்படையில் இதை நாங்கள் கணிப்போம்.
- தமிழில்: பாரதி ஆனந்த்
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago