சாரதா நிதி நிறுவன மோசடி: நளினி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை

By பிடிஐ



சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

சென்னையில் சனிக்கிழமை மாலை நளினி சிதம்பரம் விசாரிக்கப்பட்டதாக, சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது சிறையில் உள்ள சாரதா நிதி நிறுவன தலைவர் சுதிப்த சென் அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நளினி சிதம்பரத்தை சிபிஐ விசாரித்திருப்பதாக தெரிகிறது.

மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவனத்தை சுதீப்த சென் 2006-ல் தொடங்கினார். முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று மக்களிடம் கூறி, கிட்டத்தட்ட ரூ. 6,000 கோடியைத் திரட்டியது அந்நிறுவனம்.

சுற்றுலாப் போக்குவரத்து, ஹோட்டல் தொழில், திரைப்படத் துறையில் முதலீடு, தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள், ரியல் எஸ்டேட் வியாபாரம், மோட்டார் சைக்கிள் உற்பத்தி, அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு என்று சாரதா பிரம்மாண்டம் காட்டியது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான சதாப்தி ராய், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, குனால் கோஷ் போன்றோர் அதன் 'பிராண்ட் அம்பாசடர்'களாகச் செயல்பட்டார்கள். இவையெல்லாம் மக்களை இந்த நிறுவனத்தின்பால் மேலும் மேலும் ஈர்த்தன.

இந்திய முதலீட்டுச் சட்டப்படி, 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து முதலீடு திரட்ட 'செபி' அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். 2009-ல் 'செபி' நோட்டீஸ் அனுப்பியதும், புதிதாக 200 நிறுவனங்களை உருவாக்கி, முதலீட்டாளர்களை அவற்றில் பிரித்துப் பதிவு செய்து, 'செபி'யின் முயற்சியை முறியடித்தது அந்நிறுவனம். முதலீட்டாளர்களுக்கு வட்டியும் அசலும் தரப்படவில்லை. ஒருநாள் விஷயம் வெடித்து முறைகேடு வெளியே வந்தது.

சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டபோது, மேற்கு வங்கக் காவல் துறை விசாரித்தால் போதும் என்ற முதல்வர் மம்தா பானர்ஜி, நீதிபதி சியாமள சென் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தார். ஊழலை வெளிக்கொணர்வதைவிட, மறைக்கவே மாநில அரசு முயல்கிறது என்று முதலீட்டாளர்கள் சந்தேகப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தின் உதவி நாடப்பட்டது. அதையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சாரதாவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டியுள்ளனர். அவர்களில் 83% பேர் ரூ.10,000-க்கும் குறைவாகச் செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நளினி சிதம்பரம்...

சாரதா நிதி நிறுவனத் தலைவர் சுதிப்த சென், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் விவகாரம் தொடர்பாக சிபிஐ-க்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள் பலர் தன்னிடம் இருந்து மிரட்டி பணத்தைப் பறித்துக் கொண்டு, பிரச்னைகள் ஏற்பட்டால் என்னைக் காப்பதாக உறுதியளித்தனர்' என்று தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு டிவி சேனலை கையக்கப்படுத்தும் ஒப்பந்தத்தில் நளினி சிதம்பரம் சட்ட ஆலோசகராக பங்கு வகித்ததாகவும், அதற்காக அவருக்கு ரூ.1 கோடியை கட்டணமாக செலுத்தியதாகவும் அந்தக் கடிதத்தில் சுகிப்த சென் குறிப்பிட்டுள்ளதுதான் சிபிஐ-யின் விசாரிப்புக்கு காரணம்.

சிபிஐ விசாரணை குறித்து கருத்து கேட்க, பிடிஐ செய்தி நிறுவனம் அவரைத் தொடர்புகொண்டபோது, அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

அதேவேளையில், ஓர் ஆண்டு முழுவதும் சட்ட உதவிகள் செய்ததற்கு ரூ.1 கோடி கட்டணமாக பெறப்பட்டது என்றும், அது வெளிப்படையான விஷயம் என்றும் நளினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்