சபரிமலைக்கு அடுத்த முறை யாருக்கும் சொல்லாமல், கொரில்லா தந்திரங்களுடன் வருவேன் என்று பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் ஆவேசமாகத் தெரிவித்தார்.
சபரிமலையில் சென்று தரிசனம் செய்ய முயலும் பெண்களுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை என்றும் கொச்சி விமானநிலையத்தில் கும்பல் வன்முறைக்கூட்டம் இருந்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதில் உள்ள பெண்களும் செல்லலாம் என்று அனுமதித்துக் கடந்த என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.
இந்தநிலையில், பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் நேற்று அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியே வரவிடாமல், பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள், இதனால், பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதனால், சுமார் 14 மணிநேரமாகத் திருப்தி தேசாய் வெளியே வர முடியாமல் விமான நிலையத்திலேயே முடங்கினார். நேரம் செல்ல செல்லப் போராட்டக்காரர்கள் எண்ணிக்கை கூடியதால், பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
இதையடுத்து, கேரள மாநில அரசு அதிகாரிகளும், போலீஸாரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை எடுத்துக் கூறி திருப்தி தேசாயுடன் பேச்சு நடத்தினர். இரவு கடைசி விமானத்தை விட்டு விட்டால் மீண்டும் புனேவுக்கு செல்ல முடியாமல் இங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்படும் எனத் திருப்தி தேசாயை எச்சரித்தனர். அவர் புனே திரும்பிச் செல்வதாக ஒப்புக் கொண்டார்.
புனே விமான நிலையத்தில் இறங்கியவுடன் திருப்தி தேசாய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாங்கள் கொச்சி விமானநிலையத்தை அடைந்தவுடன் போராட்டக்காரர்கள் தகாத வார்த்தைகளால் பேசி, எங்களை திரும்பிப் போகக்கூறி மிரட்டல் விடுத்தனர். எதுவேண்டுமானாலும் நடக்கலாம் எனக்கூறி போலீஸாரும் எங்களைத் திரும்பிச்செல்ல கேட்டுக்கொண்டனர். எங்களால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அதனால், நாங்கள் திரும்பிச் செல்ல முடிவு செய்தோம். அடுத்த முறை நாங்கள் வரும்போது உரிய பாதுகாப்புகளை செய்து தருகிறோம் என்று போலீஸார் எங்களிடம் தெரிவித்தனர். இந்த முறை நாங்கள் தகவல் தெரிவித்து விட்டு சபரிமலைக்குச் செல்ல முயன்றோம். ஆனால், அடுத்த முறை கொரில்லா தந்திரங்களுடன், சொல்லாமல் சபரிமலைக்குச் செல்வோம்
கொச்சி விமானநிலையத்தில் இருந்து சபரிமலைக்கு எங்களை அழைத்துச் செல்ல இரு டாக்சிகள் வந்திருந்தன. ஆனால், போராட்டக்கார்கள் டாக்சி டிரைவர்களுக்கு மிரட்டல் விடுத்து திரும்பிச் செல்ல வைத்தனர். இதனால், கார் டிரைவர்கள் எங்களை அழைத்துச்செல்ல முடியாது எனத் தெரிவித்தனர்.
சபரிமலைக்குத் தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கேரள அரசும், போலீஸாரும் தவறிவிட்டனர். கொச்சி விமானநிலையத்தில் ரவுடிகளின் செயல்பாடுகளைக் காண முடிந்தது.
போராட்டக்காரர்கள் ரவுடித்தனமாகவும், வன்முறை சிந்தனையுடனும் நடந்து கொண்டனர், அவர்கள் அவ்வாறு நடந்திருக்கக் கூடாது. ஐயப்ப பக்தர்கள் என்று கூறிக்கொண்டு அவர்கள் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை அவர்கள் பக்தர்கள் இல்லை. மோசமான வார்த்தைகளால் திட்டி, எங்களை மிரட்டினார்கள்.
எங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமென்றால், போராட்டக்காரர்கள் நிலக்கல்லில் தெரிவிக்கலாம். ஆனால், நிலக்கல்லுக்கு வந்துவிட்டால், சாமி தரிசனம் செய்துவிடுவோம் என அச்சப்பட்டு எங்களை விமானநிலையத்திலேயே தடுத்துவிட்டனர்.
இவ்வாறு திருப்தி தேசாய் தெரிவித்தார்.
இதற்கிடையே புனே விமானநிலையத்தில் திருப்தி தேசாய் வந்து இறங்கியுடன் அவரை வெளியே வரவிடாமல் போராட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், திருப்திதேசாய் சபரிமலைக்கு செல்ல வேண்டுமென்றால், 50 வயது முடிந்தபின் செல்லட்டும், இப்போது செல்லக்கூடாது என்று தெரிவித்தனர்
கொச்சி விமான நிலையத்தைப் போலவே, புனேயில் உள்ள திருப்தி தேசாய் வீட்டின் முன்பு ஐயப்ப சேவா சங்கத்தினர், மலையாள சமாஜத்தினர் திரண்டு அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago