‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கியது உண்மைதான்’’ என்று விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி 3 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலா உட்பட 3 பேருக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்காக கோடிக்கணக்கில் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாகவும், அப்போதைய சிறைத்துறை டிஐஜி டி.ரூபா புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலைக் குழுவை கர்நாடக அரசு அமைத்தது. இக்குழுவினர் சிறையில் ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது அறிக்கையை கர்நாடக அரசிடம் சமர்ப்பித்தனர். அதை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டாலும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கர்நாடகா உத்தரவிட்டது.
இந்நிலையில், விசாரணை குழுவின் அறிக்கை ஊடகங்களில் தற்போது கசிந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சிறையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்காக பெங்களூரு சிறை உயரதிகாரிகள் பல விதிமுறைகளை மீறியுள்ளனர், பொய்யான ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். அரசு அல்லது நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான புகாரில், சசிகலாவுக்கு எந்த ‘ஏ கிளாஸ்’ சலுகைகளும் வழங்க உத்தரவிடவில்லை என்று நீதிமன்றமும் தெளிவுப்படுத்திவிட்டது. அதன்பிறகும் சிறை உயரதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சசிகலாவுக்கு வழங்கிய சலுகைகளை திரும்பப் பெறவில்லை. சிறையில் சசிகலா, இளவரசியின் பயன்பாட்டுக்காக 5 அறைகள் (செல்) ஒதுக்கப்பட்டிருந்ததாக டிஐஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து அப்போதைய சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயணா மற்றும் சிறை உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சசிகலா அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகருகில் இருந்த 4 அறைகள் வேறு யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இந்த விவரம் சிறை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கிறது. 5 அறைகளையும் சசிகலா, இளவரசி மட்டுமே பயன்படுத்தி உள்ளனர்.
சசிகலா பயன்படுத்திய சிறை அறைகளில் திரைச் சீலைகள் போடப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரித்த போது, பூனைகள் அறைக்குள் வருவதைத் தடுக்க திரைச் சீலைகள் வழங்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
சிறையில் பெண்களுக்காக 28 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு அறையில் 4 பெண்கள் அடைக்கப்பட வேண்டும். ஆனால், சிறை விதிமுறைகளை மீறி சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் 5 அறைகள் ஒதுக்கப்பட்டதால், 23 அறைகளில் அளவுக்கதிகமாக பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலா அடைக்கப்பட்டிருந்த அறையில் பிரஷர் குக்கர் உட்பட தனி சமையல் அறை ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறி அதற்கான புகைப்படங்களையும் டிஐஜி ரூபா அளித்திருந்தார். இதுகுறித்து விசாரித்த போது, சசிகலா அறையில் சமையல் எதுவும் நடக்கவில்லை. சிறை உணவுகளை சேமித்து வைக்கவே அங்கு குக்கர் வைக்கப்பட்டிருந்ததாக சிறை கண்காணிப்பாளரும் அதிகாரிகளும் கூறினர். ஆனால் சசிகலா அறையில் சமையல் செய்வதற்குதான் குக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்த அலமாரி காலியாக இருந்தது. ஆனால், எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர், அலமாரியில் கையை வைத்து சோதித்த போது, சந்தேகத்துக்கு இடமில்லாமல் சமையல் மஞ்சள் பொடி கொட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சசிகலாவும் இளவரசியும் சாதாரண உடைகளில் பைகளுடன் வெளியில் இருந்து சிறைக்குள் வரும் வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தினோம். அப்போது, பார்வையாளர்களைச் சந்திக்க இருவரும் சென்று வந்ததாக சிறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறைக்குள் இருந்து அவர்கள் சென்ற நேரமும், திரும்பி வரும் நேரமும் ஒத்துப்போகவில்லை. விதிமீறலில் இருந்து தப்பிக்க, சிறை ஆவணங்களில் தவறான தகவல்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாகவே இதை கருதமுடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago