ஒடிஷாவை அச்சுறுத்தும் ‘தித்லி புயல்: உஷார் நிலை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ‘தித்லி’புயல் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒடிஷாவில் 5 மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்க கடலில் நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இது புயலாக மாறி, வரும் 11-ம் தேதி, ஆந்திரா- ஒடிஷா மாநிலங்களில் கரையோர பகுதியில் கரையை கடக்கும் என புவனேஷ்வரில் உள்ள மத்திய வானிலை மையம் எச்சரித்தது. இந்த புயலுக்கு ‘தித்லி என பெயரிடப் பட்டுள்ளது. இப்புயல், வடக்கு மற்றும் வட மேற்கு பகுதியில், மணிக்கு சுமார் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்தது.

நேற்று மாலை இப்புயல் ஒடிஷாவின் கோபால்பூருக்கு 560 கி.மீ தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இதனால், இந்த இரு மாநிலத்திலும் மீன் பிடிக்க யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். கடலோர ஆந்திரா மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

இந்தநிலையில் இந்த ‘தித்லி’ புயல் மேலும் நகர்ந்து ஓடிஷா கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவின் கலிங்கப் பட்டினம் - ஒடிஷாவின் கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என தெரிகிறது. இதனால் ஒடிஷா கடலோர பகுதிகளில் பலத்த மலை பெய்து வருகிறது.

கஞ்சம், கஜபதி, பூரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒடிஷாவில் 879 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 300 அவசர படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விடுமுறையில் சென்ற அரசு ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்பு மாறு ஒடிஷா அரசு உத்தர விட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே மணல் சிற்பகலைஞர் சுதர்சன் பட்நாயக் புயல் எச்சரிக்கையை உணர்த்தும் விதமாக மணல் சிற்பம் வடித்துள்ளார்.

புயலை எண்ணி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், மன உறுதியுடன் எதிர்கொள்வோம் எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE