வெளியேற்றப்படும் 11 லட்சம் பழங்குடி மக்கள்: இனி காடுகளைப் பாதுகாப்பது யார்?

By இந்து குணசேகர்

ஒரு  நாட்டை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் அதன் ஆதி மனிதர்களையும், அவர்களது பண்பாடுகளையும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையுடன் தொடர்பில் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல் அவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்வது வேதனையான ஒன்று.

அந்தவகையில் ஆதிவாசி பழங்குடியினருக்கு எதிரான உத்தரவை சமீபத்தில் நாட்டின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் 16  மாநிலங்களில் காடுகளில் வசிக்கும், பட்டா இல்லாத 11,27,446ஆதிவாசி பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு.

இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவின் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர், அடுத்த விசாரணை நடைபெறவுள்ள வரும் ஜூலை 27 -ம் தேதிக்குள் பட்டா இல்லாத பழங்குடி மக்கள் வனப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதில் அரசு தரப்பில் வெறும் அறிக்கை மட்டும் தாக்கல் செய்துவிட்டு அமைதி காத்துவிட்டனர் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. நீதிபதிகள் அளித்த உத்தரவின்படி, பழங்குடிகளில் தமிழகத்திலிருந்து 11,742 பேர் வெளியேற்றப்படவுள்ளனர்.

இதில் அதிகப்பட்சமாக இந்தியாவின் அடர் வனப்பகுதிகளை கொண்ட மாநிலங்களான,  சத்தீஸ்கரில் 4,62,403 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3,62,024 பேரும், மகராஷ்டிராவில் 2,28,221 பேரும், தென்னிந்தியாவில் அதிகப்பட்சமாக கர்நாடக மாநிலத்திலிருந்து 1,80, 956 பேரும் வெளியேற்றப்படவுள்ளனர்.

வன உரிமை சட்டம்

பழங்குடி மக்களின் நலனுக்காகவும், அவர்களது உரிமைக்காகவும் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட வன உரிமைகள் சட்டம் 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பாரம்பரியமாக வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் பழங்குடியினர் யார் என்பதை சட்டப்பூர்வமாக விண்ணப்பித்து அவர்கள் தங்களை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் 'வைல்ட்லைஃப் ஃபஸ்ட்' என்ற வனவிலங்கு நல தன்னார்வ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அதில் இந்த வனவிலங்குச் சட்டம் காடுகளை அழிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் இந்த சட்டம் தொடர வேண்டுமெனில் அதில் கூறியதுபோல பட்டா இல்லாத பழங்குடி மக்கள் வனங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதன் அடிப்படையில் வந்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் பழங்குடி மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தை அரசு தவறாகப் பயன்படுத்தி விட்டதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

முழுக்க முழுக்க மனித உரிமை மீறல்:செல்வராஜ் (பழங்குடி செயற்பாட்டாளர்)

இந்தியாவில் மலைப் பகுதியில் வாழும் பழங்குடிகள், ஆதிவாசிகள் என அனைவரும் காலம்காலமாக காடுகளில் வாழ்கிறார்கள். இதில் பழங்குடிகளின் வரலாறு என்பது சுமார் 3,000  - 4,000 பழமை வாய்ந்தது.

காடுகளை பாதுகாப்பது, காடுகளுடன் இணைந்து வாழ்வதும்தான் மலைவாழ் மக்களோட முக்கியமான வேலை. காடு இல்லை என்றால் அவர்கள் இல்லை, அவர்கள் இல்லை என்றால் காடுகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை வனத்துறையே இங்கு தவறுதான். மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு  ஆங்கிலேயர்கள் உருவாக்கியதுதான் இந்த வனத்துறை.

 

இவர்கள் கொண்டுவந்த அனைத்து வனச் சட்டங்களும் வனங்களை அழிப்பதற்காக கொண்டு வந்தது. காட்டை அழிப்பதற்கு  பெரும் தடையாய் அங்குள்ள பழங்குடி மக்களும், மலைவாழ் மக்களும் இருந்தார்கள். அதனால் காட்டை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் காட்டிலுள்ள எல்லா மக்களையும் ஆங்கிரமிப்பாளர்கள் என்று  கூறிவிட்டனர்.

நான் நீலகிரி மாவட்டத்தில் இருக்கிறேன். ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு இங்கு கிட்டதட்ட ஒரு நாளைக்கு 112 லாரி லோடு மரங்கள்  வனத்துறையின் அனுமதியோடு எடுத்து செல்லப்பட்டன. இவை எல்லா அங்குள்ள பழங்குடி வீடுகளுக்கு செல்லவில்லை.

அவர்கள் விறகு விற்று வாழ்ந்தார்கள், பெரிய முதலாளிகள் காடுகளை அழித்துவிட்டு பழியை மக்கள் மீது போட்டு விடுகிறார்கள். இதில் சுற்றுச் சூழலை பேசுவர்களும் உண்மையாக அந்த அக்கரையில் பேசுவதில்லை. தன்னை பெரும் சூழியல் ஆர்வலராக காட்டிக் கொள்வதிலேயே அவர்கள் உள்ளனர். இவர்கள் காடுகளை அழிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக பெரும்பாலும் பேசுவதில்லை.

வனங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தனியாக சட்டம் வேண்டும் என்று போராடி பெற்றதுதான் இந்த வன உரிமைச் சட்டம் 2006 வந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தன்னார்வ அமைப்புகளும், சிங்கம்பட்டி ஜமீன்தாரும் அப்போது வழங்கு தொடர்ந்தனர். இருப்பினும் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

தற்போதுள்ள அரசின் முக்கிய நோக்கம், எல்லா மலைகளையும் எடுத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதுதான். இதற்கு வன உரிமைச் சட்டம் தடையாக உள்ளது. இம்மக்களின் அனுமதி இல்லாமல் நீங்கள் நிலத்தைப் பெற முடியாது. எனவே அரசு தரப்பில் இதற்கு யாரும் ஆஜராகவில்லை, நீதிபதிகளும் அளித்த அறிக்கை அடிப்படையில் பட்டா இல்லாதவர்கள் வெளியேறச் சொல்லிவிட்டனர்.

இது முழுக்க முழுக்க மனித உரிமை மீறல். இந்தச் சட்டமே அங்குள்ள மக்களின் உரிமைகளை பாதுகாக்க வந்தது. ஆனால் இந்தச் சட்டத்தை பயன்படுத்தியே அந்த மக்களை திரும்பி அடித்திருக்கிறார்கள். இதை சதி என்றுதான் கூற வேண்டும். கிட்டதட்ட 11 லட்ச பேரை வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு உண்மையாக மக்கள் மீது நலன் கொண்டு இருந்தால் அவரவர்கள் வாழும் பகுதி அவர்கள் கட்டுபாட்டின் கீழ் வரவேண்டும் என்பது வன உரிமைகள் சட்டம் கூறுகிறது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும். வெளியேற்றப்படும் மக்கள் எங்கு செல்வார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி, அவர்கள் உள் நாட்டிலேயே அகதிகளாக இருக்க வேண்டியதுதான்.

இந்த மாதிரியான உத்தரவு இந்திய வரலாற்றில் எங்குமே வரவில்லை. இன்றைய ஆளக்கூடிய அரசு பழங்குடி மக்கள் மீது இதன் மூலம் பெரும் தாக்குதலை ஏற்படுத்தி உள்ளனர்.

 

எந்தப் பழங்குடியும் காடுகளை அழித்ததாக வரலாறே கிடையாது: வெற்றிச் செல்வன் (வழக்கறிஞர், சூழியல் ஆர்வலர்)

ஆங்கிலேயர் காலத்திலிருந்து வன உரிமைச் சட்டங்கள் நிறைய கொண்டு வரப்பட்டு விட்டன. அந்தச் சட்டங்கள் வனங்களை பாதுகாத்ததோ இல்லையோ, அந்த சட்டங்களின் மூலம் பழங்குடிகளின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. பழங்குடிகள் வேட்டையாடக் கூடாது. பழங்குடிகள் விவசாயம் பண்ணக் கூடாது. இறுதியில் பழங்குடிகள் வனத்தில் வசிக்கவும் உரிமை இல்லை என்று கொண்டு வந்துவிட்டார்கள். 

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு, வனங்களைப் பற்றி நன்கு தெரிந்த பழங்குடிகளை பயன்படுத்தித்தான் வனங்களில் பணப்பயிர்களையும் விவசாயம் செய்வதை கற்றுக் கொணடது அரசு, பின்னர் அவர்களை வேறு இடத்திற்கு அனுப்பிவிடுவார்கள். இது தற்போதும் நீடிக்கிறது.

நீண்ட நாட்களாக பழங்குடி மக்களுக்கு  உரிமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அடுத்து இந்த வன உரிமைச் சட்டம் 2006 அமலுக்கு வந்தது.

 

 

இந்த வன உரிமைச் சட்டத்தில் இரண்டு பிரிவு இருக்கிறது. ஒன்று பழங்குடியினர் (Scheduled Tribes)  மற்றொன்று 3 தலைமுறைகளுக்கு மேலாக வனத்தில் வசிப்பவர்கள் (Traditional Forest Dwellers) (இவர்கள் விவசாயம் செய்வதற்காக காட்டுக்குள் சென்றவர்கள்) பழங்குடிகள் கிடையாது.

இந்த இருவருக்கும் வனத்தில் உரிமை உள்ளது என்பதைத்தான் வன உரிமைச் சட்டம் கூறுகிறது. 

அதாவது இந்த இரண்டு பிரிவினரும் வனத்தில் தங்கிய இடங்களை பட்டா போட்டு அளிக்க வேண்டும் என்பதுதான் இந்த சட்டம். இந்தச் சட்டம் வந்தபோது இதை எதிர்த்து நிறைய தன்னார்வ அமைப்புகள் வந்தன. 

அதில் ஒன்றுதான் வைல்ட்லைப் ஃபஸ்ட், இவர்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் காடே அழிக்கப்படும்  எனவே வனத்தில் விலங்குகள் மட்டும்தான் இருக்க வேண்டும். மனிதர்கள் இருக்கக் கூடாது என்று வாதம் செய்தனர்.

ஆனால் பழங்குடிகள் தான் காட்டை பாதுகாக்கிறார்கள் என்று எதிர்தரப்பில் கூற, இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் அதன்படி பட்டா இல்லாதவர்களை வனங்களின் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.

அதன்படி தற்போது உச்ச நீதிமன்றம் பட்டா இல்லாதவர்கள் வனத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், வனங்களை பாதுக்காக்க அங்கிருக்கும் பழங்குடிகளை வெளியேற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. பழங்குடிகள்தான் காடுகளை பாதுகாக்கிறார்கள், அவர்களுக்குதான் அதற்கான மரபு அறிவு இருக்கிறது.

உண்மை கூறப் போனால் இதுவரை எந்தப் பழங்குடியும் காடுகளை அழித்ததாக வரலாறே கிடையாது. சில குற்றங்கள் அவர்கள் மீது இருந்தாலும் நாம் காட்டுக்குச் சென்று அவர்களை செய்ய வைத்திருப்போமே தவிர அந்த மக்கள் செய்யமாட்டார்கள். அவ்வாறு இருக்கையில் அவர்களை காடுகளிருந்து பிரிப்பது தவறு.

இன்னொன்று, முன்னேற்ற  நடவடிக்கைகள் என்ற பெயரில் காடுகளை அழிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க சின்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி மேற்கு தொடர்ச்சி மலையை  Eco Sensitive Zone என்று மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என்றும் இந்தப் பகுதிகளில் அரசு எந்தவித நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது என்று கூறியது.

ஆனால் மத்திய அரசு இதுவரை அந்த பரிந்துரையை அமல்படுத்தவில்லை.  இவ்வாறு வனங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க நீங்கள் தயாராக இல்லை. ஆனால் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், கோவா போன்ற பகுடிகளில் கனிமவளங்களை சுரண்டுவதற்கு நீங்கள் அனுமதித்து வனத்தை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் (2014 - 2019)  698  திட்டங்களுக்கு வனத்தில் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. 

எனவே பழங்குடிகளை வெளியேற்றுவது காடுகளை அழிப்பதை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்.

மேலும் எதன் அடிப்படையில் அவர்களது பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணம் பழங்குடி மக்களுக்கு தெரியவில்லை.  மனுக்களை நிராகரித்ததில்  நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆஷிஸ் கோத்தாரி உள்ளிட்ட சூழியல் அறிஞர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். 

நர்மதா அணை கட்டுமானம்போது, ஏராளமான பழங்குடிகள் பணம் கொடுத்து அவர்களது பூர்வீக பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பணத்தையே இதுவரை பயன்படுத்தாத மக்களுக்கு அதை வைத்து என்ன செய்வது என்றுகூட தெரியவில்லை. வெளியேவரும் மக்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு இயந்திர முறையில் இந்தச் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது. முடிந்தளவு சட்டத்தை  பழங்குடிகளிடம் முழுமையாக தெரியப்படுத்தி காடுகளிலேயே தங்க வைப்பதற்கான வேலைகளைத்தான் அரசு செய்ய வேண்டும்.

பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றுவது என்பதே தவறு: வி.போதி தேவவரம் ( இருளர் பழங்குடி மக்கள் அமைப்பின் அமைப்பாளர்)

முதலில் பழங்குடிகளை அவர்களது பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றுவது என்பதே தவறு. அவர்களை வனத்திலிருந்து வெளியேற்றவது தான் முன்னேற்றம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

முதலில் பழங்குடிகள் தங்கள் பழங்குடிகள்தான் என்பதை  அடையாளப்படுத்தும் சான்றிதழை பெறவே சிரமப்படுகிறார்கள். பழங்குடிகள் சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்று அரசு கூறுகிறது.

ஆனால் அந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அம்மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வனத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நகரத்தில் இருப்பவர்களும் இதைத்தான் அனுபவிக்கிறார்கள். எப்படி மீனவர்களுக்கு கடற்கரையோரம் அவர்களது பகுதியோ அதேபோல் பழங்குடிகளுக்கும் வனத்தில் உரிமை உண்டு.

தாங்கள் பழங்குடிகள் என்பதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டு சான்றிதழ்களைப் பெறுவதற்காக பல லட்ச பழங்குடிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை முதலில் அரசு கண்டறிந்து அவர்கள் பழங்குடிகள் என்று அங்கீகரிக்க வேண்டும். அங்கீகரித்தபின் தான் அவர்களை வனப்பகுதிகளிருந்து வெளியேற்றி மாற்று இடங்களுக்கு அனுப்புவதை பற்றி பேச வேண்டும்.

 

 

1985-ல் இதற்கு ஒரு சட்டமே இயற்றப்பட்டது. நீங்கள் மாற்று இடங்கள் அளிக்காமல் மக்களை வனங்களிலிருந்து வெளியேற்றக் கூடாது என்று, ஆனால் இவர்கள் பழங்குடிகள் வாழ்வதற்கு மோசமான இடங்களைதான் ஒதுக்குகின்றனர். பழங்குடிகள் சார்ந்த அமைச்சகம் அவர்களுக்கு உதவாமல் குடிசை மாற்று வாரியம் மூலம் அவர்களுக்கான இடத்தை ஒதுக்குகின்றன. இதில் அம்மக்கள் முதலிலிருந்து தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்  நாள் செல்ல செல்ல  அவர்கள் கலாச்சாரமே அழிந்துவிடுகிறது.

எனவே வனங்களில் மட்டுமல்லாமல், நிலப்பகுதிகளிலும்  பெருமளவில் பழங்குடியினர் வாழ்கின்றனர் இம்மக்களை பழங்குடியினர் என உடனே அரசுகள் அங்கீகரிக்க வேண்டும்.  அதற்கு ஆதாரமாக - பழங்குடியினருக்கான சாதிச் சான்றுகள் வழங்க வேண்டும். அனைவருக்கும் நில உரிமை - பட்டா வழங்கிட வேண்டும். அதற்கான உரிய சட்டம் இயற்றி பழங்குடி மக்களை பாதுகாத்திட வேண்டும்.” என்றார்.

அவசர ஆணை பிறப்பிக்க வேண்டும்: தில்லி பாபு (மலைவாழ் மக்கள்  சங்க மாநிலத் தலைவர்)

எக்காரணைத்தைக் கொண்டும் பல நூற்றாண்டுகளாக காடுகளில் வசித்து வரும் மக்களை வெளியேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.  மனுக்கள் எதன் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். இது மூடி மறைக்கப்பட்ட விஷயமாக உள்ளது. இந்த வழக்கின் மூன்று வாய்தாவிலும் அரசு தரப்பில் யாரும் ஆஜராகாதது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

மழைவாழ் மக்களை வெளியேற்ற உள்நோக்கத்துடன் இது நடத்தப்பட்டதா என்ற வலுவான சந்தேகம் உள்ளது. கிட்டத்தட்ட 11 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட உள்ளனர். இது அநீதி. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக வரும் தமிழ்நாடு மக்கள் மலைவாழ் சங்கம் மார்ச் 4 -ம் தேதி, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளது. இதில் உச்ச நீதிமன்றதுக்கு மத்திய அரசு சீராய்வு மனுவோ அல்லது கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கோ இந்த வழக்கை மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்க இருக்கிறோம். 'மலை வாழ் மக்களை வனத்திலிருந்து வெளியேற்றக் கூடாது என்ற அவசர ஆணையை  மத்திய அரசு விதிக்க வேண்டும்' என்றும் வலியுறுத்த உள்ளோம்.

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்