செப்டம்பர்
அஞ்சல் வங்கி (செப்.1)
இந்திய அஞ்சல் துறையின் `போஸ்ட் பேமென்ட் வங்கி’ பிரதமர் மோடி தொடங்கப்பட்டு, நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. அஞ்சல் துறைக்கு நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள 1,30,000 சேவை மையங்களை வங்கிச் சேவைகளை அளிக்கும் மையமாக மாற்றப்பட்டன. இதற்காக அஞ்சல் துறையில் உள்ள 3 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பயோமெட்ரிக் கருவிகள், கையடக்கக் கருவிகள் வழங்கப்பட்டன.
வரலாற்றுத் தீர்ப்பு(செப். 6)
தன்பாலின உறவு சட்டவிரோதமல்ல என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வழங்கியது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர் உடல் ரீதியான உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ல் கூறப்பட்டு இருந்தது. இதை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
பெரும்விபத்து (செப்-11)
தெலங்கானா மாநிலம், ஜகித்யாலா மாவட்டத்தில் கொண்டகட்டு மலைப்பகுதில் பஸ் உருண்டு விபத்துக்குள்ளானதில் 60 பேர் பலியானார்கள்.
சாதனை திட்டம் (செப். 25)
தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தொடங்கி வைத்தார். தமிழகம் உட்பட 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. புதிய திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு கிடைக்கும். நாடு முழுவதும் 50 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் பெறுவார்கள் என அரசு தெரிவித்தது.
முக்கியத் தீர்ப்புகள் (செப். 26)
உச்ச நீதிமன்றம் ஒரேநாளில் இரு முக்கியத் தீர்ப்புகளை வழங்கியது. ஒன்று ஆதார் குறித்த வழக்கு, மற்றொன்று வழக்கின் விசாரணையைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யலாமா என்பதாகும்,
ஆதார்
அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெற்றனர்.
நேரடி ஒளிபரப்பு
பெரும்பாலான பொதுமக்களின் நலன் கருதி நீதிமன்ற வழக்குகள் மீதான விசாரணை நடவடிக்கைகளைத் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், சட்டக் கல்லூரி மாணவர் ஸ்வப்னில் திரிபாதி மற்றும் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், பொதுமக்கள் வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளும் வகையில், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
பெண்களுக்கு அனுமதி (செப். 28)
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கு அனுமதியில்லை. பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதிமுதல் 8 நாட்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பளித்தனர்.
அக்டோபர் மாதம்
தேர்தல் தேதி (அக். 6)
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் அறிவித்தார்.
வலுத்த மீ டூ (அக். 11)
mjakbarmetoo100jpeg100
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராகப் பெண் பத்திரிகையாளர்கள் சிலர் #மீ டூ பிரச்சாரம் மூலம் சமூக வலைதளங்களில் புகார்கள் தெரிவித்தனர். நாளடைவில் புகார்கள் தரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும், அக்பர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் (அக்.13)
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் எர்ணாகுளம், கொச்சியில் போராட்டம் நடந்தது. மாநிலம் முழுவதும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது.
ராஜினாமா (அக்.17)
#MeToo மூலம் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் எழுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பிரியா ரமணி, அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ப்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப் உள்ளிட்ட பலர் புகார் தெரிவித்தனர்.
ரயில் விபத்து (அக். 19)
train-accidentjpg100
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் ராவண வதம் நிகழ்ச்சியை ரயில் தண்டவாளத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய ரயில்வே துறை ரயில் பைலட் மீது எந்த தவறும் இல்லை என அறிவித்தது.
பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு (அக். 23)
நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் விற்பனைக்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்த நீதிமன்றம், திருவிழாக்கள், திருமணங்களில் ரசாயனப் பொடி தூவிய பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும். இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். புத்தாண்டு, கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவு 11.55 முதல் 12.30 வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிட்டது.
சிபிஐ பனிப்போர் (அக்.24)
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையேயான பனிப்போர் ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டது. இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு நள்ளிரவு உத்தரவு பிறப்பித்தது.
தீபாவளிக்கு அனுமதி (அக்.31)
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அதிகாலையில் 4 மணியில் இருந்து 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் என மொத்தம் 2 மணி நேரங்கள் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இரும்பு மனிதர் சிலை (அக்.31)
Sardar-Patelstatuejpeg100
இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்ட வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் மிக உயரமான சிலை அமைக்கப்பட்டது. நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்தச் சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, சீனாவின் புத்தர் சிலையை விடவும் உயரமானது. இந்தச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நவம்பர் மாதம்
உ.பி.யின் ஜாலியன் வாலாபாக் (நவம்பர். 4)
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஹஷிம்புராவில் 1987-ம் ஆண்டு 38 முஸ்லிம்களைக் கடத்திச் சென்று சுட்டுவீழ்த்தி படுபாதகக் கொலைகளைச் செய்த உத்தரப் பிரதேச ஆயுதப்படையை (PAC) சேர்ந்த 16 முன்னாள் வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது
மறுப்பு (நவம்பர். 14)
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்தது
ராக்கெட் பாய்ந்தது (நவ.15)
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண் வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்3- டி2 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
திருப்தி தேசாய் (நவ.16)
சபரிமலை செல்வதற்காக வந்த பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தைவிட்டு வெளியே வரமுடியாமல் ‘நாம ஜெப’ போராட்டத்தை இந்து அமைப்புகளும், பாஜகவினரும், மக்களும் நடத்தினர். இதனால் வேறு வழியின்றி மீண்டும் அவர் புனேவுக்கு திரும்பிச் சென்றார்.
திரும்பிப் பார்க்கவைத்த சென்டினல் பழங்குடி (நவ.21)
அந்தமானில் பூர்வீகப் பழங்குடிகளான சென்டினல் பழங்குடி மக்கள் வசிக்கும் நார்த் சென்டினல் தீவுக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட அமெரிக்கர் ஜானை பழங்குடி மக்கள் அம்பு எய்திக் கொன்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கர் உடலை மீட்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோது, உலக அளவில் உள்ள மானுடவியலாளர்கள் சென்டினல் மக்களின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என எச்சரிக்கை விடுத்ததால், முயற்சி கைவிடப்பட்டது.
கால்வாயில் பாய்ந்த பஸ் (நவ.24)
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், கனகமாரடி கிராமத்தில் காவிரி நீர் பாயும் வி.சி.கால்வாய் உள்ளது. தனியார் பஸ் ஒன்று பாண்டவபுரத்தில் இருந்து மாண்டியா சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் 30 பேர் பலியானார்கள்
ராமருக்கு சிலை (நவ. 25)
அயோத்தியில் ராமருக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்று விஎச்பி, சிவசேனா, இந்து அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை வலுப்படுத்தும் விதமாக ராமருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கும் விவரங்களை உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டது. 221 அடி உயர ராமர் சிலை அயோத்தியில் அமைப்பது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஎச்பி சார்பில் தர்ம சபா கூட்டமும் நடந்தது.
தேர்தல் வாக்குப்பதிவு (நவ. 28)
சத்தீஸ்கர் , மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்துக்கு ஒரே கட்டமாகவும் நடந்தது.
31 செயற்கைக்கோள் (நவ. 29)
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் 8 நாடுகளுக்குச் சொந்தமான 31 செயற்கைக்கோள் மற்றும் இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோளைச் சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
உலுக்கிய விவசாயிகள் பேரணி (நவ. 30)
farmers-rally-2jpg100
பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணி நடத்தினர். பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தினர்.
டிசம்பர் மாதம்:
ட்ரெயின்-18 (டிச.2)
இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன் மாதிரியாகக் கருதப்படும் இன்ஜின் இல்லாத ‘ட்ரெயின் 18’ ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக இயக்கிச் சோதிக்கப்பட்டது. இந்தியாவில் அதிவேக ரயில்கள் உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாகச் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரக ரயில் உருவாக்கப்பட்டது
புதிய தேர்தல் ஆணையர் (டிச.3)
இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா (62) பொறுப்பேற்றார். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஓ.பி. ராவத் ஓய்வு பெற்றதை அடுத்து, அப்பதவிக்கு சுனில் அரோரா நியமிக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, மகாராஷ்டிரா, ஹரியாணா, ஆந்திரா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள முக்கிய மான தருணத்தில், இவர் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
தேர்தல் வாக்குப்பதிவு (டிச. 7)
five-states-cmsjpg100
ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகளும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் 72.87 சதவீத வாக்குகளும் பதிவாகின.
புதிய ரிசர்வ் வங்கி ஆளுநர் (டிச.11)
ரிசர்வ வங்கியின் புதிய கவர்னராக முன்னாள் பொருளாதார விவாகரத்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். நாட்டை உலுக்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் இருந்த முக்கிய அதிகாரி சக்திகாந்த தாஸ் என்று அறியப்பட்டவர். ஏற்கெனவே 2016-ம் ஆண்டு செப்டம்பரில் ரகுராம்ராஜன் ஓய்வு நேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக அடுத்துப் பரிசீலிக்கப்பட்ட பெயர்களில் உர்ஜித் பட்டேலுடன் சக்தி காந்ததாஸின் பெயரும் ஒன்று. ஆனால் அந்த நேரத்தில் அவர் பெயர் பரிசீலிக்கப்படாமல் உர்ஜித் படேல் தேர்வு செய்யப்பட்டார்.
பாஜகவுக்கு இழப்பு (டிச.7)
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகின. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் அரியணை ஏறியது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து, டிஎம்பி கட்சி ஆட்சி அமைத்தது.
நாடு கடத்த உத்தரவு
Mallyacasjpg100
வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர்.
புதிய ஆட்சி
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியாகின. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. தெலங்கானாவில் 2-வது முறையாக டிஆர்எஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. மிஸோரமில் மிஸோ தேசிய முன்னணி வெற்றி பெற்றது.
நீளமான ரயில் பாலம்
bogi-beegaljpg100
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அசாம் போகிபீல் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 32 கி.மீ செல்லும் இந்தப் பாலம் 4.94 கிலோ மீட்டர் கொண்டது. போகிபீல் பாலம், மூன்று வழி சாலையாகவும், கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் பாதையுடன் அமைக்கப்பட்டது. இந்தப் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
முற்றும்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago