சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு நேற்று பெண்கள் வந்ததால் நிலக்கல் பகுதி போராட்ட களமாக மாறியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
தமிழகத்தின் குமுளி, கேரளாவின் பத்தனம்திட்டா மார்க்கமாக சபரிமலைக்கு வருபவர்களின் நுழைவு வாயிலாக எலவங்கல் உள்ளது. அங்கு கேரள மாநில பாஜக நிர்வாகி, ரேணு சுரேஷ் தலைமையில் திரண்டிருந்த பெண்கள் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். அதில் இளம் வயது பெண்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வாகனத்தை அனுமதித்தனர்.
நிலக்கலில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கூடி நின்று ‘சரண கோஷம்’ எழுப்பினர். அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சபரிமலை கோயிலுக்கு செல்லக் கூடும் என சந்தேகித்தவர்களை நிலக்கலுக்கும் முந்தைய நிறுத்தமான எலவங்கலில் இந்து அமைப்புகள் தடுத்து நிறுத்த, பம்பைக்கு போய் போராட்டம் நடத்தக்கூடும் என நிலக்கலில் இந்து அமைப்புகளுக்கு முட்டுக்கட்டை போட்டு முறுக்கிக் கொண்டு நின்றது காவல் துறை.
நிலக்கலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், சபரிமலையின் பாரம்பரியத்தை காக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில செயல் தலைவர் கே.சுதாகரன் தலைமை வகித்தார்.
காவல் துறை, அரசியல் மட்டத்தில் இப்படியான காட்சிகள் கண்டாலும் சபரிமலையில் வழக்கம் போல மாதாந்திர நடை திறப்பை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டிக்கொண்டு கூட்டம், கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். அதில் பத்து வயதுக்கு குறைவாகவும், ஐம்பது வயதை கடந்த பெண்களுமாகவே அதிகளவில் இருந்தனர். இளம் தலைமுறை பெண்கள் யாரும் வரவில்லை.
திருவண்ணாமலை மாவட்டம் கல்பட்டு பகுதியில் இருந்து இருமுடி கட்டி வந்திருந்த பூங்காவனம், செந்தாமரை, கஸ்தூரி ஆகியோரிடம் பேசிய போது, “நீதிமன்றம் ஆயிரம் சொல்லட்டும் தம்பி. இந்த கோயிலுக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு. நான் விரதம் இருந்து, இத்தனை வருசம் காத்திருந்துதான் வந்துருக்கேன். இப்ப இளம் பொண்ணுங்க வந்துட்டா இந்த ஐயப்பனுக்கு என்ன மரியாதை? இவரு இப்படி இருக்கறதுனாலதான நாங்க கட்டுகட்டி வர்றோம். இளம் பெண்கள் வரக் கூடாது தம்பி” என்கிறார்.
கேரளாவில் கோரத் தாண்டவம் ஆடிய பெருமழை, வெள்ளத்தால் பம்பை நதியின் பக்க சுவர்களும், அதை ஒட்டி இருந்த நவீன கட்டண கழிப்பிடங்களும், ஓட்டல்களும் உருக்குலைந்து போயுள்ளன. பம்பையின் புனரமைப்பு பணிகள் கடந்த செப்டம்பரில் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. நவம்பர் முதல் வாரத்தில் இந்தப் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பம்பை நதிக்கரையில் முதல் நாளான நேற்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குளித்தனர். அதிலும் பெண்கள் தரப்பில் குழந்தைகளும், முதியோர்களும் மட்டுமே இருந்ததைக் காண முடிந்தது. பம்பையைச் சுற்றி ஏராளமான பன்றிகள் சர்வ சாதாரணமாக உலா வந்ததும், அதுவும் அங்குள்ள விநாயகர் கோவில் வளாகத்திலேயே வலம் வந்ததும் பக்தர்களுக்கு சலிப்பைத் தந்தது.
பம்பையில் 24 பேர் கைது
பம்பையில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து, சபரிமலைக்கு செல்லும் வழியில் ஐயப்ப தர்ம சேனை உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சரண கோஷ போராட்டம் நடந்தது. இவர்கள் அங்கேயே அமர்ந்து, ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என விண்ணதிர கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
சபரிமலை தந்திரியாக இருந்த கண்டரரு மகேஸ்வரருவின் பேரன் ராகுல் ஈஸ்வர் ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதில் பங்கேற்ற ராகுல் ஈஸ்வரின் தாயார் மல்லிகா நம்பூதிரி, அவரதுபாட்டி தேவகி மகேஸ்வரரு கண்டரரு, பந்தளம் அரச குடும்பத்தினர்கள் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதே போராட்டத்தில் கலந்து கொண்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான பிரயார் கோபாலகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் பம்பை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.
தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள்
கேரள மாநிலம், சேர்தலாவைச் சேர்ந்த லிபி (30) சபரிமலையில் நடைதிறப்பு நாளில் தரிசனம் செய்வதற்காக மாலை அணிந்து வந்திருந்தார். இவர் பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் அவரை சூழ்ந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம்எழுப்பினர்.
அப்போது பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தில் 4 போலீஸார் மட்டுமே நின்றதால், ஐயப்ப பக்தர்களை சமாளிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து லிபியை பத்தனம்திட்டா காவல் நிலையத்துக்கு பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து சேர்த்தலாவுக்கே சென்ற லிபி, தன்னை பாதுகாப்பாக சபரிமலைக்கு அழைத்துச் செல்லாத கேரள அரசுக்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துவிட்டு சென்றார்.
இதேபோல ஆந்திராவை சேர்ந்த ஒரு குடும்பமும் சபரிமலைக்கு செல்ல வந்திருந்தனர். அதில் இளம் வயது பெண்ணான மாதவியை ஐயப்ப பக்தர்கள் பம்பையில் பார்த்து திருப்பி அனுப்பினர். மதியத்துக்கு மேல் இதுபோல பல சம்பவங்களும் நிகழத் தொடங்கின.
ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 22ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும்.
அதற்கு இடையே உள்ளே வரத் தயாராகும் இளம் வயது பெண்கள், தடுத்து நிறுத்தும் போராட்டக்காரர்கள் என சடு, குடு ஆட்டத்தால் சபரிமலை சர்ச்சை மலையாகியுள்ளது.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
நிலக்கலில் இருந்து பம்பையை நோக்கி செய்தி சேகரிப்பதற்காக பயணித்த சில பெண் பத்திரிகையாளர்களின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இதில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பூஜா பிரசன்னா, நியூஸ் மினிட் இணைய ஊடக செய்தியாளர் சரிதா, சி.என்.என். நியூஸ் ராதிகா ராமசாமி உள்ளிட்ட 7 பேர் தாக்குதலுக்கு உள்ளாயினர்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
16 hours ago